'தி கோட்' விஜய் போல படங்களில் நடிகர்களை டீ-ஏஜிங் மூலம் இளமையாக காட்டுவது எப்படி?

Prasanth Karthick

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (14:05 IST)

ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியான 'தி கோட்' (The Greatest of All Time - The GOAT) திரைப்படத்தின் டிரெய்லர் தான் இப்போதைய தமிழ் சினிமா ரசிகர்களின் பரவலான பேசுபொருளாக உள்ளது.

 

 

நடிகர் விஜய், நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

சுமார் 2 நிமிடம் 50 விநாடி கொண்ட இந்த டிரெய்லர், வெங்கட் பிரபுவுக்கே உரிய காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்ததாக உள்ளது. அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிகர் விஜய் தோன்றுகிறார்.

 

எல்லாவற்றையும் விட, ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் ஒரு காட்சி. அக்காட்சியில், நடிகர் விஜய் அரும்பு மீசையுடன், 22-23 வயது இளைஞர் தோற்றத்தில் வருகிறார்.

 

இந்தக் காட்சி, ‘டீ-ஏஜிங்’ (de-aging) எனும் தொழில்நுட்பத்தில் தயாரானது. இந்தக் காட்சி சமூக வலைளதங்களில் வைரலானதுடன், ரசிகர்களிடையே விவாதப் பொருளாகவும் ஆனது.

 

இது கிளப்பிய விவாதங்கள் குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, டிரெய்லரில் தோன்றும் நடிகர் விஜய்யின் இளைய தோற்றம் தங்கள் குழு பல முயற்சிகளுக்குப் பின் முடிவு செய்தது, என்றார்.

 

“முதலில் நாங்கள் செய்த விஜயின் ‘டீ-ஏஜிங்’ லுக் மிகவும் ஒல்லியாக இருப்பதாகச் சொன்னார்கள். அதனால், பெரிய சோதனைகள் செய்யாமல், அவரை ஓரளவுக்கு இளமையாகக் காட்டிவிட்டால் போதும் என்று முடிவெடுத்தோம். அதனால் முன்னர் செய்திருந்த தோற்றத்தை மீண்டும் சரிசெய்து, எல்லோருக்கும் பழக்கமான விஜய்யின் முகத்தைக் கொண்டுவந்தோம். அதனால் தான் டிரெய்லர் வெளியீடும் தாமதமானது,” என்று தெரிவித்தார்.

 

இதைத் தொடர்ந்து, இந்த ‘டீ-ஏஜிங்’ தொழில்நுட்பம் குறித்தும், அது எப்படிச் செய்யப்படுகிறது என்பது குறித்தும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

 

இதைத் தெரிந்துகொள்ள, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், விளம்பரப் படங்கள் ஆகியவற்றுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) சூப்பர்வைசராகப் பணியாற்றிவரும் தொழில்நுட்ப வல்லுநரான விஷால் டாம் ஃபிலிப்-இடம் பிபிசி தமிழ் பேசியது. இவர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட, ‘ஆடுஜீவிதம்: தி கோட் லைஃப்’ என்ற படத்திலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார்.

 

‘டீ-ஏஜிங்’ என்றால் என்ன?
 

இதற்கு பதிலளித்த விஷால் டாம் ஃபிலிப், "மிக எளிமையாகச் சொல்வதெனில், ஒருவர் தனது கடந்த காலத்தில் இளமையாக இருந்த தோற்றத்தை இப்போது அவர் நடிக்கும் படத்தில் மீட்டுருவாக்கம் செய்வதுதான்", என்கிறார்.

 

“நமக்கு வயதாகும் போது தோலில் சுருக்கங்கள் விழும், தோலில் உள்ள சிறுதுளைகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு கன்னங்கள் தளர்ந்துவிடும். தாடை சற்று இறங்கிவிடும். இவற்றையெல்லாம் சரி செய்து, அவர் இளமையில் எப்படி இருந்தாரோ, அந்தத் தோற்றத்தை மீட்டுருவாக்கம் செய்வதுதான் இந்தத் தொழில்நுட்பம்,” என்கிறார் அவர்.

 

இந்த முறையில், ஒரு மென்பொருளை வைத்து மேற்சொன்ன அத்தனை விஷயங்களும் மாற்றப்படுகிறது, என்கிறார் விஷால் டாம் ஃபிலிப்.

 

டீ-ஏஜிங் எப்படி செய்யப்படுகிறது?
 

டீ-ஏஜிங் தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கிக் கூறினார் விஷால் டாம்.

 

1) முதலில் ஒரு நடிகரின் முகம், உடல் அகியவை மிக நுணுக்கமாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இது photogrammetry அல்லது facial capture என்று அழைக்கப்படுகிறது.

