காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம் அடுத்த மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் மற்றும் அடுத்த 6 நாட்களுக்கு, தமிழ்நாட்டுக்கு தினசரி 6 ஆயிரம் கனஅடி நீரை அளிக்க வேண்டும் என்றும் கூறியதை அடுத்து முன்னாள் பிரதமரும், கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி.தேவ கவுடா காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றமான விதான் சௌதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தேவ கவுடா உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
அவர் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு கர்நாடகாவிற்கு பேரிடி போன்ற செய்தி என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், வழக்கு ஒன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் நிலுவையில் உள்ளபோது, மற்றொரு அமர்வான இரண்டு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் வரை தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரோடு அவரது தொண்டர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக வியாழனன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் நடந்த இருமாநில முதல்வர்கள் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இது குறித்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உடனடியாக கர்நாடகம் நீரைத் திறந்து விட உத்தரவளித்தது. மேலும் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரித்தது.