மாரடோனாவும் கால்பந்தும்: சாகச வீரரின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை

வியாழன், 26 நவம்பர் 2020 (16:00 IST)
திகைப்பூட்டக்கூடியவர், சர்ச்சைக்குரியவர், அசாதாரணமானவர், புத்திசாலித்தனமானவர், மிகவும் மூர்க்கத்தனமானவர்.
 
இந்த அனைத்தும் மறைந்த டியாகோ மாரடோனானவை விவரிக்கப் பொருத்தமான சொற்கள்.
 
கால்பந்து உலகில் மிகவும் திறன்மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவின் மாரடோனா ஆற்றல், சுறுசுறுப்பு, தொலைநோக்கு, வேகம் என அரிதான பண்புகள் அனைத்தையும் தன்னிடத்தில் ஒரு கலவையாகக் கொண்டிருந்தார்.
 
இதுவே அவர் ரசிகர்களை வசீகரிக்க காரணமாக அமைந்தது.
 
இது 'கடவுளின் கை' என்று அவர் அடித்த சர்ச்சைக்குரிய கோல், போதைப்பொருள் பயன்பாடு, ஆடுகளத்திற்கு வெளியே அவரது சொந்த வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் என அவர் தனது ஆதரவாளர்களைக் கோபமடையவும் வைத்துள்ளார்.
 
அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ்-இல் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் தனது இளமைக்கால வறுமையிலிருந்து தப்பி சர்வதேச கால்பந்து நட்சத்திரமாக உருவெடுத்தார்.
 
பிரேசிலின் கால்பந்து நட்சத்திரம் பீலேவை விடவும் இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து சிறந்த ஆட்டக்காரர் என்று சிலர் கருதுகிறார்கள்.
 
491 ஆட்டங்களில் 259 கோல்கள் அடித்த மரடோனா இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் என்ற பட்டத்துக்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்திய வாக்கெடுப்பில் பீலேவை வென்றார்.
 
ஆனால் மாரடோனா, பீலே ஆகிய இருவருமே கௌரவிக்கப்பட வேண்டும் என்பதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அந்தப் படத்துக்கான வாக்களிப்பு விதிகளை மாற்றியது.
 
மாரடோனா சர்வதேச கால்பந்தில் நுழைந்த பொழுது அவருக்கு வயது 16 ஆண்டுகள் மற்றும் 120 நாட்கள் மட்டுமே.
 
இளம் வயதில் அவர் தலைமை ஏற்று நடத்திய லாஸ் செபோலிடாஸ் அணி 136 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
விளையாட்டு வீரர்களின் வழக்கமான உடலமைப்பை கொண்டவரல்ல மரடோனா அவரது உயரம் 5 அடி 5 அங்குலம் மட்டுமே.
 
ஆனால் அவருடைய திறன், லாவகமாக விளையாடும் தன்மை, பந்து மீதான அவரது கட்டுப்பாடு, பந்தை பிறருக்கு ஆடுகளத்தில் கைமாற்றும் (கால் மாற்றும்?) உத்தி ஆகியவை அவருக்கு இருந்த உடல் எடை பிரச்சனை மற்றும் சீரான வேகம் இல்லாதது ஆகியவற்றை ஒரு குறையாகவே தெரியாத அளவுக்கு செய்தன.
 
அவர் ஆடுகளத்தில் எதிரணி வீரர்களை தடுமாற வைத்த வல்லவராக இருக்கலாம் ஆனால் வேறு சிக்கல்களை சமாளிப்பது அவருக்கு கடினமாக இருந்தது.
 
ஹேண்ட் ஆஃப் காட் மற்றும் நூற்றாண்டின் கோல்
மாரடோனா அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய 91 போட்டிகளில் அவர் அடித்த 34 கோல்கள் அவரின் சுவாரஸ்யமான ஏற்ற இறக்கங்கள் கொண்ட சர்வதேச தொழில்முறை வாழ்வின் ஒரு பங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.
 
1986ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அவரின் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்ததுடன் நான்கு வருடங்கள் கழித்து இன்னொரு முறை தனது அணியை இறுதி போட்டிக்கும் அழைத்தும் சென்றார்.
 
ஆனால் இந்த போட்டியில் கால் இறுதி போட்டிகளில் தனது வாழ்நாள் முழுதும் சூழும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கினார். அவருக்கு ஹேண்ட் ஆஃப் காட் என்ற பெயர் வருவதற்கு இந்த போட்டியே காரணம்.
 
இந்த போட்டி நடைபெறுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன் தான் (1982)அர்ஜென்டினாவுக்கும், பிரிட்டனுக்கும் போக்லாந்து போர் நடைபெற்றிருந்த காரணத்தினால் அதன் தீவிரம் போட்டிக் களத்திலும் எதிரொலித்தது.
 
அந்த போட்டியின் 51 நிமிடங்களுக்கு எந்த கோல்களும் அடிக்கப்படாத நிலையில், எதிரணியின் கோல் கீப்பர் பீட்டர் ஷில்டனுக்கு எதிராக தாவி பந்தை வளையத்தை நோக்கி குத்தினார் மரரோடானா.
 
அதன்பிறகு அதுகுறித்து பேசிய அவர், அந்த கோலுக்காக தனது 'புத்திக்கும் கை என்ற கடவுளுக்கும்' நன்றி தெரிவித்திருந்தார்.
 
ஆம் அந்த போட்டியில் கையை கொண்டு அவர் கோல் அடித்தார் என பெரும் சர்ச்சை உருவானது. ஆனால் அப்போதைய தொழில்நுட்ப காரணங்களால் அவருக்கு யெல்லோ கார்ட் வழங்கமுடியவில்லை.
 
