மோதி அரசுக்கு எதிர்பாராத நல்ல சேதியைச் சொல்கிறதா ஜிடிபி புள்ளிவிவரம்? - ஓர் ஆழமான அலசல்
புதன், 2 ஜூன் 2021 (13:40 IST)
நாம் மூச்சைப்பிடித்துக்காத்துக்கொண்டிருந்த அந்த செய்தி வந்துவிட்டது. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு எதிர்பார்த்ததை விட குறைவாகவும், நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை விட சற்று மேம்பட்டும் தரவுகள் இருக்கின்றன. ஆனால் இது கடந்த நாற்பதாண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் பதிவாகியுள்ள மிகமோசமான அளவாகும்.
ஆயினும்கூட, தரவைக் கண்காணிக்கும் பொருளாதார வல்லுநர்கள் சிறிதே நிம்மதிப்பெருமூச்சுவிடுகின்றனர். இதற்குக்காரணம், 2020-21 நிதியாண்டில், சுமார் எட்டுசதவிகித சரிவு மதிப்பிடப்பட்ட நிலையில், அது தற்போது 7.3 சதவிகிதத்தில் நின்றுள்ளது. அந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.3% வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் 1.6% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், கடுமையான சரிவுக்குப் பிறகு மூன்றாம் காலாண்டில் அதாவது அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டது. 0.4 சதவிகித ஏற்றம் உற்சாகமளிக்கவில்லை என்றாலும்கூட, தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டும் மந்தநிலையில் கடக்கவில்லை என்ற திருப்தி ஏற்பட்டது. ஆயினும் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இது 0.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மேலும் சிறிது முன்னேற்றம். இந்திய பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதற்கான முறையான அறிகுறியாகவும் இது இருந்தது.
கொரோனாவின் இரண்டாவது அலை 2021 பிப்ரவரி மாதம் ஆரம்பித்துவிட்ட போதிலும், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டு அதாவது இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்திலும் பொருளாதாரத்தில் சிறிதளவு முன்னேற்றமே காணப்படும் என்று பெரும்பாலான பொருளாதார ஆய்வாளர்கள் கருதினர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின்,' நவ் காஸ்டிங் மாடல்' அதாவது வருங்காலம் அல்லாமல் நிகழ்காலத்தின் நிலையை விவரிக்கும் கணிதத்தின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.3% அதிகரிப்பைக் கண்டிருக்க வேண்டும்.
புள்ளிவிவரங்கள் நன்றாக இருப்பதுபோலவே தெரிகிறது. ஆனால் இந்தத்தரவுகளில் சில ஆழமான கவலைகளும் ஒளிந்திருக்கின்றன.
குறிப்பாக நான்காவது காலாண்டில் காணப்படும் வளர்ச்சி விகிதம் மன உளைச்சல் தருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பொது முடக்கம் ஜூன் மாதத்தில் முடிவடைந்தது. ஜூலை முதல் பொருளாதாரத்தை மெதுவாக திறந்துவிடும் பணி தொடங்கியது. டிசம்பர் வருவதற்குள் கிட்டத்தட்ட அனைத்துமே திறக்கப்பட்டன. அந்த நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் அறிகுறிகூட காணப்படவில்லை. நிலைமை இயன்பானது போல இருந்தது. எல்லாமே சரியாகிவிட்டதாக கருதப்பட்டது. அப்படியிருந்தும் கூட அந்த காலாண்டில் 1.6% மட்டுமே ஏற்பட்ட வளர்ச்சி, பொருளாதாரத்தின் நிலை மிகவும் நாசூக்காக இருப்பதையே சுட்டிக்காட்டியது.
மறுபுறம், 2020-21ஆம் ஆண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதாவது அரசு கருவூலத்தின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.3% என்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் வெளிவருவதற்கு சற்று முன்பு அரசு அறிவித்தது. இருப்பினும் இது முந்தைய மதிப்பீடான 9.5% ஐ விட சற்றே குறைவாக இருந்தாலும்கூட சிறிதளவு நிம்மதியைமட்டுமே அளித்தது. மறுபுறம், பொருளாதாரத்திற்கு தேவையான எட்டு துறைகள் அதாவது மையத்துறைகளில் ஏப்ரல் மாத உற்பத்திப்புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது, ஐம்பத்தாறு சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது ஆனால் இதற்குக் காரணம் மிக அதிக வேகம் அல்ல. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நாடு முழுவதிலும் போடப்பட்ட பொதுமுடக்கம்தான்.
