பொற்கொல்லர் தொழில் நசிவு, லாட்டரி: 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட தம்பதி

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:57 IST)
லாட்டரி சீட்டு மோகம் மற்றும் தொழில் நசிவு காரணமாக விழுப்புரத்தை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி ஒருவர் தனது குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றுவிட்டு தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரைப் பகுதியில் வசித்து வரும் அருண் என்பவருக்கு சிவகாமியுடன் திருமணமாகி, பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என்று மூன்று பெண் குழந்தைகள் இருந்தன.

சொந்தமாக நகை செய்யும் தொழில் செய்து வந்த அருண், அந்த தொழில் நசிந்ததை அடுத்து, கூலிக்கு நகைத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் வழக்கம் தொற்றிக்கொண்டது. தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இதனால் குடும்பம் நடத்த முடியாமல் மன உளைச்சலில் தவித்து வந்த அருண், நேற்று இரவு தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்ட பிறகு மனைவியுடன் சேர்ந்து தானும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார் அருண்.

அதில் தொழில் நசிவு, அதற்கு சங்கத்தால் உதவ முடியாமல் போனது பற்றியெல்லாம் பேசியுள்ள அவர், தன்னைப் போன்றவர்களை காப்பாற்றுவதற்கு, மூன்று சீட்டை ஒழிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் உயிரிழந்த 5 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். மேலும், லாட்டரி சீட்டு விற்பவர்கள் தொடர்பாக 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தொழிலில் நஷ்டத்தால் தற்கொலை"

தற்கொலை சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கூறுகையில், "அருண் இறப்பதற்கு காரணம் லாட்டரி சீட்டு மட்டுமே காரணம் கிடையாது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு அதற்கு வட்டி கட்ட முடியாமல்தான் தற்கொலை செய்துள்ளார்," என்றார் அவர்.

மேலும், "இந்த வருடத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 200வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் நகரத்தில் மட்டும் 143 வழக்குகள் பதிவு செய்து, 155 நபர்களை லாட்டரி விற்பனைக்காக கைது செய்திருக்கிறோம்," என்றார் அவர்.

தொடர்ந்து, "சிறப்பு சோதனையின் போது, சட்டவிரோதமாக செஞ்சி மற்றும் வலத்தி பகுதியில் லாட்டரி விற்பனை செய்த நபர்களை கைது செய்து, அப்பகுதியில் நடவடிக்கை எடுக்கத் தவறிய இரண்டு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடந்த தற்கொலை சம்பவத்திற்கு பிறகு 13நபர்களை கைது செய்துள்ளோம். தொடர்ந்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்