 

2) அசைவுகள் அதிகமுள்ள காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை இருந்தால், மோஷன் காப்ச்சர் (motion capture) மூலம் குறிப்பிட்ட நடிகரின் உடல் அசைவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

 

3) பின்னர் அவரது இளம் வயது புகைப்படங்களை ‘ரெஃபரன்ஸ்’ ஆகப் பயன்படுத்தி அவரது முகத் தோற்றம், உடல் தோற்றம் ஆகியவை வடிவமைக்கப்படுகின்றன. பின்னர் அந்த நடிகரின் முக ஸ்கேனைப் பய்ன்படுத்தி இந்த இளம் தோற்றத்துக்கு முப்பரிமாண (3டி) வடிவம் கொடுக்கப்படுகிறது.

 

4) இறுதியாக அந்த நடிகரின் அசைவுகள், மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட இளம் வயது முப்பரிமாண முகத்தோற்றம் ஆகியவை ‘காம்போசிட்டிங் மென்பொருள்’ (Compositing software​) ஒன்றில் செலுத்தப்பட்டு அவை ஒன்றாக இணைக்கப்பட்டு, காட்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகின்றன.

 

டீ-ஏஜிங் செய்யப்படும் முறையில் என்ன வேறுபாடுகள்?
 

டீ-ஏஜிங் என்பது ஒரு உத்தி (technique) தானே தவிர இதுவே ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பம் அல்ல, என்கிறார் விஷால் டாம் ஃபிலிப்.

 

“எல்லா படங்களுக்கும், எல்லா காட்சிகளுக்கும் ஒரே வகையான டீ-ஏஜிங் உத்தியைப் பயன்படுத்த முடியாது. அந்தந்த படத்தின் தேவை, பட்ஜெட், இயக்குநரின் திட்டம், எந்தெந்தகாட்சிகளுக்கு என்ன மாதிரியான தோற்றம் தேவை, ஆகியவற்றைப் பொருத்தே டீ-ஏஜிங் செய்யப்படுகிறது,” என்கிறார் அவர்.

 

உதாரணமாக, அதிகம் அசைவுகள், ஆக்ஷன் இல்லாத காட்சிகளில் டீ-ஏஜிங் செய்ய வேண்டுமெனில், அந்த நடிகருடைய முகத்துக்கு மட்டும் டீ-ஏஜிங் செய்து, காம்போசிட்டிங் மென்பொருள் மூலம் அவரது உடலில் அதைப் பொருத்தலாம், இதனை ‘ஹெட் ரீப்ளெஸ்மெண்ட்’ என்று அழைப்பதாகச் சொல்கிறார் விஷால் டாம்.

 

அதுவே அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள், அசைவுகள் ஆகியவை உள்ள காட்சிகளுக்கு நடிகரின் முழு உடலையும் மோஷன் கேப்சர் செய்து மாற்ற வேண்டும் என்கிறார்.

 

“இன்னொரு முறையும் இருக்கிறது. அதில், அந்த நடிகருக்குப் பதில் ஒரு இன்னொரு இளம் ‘body double’-ஐப் பயன்படுத்திக் காட்சிகளைப் படமாக்கி, அவரது முகத்தில், எந்த நடிகரது டீ-ஏஜிங் செய்யப்பட்ட முகத்தை வேண்டுமெனிலும் ஒரு காம்போசிட்டிங் மென்பொருள் மூலம் பொருத்திக்கொள்ளலாம்,” என்கிறார் அவர்.

 

அதேபோல், அவ்வளவு வயதாகாத ஒரு நடிகரைக் கொஞ்சம் இளவயது தோற்றத்தில் காட்டுவது அவ்வளவு கடினமல்ல, அவரது இளம் வயது புகைப்படங்களை வைத்து முப்பரிமாண வடிவம் செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் விஷால் டாம். ஆனால் 70 வயதான ஒரு நடிகரை 40 வயதானவர் போலக் காட்டுவதற்கு அதற்கேற்ப தொழில்நுட்ப உழைப்பைச் செலுத்த வேண்டும் என்கிறார்.

 

ஒரு நடிகரின் முகத்தை மட்டும் டீ-ஏஜிங் செய்து மாற்றினால், அதில் அதிக நுணுக்கங்களைக் காட்ட முடியாது. அவரது முகத்தின் நுட்பமான மாற்றங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டுமெனில் முழு உடலையும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்கிறார் விஷால் டாம்.

 

டீ-ஏஜிங் ஒரு உத்திதான் என்பதால், இதனைச் செய்வதற்கென ஒரு குறிப்பிட்ட மென்பொருளோ, ஒரு குறிப்பிட்ட முறையோ இல்லை. வெவ்வேறு ஸ்டூடியோக்கள் வெவ்வேறு மென்பொருட்களைப் பயன்படுத்தி இதைச் செய்கின்றன என்கிறார் விஷால்.

 

உதாரணத்துக்கு, டீ-ஏஜிங் செய்யப்பட்ட முகத்துக்கு முப்பரிமாண வடிவம் கொடுப்பதற்குப் Autodesk Maya, Blender போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, என்கிறார் அவர்.

