மின்சார வாகனம் தீப்பிடித்தால் தண்ணீர் ஊற்றுவது ஆபத்து - ஏன் தெரியுமா? பேட்டரி பேருந்தில் பற்றிய தீ

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (20:50 IST)
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பேட்டரி சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், சிலரின் உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகின.
 
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, எதிர் கால போக்குவரத்தில் மின்சார வாகனங்கள் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மின்சார வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன.
 
மிக ஆபத்தான பென்னு சிறுகோள் மண் மாதிரியில் நாசாவுக்கு என்ன கிடைத்தது?
 
தீ விபத்து காரணமாக அவசர கதியில் இறங்கி வந்ததால் செல்போன் உள்ளிட்ட உடமைகள் எரிந்து சாம்பலானதாக பயணி ஜீவா தெரிவிக்கிறார்.
 
பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து குளிர்சாதன வசதி கொண்ட மின்சார சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்தது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை கடந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்து ஒன்று திடீரென பிரேக் பிடித்து நின்றதாக கூறப்படுகிறது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மின்சார பேருந்து ஓட்டுநரும் திடீரென பிரேக் பிடித்ததால் அந்த பேருந்தின் பின்னால் பயணிகளுடன் வந்த மற்றொரு தனியார் பேருந்து அதன் மீது மோதியது. அந்தப் பேருந்து மோதிய வேகத்தில் மின்சார பேருந்தின் பின் பகுதி நொறுங்கியது.
 
அப்போது அந்த மின்சார பேருந்தின் பின்பகுதியில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்டதும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக வெளியேறினர்.
 
பேருந்து ஓட்டுநரும், பொதுமக்களும் சேர்ந்து பேருந்தின் பின் பகுதியில் பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரியை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
 
ஆனால் பேருந்தின் பின் பகுதியில் இருந்த பேட்டரிகளில் தண்ணீர் பட்டு, அவை வெடிக்கத் தொடங்கின. இதைத் தொடர்ந்து தீ மளமளவென எரிந்ததால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
அதன் பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரோடு ரசாயனம் கலந்த பவுடரை கலந்து அதைப் பாய்ச்சி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
 
இருப்பினும் தீப்பற்றிய பேருந்தில் இருந்து பயணிகள் அவசர கதியில் கீழே இறங்கியதால் பேருந்தில் சிக்கிக்கொண்ட அவர்களின் செல்போன், பணம் மற்றும் உடைமைகள் தீயில் கருகின.
 
தீயணைப்பு துறையினர் விளக்கம்
 
பேட்டரி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியவுடன் சிறிய அளவில் பற்றிய தீ, பின்னர் மளமளவென பரவிய நிலையில், ஆரம்ப நிலையிலேயே தீயை கட்டுப்படுத்த முடியாமல் போவது ஏன் என்பது குறித்த கேள்வி எழுகிறது.
 
இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசிய போது, "பொதுவாக மின்சார வாகனங்களில் இதுபோன்று தீவிபத்து ஏற்படும் போது அந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். நான்கு சக்கர வாகனம், பேருந்து போன்ற வாகனங்களில் கட்டாயம் தீ தடுப்பு கருவிகள், முதலுதவி உபகரணங்கள் இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் பெரும்பாலான வாகனங்களில் இந்த தீ தடுப்பு கருவிகள் இருப்பது இல்லை.
 
பொதுவாக அரசு பேருந்து ஓட்டுநர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு, இது போன்று தீவிபத்து ஏற்படும் போது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினரால் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். ஆனால், இது போன்று தனியார் ஆம்ணி பேருந்து ஓட்டுநர்களுக்கு இது போன்று பயிற்சி அளிப்பது கிடையாது. அதேபோன்று தீ தடுப்பு கருவிகளும் இந்த வாகனங்களில் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. அப்படி இருந்தாலும் வாகன ஓட்டுநருக்கோ, நடத்துனருக்கோ இந்த கருவிகளை பயன்படுத்துவது குறித்த முறையான பயிற்சி இல்லாததால், தீ தடுப்பு கருவிகள் இருந்தும் பயனில்லாமல் போகிறது. எனவே தீயணைப்பு வாகனங்கள் வரும் வரை காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து சாம்பலாகி விடுகிறது," என்று கூறினார்.
 
மின்சார வாகனங்கள் உண்மையில் ஆபத்தானவை தானா? அவை ஏன் எளிதில் தீ பிடித்து எரிகின்றன? அதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் பாதுகாப்பானவையா?
 
இது குறித்து தனியார் பாதுகாப்பு துறை பொறியாளர் பிரபு காந்தி ஜெயினிடம் பிபிசி தமிழ் பேசியது.
 
"மின்சார வாகனத்தில் தீ விபத்து ஏற்பட முக்கிய காரணம் பராமரிப்பு குறைபாடு தான். வாகனத்தில் தீ விபத்து ஏற்படுவது புதிய விஷயம் இல்லை. என்றாலும், மின்சார வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் அதிக கவனம் பெறுகின்றன. காரணம், இந்த விபத்துகள் வாகனம் ஓடிக் கொண்டிருக்கும்போதோ, அவை சார்ஜ் செய்யப்படும் போதோ நிகழ்கின்றன. மேலும் விபத்தின்போது அதிக தீப்பிழம்பும், புகையும் வருவதும், எளிதில் அணைக்க முடியாததும் இந்த விபத்துகளை அதிகம் கவனம் பெற வைக்கின்றன.
 
மின்சார வாகனம் வைத்திருப்பவர்கள், சில எளிய நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் வாகனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். சார்ஜ் செய்யும் போதும், வாகனத்தைப் பயன்படுத்தும் போதும் உற்பத்தியாளர்களின் அனைத்துப் பரிந்துரைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். சார்ஜ் செய்யும் போது உரிய பிளக்கை பயன்படுத்துவது, இணைப்பு காரணமாக ஏற்படும் பாதிப்பை குறைக்கும். அதேபோல டிவி, பிரிட்ஜ், ஏ.சி. போனற மின்னணு சாதனங்களுக்கு இருப்பது போல பேட்டரி வாகனங்களுக்கும் மின்சாரத்தை நிலைப்படுத்தும் கருவி (stabilizer), டிரிப்பர் சுவிட்ச் (tripper switch) பொருத்தினால் மின் கசிவு ஏற்படும் போது தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்," என்றார்.
 
அதேபோல பேட்டரி மீது தீக்கம்பளம் (Fire Blanket) போர்த்தினால் தீ விபத்து ஏற்பட்டாலும், தீ பரவுவது தவிர்க்கப்படும் என்றும், இது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை என்றும் அவர் கூறினார்.
 
மேலும், இந்த மாதிரியான விபத்துகளைத் தவிர்க்க அரசாங்கம் மின்சார வாகனத் தரக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்