ஆப்கன்: முடிவுக்கு வந்தது சண்டை நிறுத்தம்?

திங்கள், 18 ஜூன் 2018 (15:04 IST)

ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது.

ரமலான் விழா முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, அடுத்த 10 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்த ஆஃப்கன் அரசு, ஆனால், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
 
அசாதாரண நிகழ்வாக, சண்டை நிறுத்தம் அமலில் இருந்தபோது தாலிபன் தீவிரவாதிகள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
 
ஆனால், இந்த சண்டை நிறுத்தம் வன்முறைகளை முற்றுலுமாக நிறுத்திவிடவில்லை.
 
நாங்கர்ஹர் பகுதியில் தாலிபன்களும், அரசாங்க அதிகாரிகளும் கூடிய கூட்டத்தில் ஐஎஸ் அமைப்பால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கன் பொதுமக்கள் ஈத் விழாவை அமைதியான முறையில் கொண்டாடுவதற்காகவே சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டோம்; அரசாங்கத்தின் அழைப்புக்கு கட்டுப்பட்டு அல்ல" என்று தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இவ் விழாவை முன்னிட்டு அரசாங்கமும், தாலிபன் தீவிரவாதிகள் தரப்பும் மூன்று நாட்கள் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருந்தனர்.
 
முன்னதாக சனிக்கிழமையன்று இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, "தாலிபன்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சமாதான பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்