கவலைக்குரிய செய்தி என்னவென்றால், அரசு தவிர பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செலவு செய்யும், தனியார் இறுதி நுகர்வு (Private final consumption) தொகையில் சுமார் எட்டு லட்சம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்க்கும்போது அரசின் செலவு நிச்சயமாக அதிகரித்துள்ளது என்றாலும்கூட அது வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் இது கடந்த காலத்தின் கணக்கு மட்டுமே. இதற்குப்பிறகான நிலை ஆபத்தானதாகத் தோன்றுகிறது. அதில் முன்னேற்றத்தின் அறிகுறி காணப்படவில்லை கூடவே அதற்கான வழியும் தெரியவில்லை. பெருந்தொற்று நிலவும்போதிலும், நடப்பு நிதியாண்டில் மிக வேகமான வளர்ச்சியை எட்டுவதன்மூலம் இந்தியா உலகை ஆச்சரியப்படுத்த முடியும் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இத்தகைய கணிப்புகளை செய்பவர்களும்கூட இப்போது மெதுவாக தங்கள் மதிப்பீடுகளை மாற்றி வருகிறார்கள்.
2021-22 க்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீட்டை, இரண்டாவது முறையாக குறைத்து, 11 ல் இருந்து 9.2 சதவிகிதமாக பார்க்லேஸ் முதலீட்டு வங்கி ஆக்கியுள்ளது. அதோடு வருங்கால சூழல் பங்கரமானதாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது. அதாவது கொரோனாவின் மூன்றாவது அலையின் அச்சம் உண்மையானால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் வேகம் மேலும் குறைந்து இந்த நிதியாண்டில், 7.7 சதவிகிதமாக சரியக்கூடும் என்று பார்க்லேஸின் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பொதுமுடக்கம் காரணமாக மே மாதத்தில் ஒவ்வொரு வாரமும் பொருளாதார நடவடிக்கைகள் எட்டு பில்லியன் டாலர் பின்னடைவை எதிர்கொள்கின்றன என்று இந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஒவ்வொரு வாரமும் ஐம்பத்தெட்டாயிரம் கோடி ரூபாய். ஏப்ரல் மாதத்தில் இது 5.3 பில்லியன் டாலர்களாக இருந்தது அதாவது சுமார் முப்பத்தெட்டாயிரம் கோடி ரூபாய். இது பார்க்லேஸின் முந்தைய மதிப்பீட்டைவிட மிக அதிகம். ஒரு வார பொது முடக்கத்தால் 3.5 பில்லியன் டாலர்கள் அதாவது ஒவ்வொரு வாரமும் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பது முந்தைய கணிப்பாக இருந்தது. .
மே மாதத்தில் இழப்பு இவ்வளவுதான் இருக்கும் என்றும் ஆனால் ஜூன் மாதமும் பொதுமுடக்கம் தொடர்ந்தால் ஒவ்வொரு வாரமும் இழப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அச்சம் காரணமற்றதல்ல. நாட்டின் பல மாநிலங்களில் பொதுமுடக்கம் ஜூன் மாதத்திலும் தொடரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு மேம்படும்?
இந்த கேள்விக்கான பதில் சுற்றிவளைத்து ஒரு வருடத்திற்கு முன்பு கூறப்பட்டது தான். அதாவது அரசு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மக்களுக்கு நேரடியாக பணத்தை அளிக்கவேண்டும், வேலைவாய்ப்பை பாதுகாக்க மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கவேண்டும்.கூடவே மந்தநிலையால் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ள தொழில்களை ஆதரிக்கவேண்டும்.
இப்போது இல்லையென்றால் எப்போது என்று என்று சிஐஐ தலைவர் உதய் கோடக் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடன் தவணை செலுத்த முடியாதவர்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளன.
சென்ற நிதியாண்டில் நாட்டில் தொண்ணூற்றி ஏழு சதவிகித மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்துள்ளதாக 'இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்' CMIE இன் ஆய்வுகள் காட்டுகின்றன
அதே நிதியாண்டில், நாட்டின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபம் ஐம்பத்தேழு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனங்களின் மொத்த லாபம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.63 சதவிகிதமாக உல்ளது. இது பத்து ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவாகும்.
இந்த லாபம், விற்பனை அல்லது வணிகத்தின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டதல்ல. செலவீனங்களை குறைத்ததால் ஏற்பட்டது.
லாபங்கள் அதிகரித்த போதிலும் தனியார் துறை புதிய திட்டங்களை அல்லது புதிய முதலீடுகளைச் செய்யும் நிலையில் இல்லை. ஏனெனில், தொழிற்சாலைகள் மூன்றில் இரண்டு பங்கு திறனில் மட்டுமே செயல்படுகின்றன.
இந்த நிலையில் ஒரே நம்பிக்கை அரசு மட்டுமே. அது கடன் எடுத்து விநியோகம் செய்யட்டும், நோட்டு அச்சடித்து விநியோகம் செய்யட்டும் எல்லது வேறு புதிய வழியை தேடட்டும். ஏனென்றால் இப்போது புதைகுழியிலிருந்து பொருளாதாரத்தை மீட்கும் திறன் அரசுக்கு மட்டுமே உள்ளது.