கொரோனா தடுப்பூசி இந்திய நிறுவனங்களை குறி வைத்த சீன ஹேக்கிங் குழு
செவ்வாய், 2 மார்ச் 2021 (14:33 IST)
இந்தியாவின் இரண்டு முக்கிய கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளை, சீன அரசின் உதவி பெறும் ஹேக்கர் குழு இலக்கு வைத்ததாக சைஃபர்மா (Cyfirma) என்கிற சைபர் நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளைத் தான் இந்தியா தமது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்தின் கீழ் மக்களுக்குச் செலுத்தி வருகிறது.
தற்போது உலக அளவில் செலுத்தப்பட்டு வரும் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீத தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளராக சீரம் இன்ஸ்டிட்யூட் இருக்கிறது.
சிங்கப்பூர் மற்றும் டோக்யோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைஃபர்மா என்கிற நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் என்கிற மிகப் பெரிய நிறுவனத்தின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சீனாவின் ஏபிடி10 (ஸ்டோன் பாண்டா என்றும் அழைக்கப்படுகிறது) என்கிற ஹேக்கிங் குழு, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு, சப்ளை செயின் மென்பொருள் போன்றவைகளில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டு பிடித்திருப்பதாக சைஃபர்மா நிறுவனம் கூறியுள்ளது.
"அறிவுசார் சொத்துகளை கைப்பற்றுவது மற்றும் இந்திய மருந்து நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளும் விதத்தில் சாதக நிலையை அடைவது தான் இதன் உண்மையான நோக்கம்" என சைஃபர்மா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி குமார் ரித்தேஷ் கூறியுள்ளார். இவர் பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ 6-ன் சைபர் பிரிவில் பெரிய அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏபிடி10 அமைப்பு, பல நாடுகளுக்காக ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனத்தின் கோவிஷீல்டைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட்டைக் குறி வைக்கிறது. இதே சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், விரைவில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தையும் தயாரிக்க இருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
"ஹேக்கர்கள் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் பல பலவீனமான வலைதள சர்வர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் பலவீனமான வலைதள செயலி குறித்தும், அதன் விவரங்களை பலவீனமாக நிர்வகிக்கும் அமைப்பு குறித்தும் பேசினர்" என ரித்தேஷ் கூறினார்.
750 சைபர் குற்றவாளிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட ஹேக்கிங் குழுக்களை DeCYFIR என்கிற சாதனம் மூலம் கண்காணித்து வருகிறார் ரித்தேஷ். இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து என்ன மாதிரியான தடுப்பு மருந்து தொடர்பான விவரங்களை ஏபிடி10 அமைப்புக்கு கிடைத்திருக்கும் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் ரித்தேஷ்.
சீனாவின் வெளியுறவுத் துறையிடம் இந்த ஹேக்கிங் முயற்சி குறித்துக் கேட்ட போது எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என ராய்டர்ஸ் முகமை கூறியுள்ளது. அதே போல சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமும் இது குறித்துப் பேசவில்லை என ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் CERT என்றழைக்கப்படும் இந்திய கணினி அவசரகால எதிர்வினைக் குழுவின் ஆபரேஷன் இயக்குநர் எஸ்.எஸ்.ஷர்மாவிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. CERT ஒரு சட்ட ரீதியிலன மூகமை என்பதால், தங்களால் இதைக் குறித்து ஊடகத்திடம் உறுதிப்படுத்த முடியாது என ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார் எஸ்.எஸ்.ஷர்மா.
CERT அமைப்பிடம் இந்த ஹேக்கிங் குறித்து தெரியப்படுத்தியதாகவும், அந்த அச்சுறுத்தலை CERT அமைப்பு ஒப்புக் கொண்டதாகவும் சைஃபர்மா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு, சீன உள்துறைப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏபிடி10 அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்காவின் நீதித் துறை குறிப்பிட்டது நினைகூரத்தக்கது.
ரஷ்யா மற்றும் வட கொரியா போன்ற நாடுகளில் இருந்து, கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் இந்தியா, கனடா, பிரான்ஸ், தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மருந்து நிறுவனங்களைக் உறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 2020 நவம்பரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுட்டிக் காட்டியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு தொடர்பான விவரங்கள், ஹேக் செய்யப்பட்டதாக ஃபைசர் மற்றும் பயோ என் டெக் ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் கடந்த 2020 டிசம்பரில் கூறியது.