நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் எங்கு எப்போது வாழ்ந்தது?'

சனி, 28 ஆகஸ்ட் 2021 (14:02 IST)
நான்கு கால்களைக் கொண்ட திமிங்கல புதிய உயிரினத்தை எகிப்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது சுமார் கடந்த 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
 
ஆம்ஃபிபியஸ் ஃபியோமெசிடஸ் அனுபிஸ் (amphibious Phiomicetus anubis) என்கிற உயிரினத்தின் புதை படிமங்கள் எகிப்து நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
 
அந்த உயிரினத்தின் தலை அனுபிஸ் உயிரினத்தை ஒத்து இருக்கிறது. அந்த உயிரினத்துக்கு எகிப்தின் பழங்கால குள்ளநரி தலை கொண்ட மரண கடவுளைத் தொடர்ந்து அந்த உயிரினத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டது.
 
தற்போது இருக்கும் திமிங்கலங்களின் மூதாதையர்கள், மான் போன்ற பாலூட்டிகளில் இருந்து வந்தவை. இந்த உயிரினங்கள் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தோரோயாமாக 600 கிலோ எடை மற்றும் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் (10 அடி) நீளம் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம் தன் இரையை வேட்டையாட வலுவான தாடைகளைப் பெற்றிருந்தது என 'தி ப்ரொசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி' என்கிற சஞ்சிகையில் கடந்த புதன்கிழமை பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த திமிங்கலத்தால் நிலத்தில் நடக்கவும், நீரில் நீந்தவும் முடிந்து இருக்கிறது.
 
அந்த உயிரினத்தில் ஒரு பகுதி எலும்புக் கூடுகள், எகிப்து நாட்டில் இருக்கும் ஃபயூம் டிப்ரஷன் என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மன்சோரா பல்கலைக்கழகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். தற்போது பாலைவனமாக இருக்கும் எகிப்தின் மேற்குப் பகுதிகள், ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு இருந்தது. அப்பகுதி புதை படிவங்கள் அதிகம் கிடைக்கும் இடமாக இருக்கிறது.
 
"ஃபியோமெசிடஸ் அனுபிஸ் என்பது ஒரு முக்கியமான புதிய திமிங்கல இனம், இந்த கண்டுபிடிப்பு எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் முக்கியமானது" என இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரான அப்துல்லா கோஹர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
 
இதை விட ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், இப்படி கால்கள் கொண்ட திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது தான். ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம், நிலத்திலும் நீரிலும் வாழ்ந்த திமிங்கலங்களில் ஆரம்ப காலத்தவையாக கருதப்படுகிறது.
 
திமிங்கலங்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்காசியாவில் பரிணாம வளர்ச்சி கண்டு உருவானதாக கருதப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு வரலாற்றுக்கு முந்தைய கால உயிரினங்களைக் குறித்து ஆராயும் ஒரு அணி பெரு நாட்டில் விரல்கள் ஒட்டிய நிலையில் இருக்கும் நான்கு கால்கள் கொண்ட, 43 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதை படிவத்தை கண்டு பிடித்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்