பருவமழை வெள்ளம் - நேபாளம், இந்திய மக்கள் உறவில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குகிறது?

செவ்வாய், 16 ஜூலை 2019 (20:16 IST)
நதி நீரை பகிர்ந்து கொள்வதில் உலகெங்கும் பிரச்சனைகள் நிலவுகின்றன. அதற்கு இந்தியாவும், நேபாளமும் விதிவிலக்கு அல்ல.

பருவமழை காலங்களில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள இந்த பிரச்சனையானது மோசத்திலிருந்து மிக மோசம் என்ற நிலையை எட்டுகிறது. குறிப்பாக ஜூன் - செப்டம்பர் இடையிலான பருவமழை காலத்தில்.

என்னதான் பிரச்சனை?

இந்தியா - நேபாள எல்லையில் உள்ள மக்கள் வெள்ளத்திற்கு காரணம் எதிர் தரப்புதான் என பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இவ்வாண்டு பெருமழை மிக மோசமான அழிவுக்கு காரணமாகி உள்ளது.

நேபாளம் மற்றும் வங்க தேசத்தில் பலர் இந்த பெருமழைக்கு பலியாகி உள்ளனர். அதுமட்டுமல்ல், 30 லட்சம் மக்கள் வட மற்றும் வட கிழக்கு இந்தியாவில் வெள்ளத்தின் காரணமாக வேறு இடங்களுக்கு குடியேறி உள்ளனர்.

இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லையானது 1800 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம், நேபாளத்தில் 6,000த்திற்கும் அதிமான நதிகள் பாய்கின்றன. கங்கை நதியின் மொத்த நீரோட்டத்தில் இந்த நதிகளின் பங்கு 70 சதவீதத்திற்கும் மேல்.

இந்த நதிகளில் வெள்ளப் பெருக்கெடுக்கும் போது நேபாளம் மற்றும் இந்தியாவின் சமவெளி பகுதிகளில் மோசமான பாதிப்பை உண்டாக்குகின்றன.

இந்தியாவே காரணம்

மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்குக்கு இந்தியாவே காரணம் என நேபாளம் குற்றஞ்சாட்டுகிறது.

அதாவது, வடக்கிலிருந்து (நேபாளம்) தெற்கு நோக்கி (இந்தியா) இயல்பாக ஓடும் நதிகளில் பல இடங்களில், நீரோட்டத்தை தடுக்கும் விதமாக கட்டுமானம் கட்டப்பட்டுள்ளதாக நேபாளம் குற்றஞ்சாட்டுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிழக்கு நேபாள பகுதிகளில் பிபிசி மேற்கொண்ட ஆய்வில் இந்தியப் பகுதியில் இவ்வாறான கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதை பிபிசி கண்டது.

அவை சாலைகள் என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், அவை இந்திய கிராமங்களுக்குள் நீர் செல்லாமல் தடுக்கும் கட்டுமானங்கள் என நேபாள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தெற்கு நேபாளத்தில் உள்ள ரெளதாஹாத் மாவட்ட நகராட்சி தலைமையகம் கடந்த மூன்று தினங்களாக வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக கிளர்ச்சி வரும் என அதிகாரிகள் அஞ்சினர்.

"மிகுந்த பயத்தில் இருந்தோம். பின்னர், தண்ணீர் செல்வதற்கான பாதையை இந்தியா திறந்தது. அது எங்களுக்கு உதவியாக இருந்தது." என்று பிபிசியிடம் தெரிவித்தார் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணா தாக்கல்.

இது தொடர்பாக கருத்து கேட்க இந்திய அதிகாரிகளை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

பேச்சுவார்த்தை

இரு தரப்பும் இது தொடர்பாக பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவவில்லை.

மே மாதம் நேபாளம் மற்றும் இந்திய நீர் வள அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில், இந்திய அதிகாரிகள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுவருதை ஒப்புக் கொண்டனர். ஆனால், அதை ராஜாங்க ரீதியாகதான் பேசி தீர்க்க வேண்டும் என்று கூறினர்.

அதே நேரம், இதுவரை இந்த பிரச்சனையில் ஒரு தீர்வு எட்டப்படாததால் நேபாள அதிகாரிகள் அந்நாட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இதன் காரணமாக இந்திய மக்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். வெள்ளத்தின் காரணமாக இதுவரை பிகாரிலிருந்து மட்டும் இது வரை 19 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அரசாங்கம் கூறுகிறது.

அதிக மழை பெய்யும் போது நேபாளம் மதகுகளை திறந்துவிடுகிறது. இதன் காரணமாக பிகார் மக்களின் வாழ்க்கை ஆபத்துக்கு உள்ளாகிறதென இந்திய மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், உண்மையில் மதகுகளை திறப்பது இந்திய அரசாங்கம். நதி நேபாளத்தில் இருந்தால் கூட மதகுகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

கங்கையின் கிளை நதியான கோசி மற்றும் கண்டாகி தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே 1954 மற்றும் 1959 ஆகிய ஆண்டுகளில் உடன்படிக்கை கையெழுத்தானது.

அதன்படி இந்தியா அந்த நதியில் மின்சார உற்பதிக்காக, வெள்ள தடுப்புக்காக தடுப்பு அணைகள் கட்டின. அனால், இது நேபாள மக்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்த தடுப்பு அணைகளால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பது அம்மக்களின் குற்றச்சாட்டு.

ஆனால், எல்லைகள் கடந்த நீர் மேலாண்மை விஷயமாக இந்தியா பார்க்கிறது.

பிகாரின் துயரமென்று அழைக்கப்படும் கோசி நதியில் உள்ள தடுப்பணையில் மட்டும் 56 வெள்ள தடுப்பு மதகுகள் உள்ளன.


வெள்ளம் அதிகமாகும் போது அனைத்து மதகுகளையும் திறக்காமல் சில மதகுகளை மட்டும் இந்தியா திறக்கிறது. இதன் காரணமாக நேபாள பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது என நேபாள மக்கள் கூறுகிறார்கள்.

இந்த மதகுகள் 70 ஆண்டுகள் பழமையானது. பெரு வெள்ளம் வந்தால் இவை உடைந்து போகும் வாய்ப்பும் இருக்கிறதென அச்சம் தெரிவிக்கிறார்கள் நேபாள மக்கள்.

காட்டழிப்பு

நேபாளத்தில் உள்ள பெரும்பாலான நதிகள் சோர் மலைத் தொடர் வழியாகதான் ஓடுகின்றன. அதன் சுற்றுச்சூழல் மோசமாக உள்ளது.

இந்த நதிகளின் ஓட்டத்தை அங்குள்ள மரங்கள் மிதப்படுத்தி இருக்கின்றன. ஆனால், காட்டழிப்பு மற்றும் சுரங்க தொழில் காரணமாக மலை சுரண்டப்பட்டுவிட்டது.

தடுப்பரண்களாக இருந்த காடு, மலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால் பருவகால வெள்ளத்தை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார் ஓர் அதிகாரி.

இப்போது, பருவநிலை மாற்றமும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை கொண்டு வருவதால் இரு நாடுகள் இடையேயான பிரச்சனை வரும் நாட்களில் மேலும் கடுமையாகும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்