இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி

திங்கள், 8 நவம்பர் 2021 (19:53 IST)
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4300ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடர்களால் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
 
சுமார் 63 குடும்பங்களைச் சேர்ந்த 250ற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, 9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
 
பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமொன்று உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது
 
இந்த தாழமுக்கம் (காற்றழுத்த தாழ்வு நிலை) மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடை காற்று வீசுவதுடன், சில சந்தர்ப்பங்களில் கடும் மழையுடனான வானிலையும் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
இதன்படி, இன்று (08) பிற்பகல் முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடற்ல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடல் தொழிலாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்