கிறிஸ்தவ மத போதகர் 'அதிசய குணப்படுத்துதல்' மோசடியை அரங்கேற்றியது எப்படி?

Sinoj

திங்கள், 8 ஜனவரி 2024 (21:24 IST)
உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ சுவிசேஷ சபைகளில் ஒன்று தி சினகாக் சர்ச் ஆப் ஆல் நேஷன்ஸ் (The Synagogue Church of All Nations- எஸ்சிஓஏஎன்). இதன் நிறுவனர் மீதான பாலியல் மற்றும் சித்ரவதைக் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் பிபிசியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
நைஜீரியாவின் மறைந்த மத போதகர் டி.பி. ஜோஷ்வா, பாலியல் வன்புணர்வு மற்றும் கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக, தி சினகாக் சர்ச் ஆப் ஆல் நேஷன்ஸ் சபையின் முன்னாள் ஜெப ஆலய உறுப்பினர்கள் (அதில் ஐந்து பிரிட்டிஷ் உறுப்பினர்கள்) குற்றம் சாட்டுகின்றனர்.
 
ஒரு இரகசிய லாகோஸ் வளாகத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்த குற்றங்களை அவர் செய்ததாக கூறப்படுகிறது. சினகாக் சர்ச் சபை குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை, ஆனால் இந்த கூற்றுகள் ஆதாரமற்றவை என்று கூறியது.
 
2021இல் இறந்த டி.பி.ஜோஷ்வா ஒரு தொலைக்காட்சி பிரபலம், மிகவும் வெற்றிகரமான போதகர் மற்றும் உலகளவில் அவரை பலர் பின்தொடர்ந்தனர்.
 
சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம், மக்களுக்கு சவுக்கடி, மக்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிகழ்வுகள் உட்பட, ஜோஷ்வாவால் நடத்தப்பட்ட உடல் ரீதியான வன்முறை அல்லது சித்ரவதையை நேரில் கண்ட சாட்சிகளின் பதிவுகள்.
 
பல ஆண்டுகளாக தாங்கள் ஜோஷ்வாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறும் ஏராளமான பெண்கள். சபை வளாகத்திற்குள் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
ஜோஷ்வால் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தேவாலயத்திற்குள் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகக் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் ஒரு பெண் தனக்கு ஐந்து முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
 
ஜோஷ்வா தனது "அதிசய குணப்படுத்துதல்களை" எவ்வாறு போலியாக உருவாக்கி மோசடி செய்தார் என்பதை விவரிக்கும் பல நேரடி சாட்சிகள். இத்தகைய "அதிசய குணப்படுத்துதல்கள்" உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன.
 
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ரே என்று அழைக்கப்படும் ஒரு பிரிட்டிஷ் பெண். 2002இல் பிரைட்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைக் கைவிட்டு, தேவாலயத்தில் சேர்க்கப்பட்ட போது அவருக்கு 21 வயது. லாகோஸில் உள்ள ஜோஷ்வாவின் கான்கிரீட் வளாகத்திற்குள் "சீடர்கள்" என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவராக 12 ஆண்டுகளைக் கழித்துள்ளார்.
 
"நாங்கள் அனைவரும் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்தோம், ஆனால் நாங்கள் நரகத்தில் இருந்தோம், நரகத்தில் பயங்கரமான விஷயங்கள் நடக்கின்றன," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
ஜோஷ்வாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், இரண்டு வருடங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ரே கூறுகிறார். பாலியல் துன்புறுத்தல் மிகவும் கடுமையாக இருந்தது எனவும், வளாகத்திற்குள் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் கூறுகிறார்.
 
தி சினகாக் சர்ச் ஆப் ஆல் நேஷன்ஸ் சபை உலகளாவிய பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. இம்மானுவேல் டிவி என்ற கிறிஸ்தவ தொலைக்காட்சி சேனலையும், லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட சமூக ஊடக நெட்வொர்க்குகளையும் கொண்டுள்ளது.
 
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதி முழுவதும், ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் நைஜீரியாவில் உள்ள சபையின் தேவாலயத்திற்குச் சென்று "அதிசய குணப்படுத்துதல்களை" ஜோஷ்வா செய்வதைக் கண்டனர். குறைந்தது 150 பேர் அவருடன் லாகோஸில் உள்ள அவரது வளாகத்தில் சீடர்களாக வாழ்ந்தனர், சிலர் பல தசாப்தங்களாக சீடர்களாக இருந்தனர்.
 
இங்கிலாந்து, நைஜீரியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கானா, நமீபியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட முன்னாள் "சீடர்கள்" பிபிசியுடன் பேசினார்கள். தேவாலயத்திற்குள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களைப் பற்றி உறுதியான சாட்சியங்களை அளித்தனர்.
 
அதில் மிகவும் சமீபமாக 2019இல் சந்தித்த அனுபவங்களும் உண்டு. அவர்கள் முதன்முதலில் சபையில் சேர்ந்தபோது பதின்பருவத்தில் இருந்தனர். சில பிரிட்டிஷ் சீடர்களுக்கு லாகோஸ் வருவதற்கான போக்குவரத்து செலவுகள், மற்ற இங்கிலாந்து தேவாலயங்களுடன் இணைந்து ஜோஷ்வாவால் செலுத்தப்பட்டன.
 
ரே மற்றும் நாங்கள் நேர்காணல் செய்த பலர் தங்கள் அனுபவங்களை ஒரு வழிபாட்டு முறையுடன் ஒப்பிட்டு பேசினர்.
 