அதிலிருந்து அவருக்கு ஹேண்ட் ஆஃப் காட் என்ற பெயரும் வந்தது.
 
நான்கு நிமிடங்கள் கழித்து, இந்த 'நூற்றாண்டின் கோல்' என்று விவரிக்கப்படும் கோலை அவர் அடித்தார்.
 
அது மிக அற்புதமானது என்று சொல்லவேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மிகச்சிறந்த கால்பந்து அறிவாளியால் மட்டுமே அவ்வாறு ஒரு கோலை அடிக்க முடியும் அந்த போட்டியில் வர்ணணையாளராக இருந்த பேர்ரி டேவிஸ் தெரிவித்தார்.
 
அந்த போட்டியில் வெற்றிப் பெறுவதை காட்டிலும் இங்கிலாந்து அணியை தோற்கடிப்பதுதான் முக்கியமான ஒன்று என்று மரோடோனா தெரிவித்திருந்தார்.
 
நபோலியின் ஹீரோ
ஸ்டாடியோ சான் பாலோ அரங்கிற்கு அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியபோது ஒரு புதிய ஹீரோவாக அவர் தெரிந்தார்.
 
மாரோடோனா தன் வாழ்நாளின் சிறந்த க்ளப் கால்பந்து ஆட்டத்தை இத்தாலியில் ஆடினார்.
 
அங்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாரடோனா நபோலி அணிக்கு அதன் முதல் லீக் வெற்றியை 1987ஆம் ஆண்டும், அதன்பின் 1990ஆம் ஆண்டும் பெற்று தந்தார். மேலும் நபோலி அணி அதன்பின் 1989ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யூனியன் போட்டியிலும் வெற்றி பெற்றது.
 
இந்த முதல் வெற்றி கொண்டாட்டம் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீதியில் கூடினர். ஆனால் மாரடோனா, அதீத கவன ஈர்ப்பையும், எதிர்பார்ப்பையும், கையாள முடியாமல் திணறினார்.
 
"இது ஒரு சிறந்த நகரம் ஆனால் எனக்கு மூச்சுவிடவே சிரமமாக உள்ளது. நான் சுதந்திரமாக நடக்க விரும்புகிறேன். நான் பிறரை போன்றே சாதரணமானவன்," என அவர் தெரிவித்தார்.
 
இட்டாலியா 90 போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியுற்றனர் அடுத்த ஆண்டில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையில் மரடோனாவுக்கு பாசிடிவ் என முடிவுகள் வந்ததால் 15 மாத தடை விதிக்கப்பட்டது.
 
அதன்பின் 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்றார்.
 
இருப்பினும் அந்த போட்டிகளின் நடுவில் எபிட்ரைன் என்ற தடை செய்யப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டதால் பாதியில் விலகிக் கொண்டார்.
 
ஓய்வுக்கு பிறகான வாழ்க்கை
 
அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார் என்பது தெரியவந்தது. அதன்பின் தனது 37வது பிறந்தநாளில் அவர் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றார். ஆனால் அவரை பிரச்னைகள் மட்டும் சூழ்ந்தே இருந்தன.
 
பத்திரிகையாளர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதற்காக இரண்டு வருடம் 10 மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
 
அவருக்கு குடிப்பழக்கமும், கோகைன் எடுத்து கொள்ளும் பழக்கமும் இருந்ததால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அவருக்கு இருந்தன. ஒரு கட்டத்தில் அவரின் உடல் எடை 128 கிலோ என்ற அளவிற்கு அதிகரித்தது. 2004ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு வந்தது. அதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
 
மேலும் அவரது உடல் எடை ப்பிரச்னையை சரி செய்ய அவருக்கு கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் தனது போதை பழக்கத்திலிருந்து விடுபடவும் அவர் சிகிச்சை பெற்றார்.
 
இத்தனை சர்ச்சைக்கு பின்னும் அவர் 2008ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் தேசிய அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் இரு வருடங்கள் கழித்து உலக கோப்பை கால் இறுதி போட்டி வரை அந்த அணி சென்றது. இருப்பினும் கால் இறுதி போட்டியில் 4-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா தோல்வியுற்றது.
 
பல சமயங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற மாரடோனாவிற்கு பல நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஒருமுறை மரடோனாவின் வளர்ப்பு நாய் ஒன்று அவரை கடித்ததில் உதட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மேலும் தனது மகன் டியாகோ அர்மாண்டோ ஜூனியர், திருமணம் தாண்டிய உறவில் பிறந்தவர் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
 
2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில், மாரடோனாவின் சிக்கலான வாழ்க்கைமுறை வெளிப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.
 
தனது பேனரை தானே திறந்து வைத்தது, நைஜீரிய அணியின் ரசிகருடன் ஆடியது, ஆட்டத்திற்கு முன் பிரார்த்தனை செய்தது, மெஸ்ஸியின் ஆட்டத்தை கொண்டாடியது, தூங்கியது, அதன்பின் அர்ஜென்டினாவின் இரண்டாம் கோலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் இரு விரல்களை உயர்த்திக் காட்டியது என மரடோனா பல சர்ச்சைக்குரிய செய்கைகளில் ஈடுபட்டார்.
 
அதன்பிறகு அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது என்று சில செய்திகள் தெரிவித்தன.
 
உத்வேகமளிக்கும் நபராக இருந்தாலும், அவரை சுற்றி சர்ச்சைகளும் சூழந்த வண்ணமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்