 

டீ-ஏஜிங் இதற்கு முன் பயன்படுத்தப்பட்டு உள்ளதா?
 

டீ-ஏஜிங் உத்தி, முழுமையாக இல்லாவிட்டாலும், நுட்பமான முறைகளில் திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் பல வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கிறது என்கிறார் விஷால் டாம்.

 

“சில படங்களிலும் விளம்பரங்களிலும், நடிகர்களின் முகச் சுருக்கங்களை மறையவைப்பது, முகத்தை வழவழப்பாகக் காட்டுவது ஆகியவற்றுக்கு அங்கங்கே இந்த உத்தி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது,” என்கிறார் அவர்.

 

ஆனால், கடந்த 5-6 வருடங்களில் இந்த உத்தி பிரபலமாகி வருகிறது, அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது என்கிறார் அவர்.

 

2019-இல் வெளியான வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினி மேன்’ (Gemini Man) என்ற அறிவியல் புனை கதை த்ரில்லர் படத்தில், வில் ஸ்மித்தையும் டீ-ஏஜிங் உத்தி மூலம் இளம் வயது தோற்றத்தில் காட்டியிருந்தனர். அது முழுமையாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் வடிவம், என்கிறார் விஷால் டாம்.

 

இந்த ஆண்டு வெளியான ‘கல்கி’ திரைப்படத்திலும் அஸ்வத்தாமன் வேடத்தில் வந்த அமிதாப் பச்சன் முகத்தை டீ-ஏஜிங் மூலம் இளமையாகக் காட்டியிருந்தனர்.

 

“இந்த உத்தியின் பயன்பாடு இன்னும் மேம்படும், பரவலாகும். எதிர்காலத்தில் இன்னும் அதிகமான படங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்படலாம்,” என்கிறார் விஷால் டாம் ஃபிலிப்.

 

டீ-ஏஜிங் உத்தி குறித்த கவலைகள்
 

ஹாலிவுட்டில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருக்கும் ‘ஹியர்’ (Here) என்ற திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகிறது. 67 வயதான அவர் இந்த திரைப்படத்தில் 20 வயதான ஒரு இளைஞரைப் போல ‘டீ-ஏஜ்’ செய்யப்பட்டிருக்கிறார்.

 

 

இதுவும் சர்வதேச திரைப்பட வட்டாரங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பி வருகிறது. இதுகுறித்த கட்டுரை ஒன்றில், பிபிசி-க்காக திரைப்படங்கள் குறித்து எழுதும் செய்தியாளர் நிக்கோலஸ் பார்பர், சில முக்கியமான கேள்விகளைப் பதிவுசெய்திருக்கிறார்.

 

“தலைச்சாயம், மேக்கப் ஆகியவற்றைப் போல் டீ-ஏஜிங் உத்தியும் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?” என்று அவர் அக்கட்டுரையில் கேள்வியெழுப்புகிறார்.

 

டாம் ஹேங்க்ஸ், ஒரு பேட்டியில், “செயற்கை நுண்ணறிவு அல்லது டீப்-ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் இப்போது யார் வேண்டுமானாலும் தங்களை எந்த வயது நபர் போலவும் மீட்டுருவாக்கம் செய்துகொள்ளலாம். நாளை நான் ஒரு பேருந்தில் அடிபட்டு மறையலாம். ஆனால் படப்பிடிப்பு நிற்காது. செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆழமான புரிதல் இல்லையென்றால், அது உண்மையில் நான் அல்ல என்று உங்களுக்கு யாரும் சொல்ல முடியாது,” என்றார்.

 

அக்கட்டுரையில், நிக்கோலஸ் பார்பர், ‘எதிர்வரும் காலத்தில், உண்மையான நடிகர்களுக்குப் பதில், அவர்களது செயற்கை நுண்ணறிவு பிம்பங்கள் நடிக்கலாம். ஆனால் தற்போதைக்கு, இளம் நடிகர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாத்திரங்களை, டீ-ஏஜிங் உத்தி மூலம், மூத்த நடிகர்களே தொடர்ந்து நடிக்கலாம்,’ என்கிறார்.

 

தற்போதைக்கு தொழில்நுட்பம் சார்ந்த இந்த உத்தி, உலகளவில் மாறுபட்ட கருத்துகளையே கிளப்பி வருகிறது.

 

“பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டீ-ஏஜிங், சூப்பர் ஸ்டார்களின் தொழில் வாழ்க்கையை நீட்டிக்கவோ, கால வரிசையை கலைத்துப்போடும் நுட்பமான கதைகளையோ சொல்லப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு நகைமுரண் என்னவெனில், எதிர்காலம் சார்ந்த, புரட்சிகரமான ஒரு தொழில்நுட்பம், கடந்த காலத்தை மீட்டுருவாக்கம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது,” என்று அக்கட்டுரையில் கூறுகிறார் நிக்கோலஸ் பார்பர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்