முகமது ஷமியை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள்”: விராட் கோலி
சனி, 30 அக்டோபர் 2021 (23:05 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி குறித்து சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்கள், முதுகெலும்பற்றவர்கள் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதனை தொடர்ந்த பலர் இந்திய அணியில் உள்ள இஸ்லாமியரான வேக பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளத்தில் கடுமையாக பேசினர்.
அவர் மேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு ஆதரவாக விளையாடியதாகவும், பாகிஸ்தானுக்கு அதிக ரன்களை விட்டு கொடுத்தாகவும் பலர் பேசினர்.
விளம்பரம்
சிலர் அவரை `துரோகி` என தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக் உட்பட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
சமூக வலைதளங்களில் வெளியான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், இன்று ஷமி குறித்து சமூக ஊடகங்களில் வெளிவந்த தவறான பதிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துபாயில் பேசிய விராட் கோலி,"ஒருவரை அவரின் மதம் சார்ந்து தாக்கி பேசுவதுதான் மனிதர்கள் செய்யும் மிக மோசமான காரியமாக இருக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் விராட் கோலி?
ஏற்கனவே பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றுள்ள இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
நடைபெறவுள்ள போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பில், ஷமி குறித்து விமர்சிப்பவர்கள் குறித்து கடுமையாக பேசியுள்ளார் கோலி.
சமூக வலைதளங்களில் கேலி செய்பவர்கள் நிஜ வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாத முதுகெலும்பற்றவர்கள் என கோலி தெரிவித்துள்ளார்.
"நாங்கள் களத்தில் மோதுவதற்கு ஒரு நல்ல காரணம் உண்டு. சமூக வலைதளங்களில் பேசும் முதுகெலும்பற்றவர்களை கண்டுகொள்ள தேவையில்லை. அவர்கள் நேரில் பேச தைரியம் அற்றவர்கள்" என கோலி தெரிவித்தார்.
"மதம் என்பது புனிதமானது மற்றும் தனிநபர் சார்ந்தது. ஒருவரின் மதம் சார்ந்த விஷயத்தில் மற்றொருவர் தலையிடகூடாது,"
"எந்த ஒரு நபருக்கும் ஒரு சூழல் குறித்த அவர்களின் கருத்தை தெரிவிக்க சுதந்திரம் உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில், ஒருவர் மீது மதம் சார்ந்து பாகுபாடு காட்டுவதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது"
நாட்டிற்காக அவர் சிறப்பாக செயலாற்றியதை தவிர்த்துவிட்டு இவ்வாறு பேசுபவர்கள் குறித்து, யோசித்து தாம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் கோலி தெரிவித்தார்.
இம்மாதிரியான சர்ச்சைகள் அணியின் உத்வேகத்தை பாதிக்காது என்றும் வீரர்களை பாதிக்காத ஒரு பாதுகாப்பு அரனை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.
மேலும் 200 சதவீதம் ஷமிக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் இம்மாதிரியாக தவறாக பேசி வருபவர்கள் குறித்து கருத்து தெரிவித்த கோலி, "அது ஒரு மோசமான செயல்" என தெரிவித்துள்ளார்.
"பலர் தங்கள் அடையாளத்தை மறைத்து இம்மாதிரியாக செய்கிறார்கள். அதன்மூலம் பொழுதுபோக்கு அடைகிறார்கள். இன்றைய அளவில் இது துரதிஷ்டவசமானது."
இந்தியாவின் சார்பாக விளையாடும் பலரும் பல தியாகங்களை மேற்கொள்கிறார்கள் என்றும் அது பலருக்கும் தெரியாது என்றும் கோலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு 151ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
பாகிஸ்தான் அணி எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் இலக்கை எட்டிப்பிடித்தது.