நமீபியாவைச் சேர்ந்த ஜெசிகா கைமு, ஐந்து வருடங்களுக்கும் மேலாக தனக்கு கொடுமைகள் நிகழ்ந்ததாக கூறுகிறார். ஜோசுவா தன்னை முதன்முதலில் கற்பழித்தபோது தனக்கு 17 வயது என்றும், டி.பி. ஜோஷ்வாவினால் நடந்த பலாத்கார சம்பவங்கள் குறித்தும், அங்கு இருந்த போது ஐந்து கட்டாய கருக்கலைப்புகளுக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
 
"இவை இரகசியமாக நடந்தன, எங்களுக்கு நடந்த மருத்துவ சிகிச்சைகளால் உயிர் போகும் அபாயமும் இருந்தது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
நாங்கள் நேர்காணல் செய்த சிலர், தாங்கள் நிர்வாணமாக்கப்பட்டு மின்சார கேபிள்கள் மற்றும் குதிரை சாட்டைகளால் தாக்கப்பட்டதாகவும், தூங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
 
ஜூன் 2021இல் ​​டி.பி ஜோஷ்வா இறந்தபோது, ஆப்பிரிக்க வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க போதகர்களில் ஒருவராக அவர் போற்றப்பட்டார். வறுமையில் இருந்து மீண்டு வந்து, அவர் ஒரு சுவிசேஷ சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இதில் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் சர்வதேச கால்பந்து வீரர்கள் அவருடன் இணைந்தனர்.
 
அவர் மீது சில சர்ச்சைகளும் எழுந்தன. 2014இல் தேவாலய யாத்ரீகர்களுக்கான விருந்தினர் மாளிகை இடிந்து விழுந்ததில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டனர்.
 
சர்வதேச ஊடகத் தளமான ஓப்பன் டெமாக்ரசியுடன் இணைந்து பிபிசி நடத்திய புலனாய்வில், பல முன்னாள் தேவாலய உறுப்பினர்கள் சாட்சியங்களைப் பதிவு செய்ய தாமாக முன்வந்தது இதுவே முதல் முறை. பல ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டுகளை வெளியே சொல்ல முயற்சித்ததாகவும், ஆனால் தாங்கள் அமைதியாக இருக்க வற்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
நைஜீரியாவில் எங்களிடம் பேசிய பலர் தாங்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர், மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த குற்றங்களுக்கு எதிராக முன்பு ஒருமுறை பேசி, யூ டியூப் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டதால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
 
மார்ச் 2022இல் ஒரு தெருவில் இருந்து தேவாலயத்தின் லாகோஸ் வளாகத்தின் காட்சிகளை கேமராவில் பதிவு செய்ய முயன்ற பிபிசி குழுவினரும் தேவாலயத்தின் பாதுகாவலர்களால் சுடப்பட்டனர். மேலும் பல மணிநேரம் பிடித்து வைக்கப்பட்டனர்.
 
பிபிசி தனது புலனாய்வில், குற்றச்சாட்டுகள் குறித்து பேச சினகாக் சர்ச் சபையைத் தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை, மேலும் டி.பி.ஜோஷ்வாவிற்கு எதிரான முந்தைய குற்றச்சாட்டுகளை சபை மறுத்தது.
 
"தீர்க்கதரிசி டி.பி.ஜோஷ்வா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை" என்று அது கூறியது.
 
பிபிசியிடம் பேசிய இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் சீடர்கள் 4 பேர், "தேவாலயத்தில் இருந்து தப்பிய பின்னர் இங்கிலாந்து அதிகாரிகளிடம் துஷ்பிரயோகம் குறித்து புகாரளித்ததாக தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார்கள்.
 
ஒரு பிரிட்டிஷ் நபரும் அவரது மனைவியும் தாங்கள் நேரில் கண்ட சாட்சிகளின் பதிவுகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர். அதில், மார்ச் 2010இல் தேவாலயத்தில் இருந்து தப்பி ஓட தாங்கள் முயற்சி செய்த போது, சிலர் போலீஸ் என கூறிக்கொண்டு துப்பாக்கி முனையில் தங்களை பிடித்து மிரட்டியதையும் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர்.
 
இந்த மின்னஞ்சலை அவர்கள் நைஜீரியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அனுப்பியுள்ளனர். அவரது மின்னஞ்சலில், தனது மனைவி ஜோஷ்வாவால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் சில பிரிட்டிஷ் பிரஜைகள் இப்போதும் வளாகத்திற்குள் சிக்கி கொடுமைகளை அனுபவித்து வருவதாக அவர் பிரிட்டிஷ் தூதரகத்தில் தெரிவித்துள்ளார்.
 
ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
 
இந்த கூற்றுகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை உட்பட அனைத்து குற்ற அறிக்கைகளையும் வெளியுறவு அலுவலகம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று பிபிசியிடம் கூறினார்.
 
ஜோஷ்வாவின் மனைவி ஈவ்லின் தலைமையில் சினகாக் சர்ச் சபை இன்றும் வளமாக இருக்கிறது. ஜூலை 2023இல் நடந்த ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை ஈவ்லின் வழிநடத்தினார்.
 
17 வயதில் சினகாக் சர்ச் சபையில் சேர இங்கிலாந்தின் டெர்பி நகரில் இருந்து வந்த அன்னேகா, இன்னும் பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக வெளியே வரவில்லை என்று பிபிசியிடம் கூறினார். ஜோஷ்வாவின் செயல்களை வெளிக்கொணர மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் நம்புகிறார்.
 
மேலும், "இத்தனை குற்றங்களைச் செய்த ஒரு நபரால் எப்படி இவ்வளவு காலம் சினகாக் சர்ச் சபையில் செயல்பட முடிந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை தேவை" என்று கூறுகிறார் அன்னேகா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்