ஆளுநரை நீக்கக்கோரும் தி.மு.க. மனுவில் ஆர்.என். ரவி மீது சரமாரி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (13:59 IST)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக் கோரும் தீர்மானத்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளது தி.மு.க. இந்தத் தீர்மானத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி, தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினர் கையெழுத்திட்ட மனு ஒன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் ஆளுநர் ரவி மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. "அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசின் செயல்பாடுகளை அவரது பெயரில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவுமணி அடிப்பதாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு காலவரையின்றி ஒப்புதல் தராமல் இருப்பதையோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆளுநரின் அப்படிப்பட்ட செயலால் தமிழ்நாட்டில் எதேச்சதிகார சூழல் நிலவுகிறது.

தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றிவரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு சட்டவரைவின் தேவை அல்லது அவசியம் குறித்து ஆளுநர் ஆராய இயலாது. அது சட்டப்பேரவையின் தனியுரிமை. சட்டவரைவு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டவுடன், அதனை மாநில மக்களின் முடிவாகக் கருதியே செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆளுநர் தனது முதன்மையான பணியைச் செய்வதில்லை. நீட் விலக்கு சட்ட வரைவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டது. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சரிடமும் முந்தைய குடியரசுத் தலைவரிடமும் கோரிக்கைவைக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த சட்டவரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, சட்டவரைவை சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது அதிகார வரம்பை மீறிய செயல். இத்தகைய செயல்பாடுகள் ஆளுநரின் பொறுப்புக்கு அழகல்ல.



பல்வேறு மொழிகள், மதங்களைச் சார்ந்தவர்கள் அமைதியாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில், ஆளுநர் அடிக்கடி சமுதாயத்தை பிளவுபடுத்தும் வகையில் பேசுகிறார். தான் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்கு சிறிதும் பொறுத்தமற்றவகையில் ஆபத்தான, பிளவுபடுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளை பொதுவெளியில் பேசிவருகிறார். மக்களின் மனதில் வெறுப்பைத் தூண்டி, சமூகப் பதற்றத்தைத் உண்டுபண்ணும் நோக்கத்துடன் அவரது பேச்சுகள் அமைகின்றன.

உலகின் பிற நாடுகளைப் போலவே, இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்தே உள்ளது என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும். சனாதன தர்மத்தைப் போற்றுவது, திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும் தமிழ்ப் பெருமையையும் விமர்சிப்பது என கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என முடிவுசெய்ய ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு தேர்தல்கள் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதை மறந்துவிடுகிறார். அண்மைக்காலமாக மத்திய அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு கைமாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது. இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லை. இத்தகைய சீர்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக ஆர்.என். ரவி விளங்குகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 159வது பிரிவின் கீழ் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை அவர் மீறிவிட்டார். மதவெறுப்பைத் தூண்டி, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.

சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதால், அவரது செயல்பாடுகள் தேசத் துரோகமானவை என சிலர் கருதக்கூடும். தான் ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை ஆர்.என். ரவி நிரூபித்துவிட்டார். அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்." என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டில் இருந்து ஒப்புதலுக்காக ஆளுநர் வசம் உள்ள 20 சட்டங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஹூக்கா பார்களைத் தடை செய்யும் சட்டம், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்டம், வெளிப்படையான டெண்டருக்கான சட்டம், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இன்னும் ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்