தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:29 IST)
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) மாலையில் வெளியிடும் என்று தகவல் வந்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும்.
இதனால் அரசியல் கட்சிகள் எவ்வித மக்கள் திட்டங்களையும் அறிவிக்க கட்டுப்பாடு எழும். அதே சமயம், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால், அதன் அமலாக்கத்தில் எந்த கட்டுப்பாடும் இருக்காது.
இந்தப்பின்னணியில், தமிழ்நாட்டில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமது அரசின் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியிட்டார். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
நடத்தை விதிகள் என்ன கூறுகின்றன?
ஒரு மாநிலத்தில் அல்லது தேசிய அளவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுவான தேர்தல் நடத்தை விதிகள் உள்ளன.
இவை மட்டுமல்லாது மத்தியில் அல்லது தேர்தல் நடக்க உள்ள மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு என்று தனியான சில நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டபின் ஆளும் கட்சியினர் விதிமீறலில் ஈடுபடுகிறார்களா என்பதை அறிய இந்த விதிகளை அறிந்துவைத்திருப்பது உங்களுக்கு உதவும்.
அவற்றை பிபிசி தமிழ் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.
1.அரசுமுறைப் பயணத்தின் போது அமைச்சர்கள் தேர்தல் பரப்புரை உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது; தேர்தல் செயல்பாடுகளுக்காக அரசு நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்களை அமைச்சர்கள் பயன்படுத்தக்கூடாது.
2.அரசு செலவில் விமானம், சாலைப் போக்குவரத்து மேற்கொள்வது கூடாது. அரசு நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் என எதையும் ஆளும் கட்சியின் நலன்களை முன்னெடுப்பதற்காக யாரும் பயன்படுத்தக்கூடாது.
3.மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களை ஆட்சியிலுள்ள கட்சியினர் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பொது இடங்களில் இருக்கும் வசதிகளை ஆளும் கட்சியினர் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதே அளவுக்கு, அதே கட்டுப்பாடுகளுடன் பிற கட்சியினரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
4.அரசு ஓய்வு இல்லங்கள், பயணியர் மாளிகைகள் உள்ளிட்டவற்றை ஆளும் கட்சியினர் மட்டுமல்லாது பிற கட்சியினரும், வேட்பாளர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆனால் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களை பரப்புரை அலுவலகமாகவோ அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்காகவோ எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரும் பயன்படுத்தக்கூடாது.
5.செய்தித்தாள்கள் மற்றும் பிற அரசு ஊடகங்களில் அரசு பணத்தில் ஆளும் கட்சி விளம்பரம் வெளியிடுவது, ஆளும் கட்சியின் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில் அரசு ஊடகங்கள் ஒரு சார்பாக செய்தி வெளியிடுவது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
6.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிதி எதையும் செலவிடுவதற்கும், புதிதாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் ஒப்புதல் எதையும் வழங்கக்கூடாது.
(வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவற்றுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும்.)
7.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அமைச்சர்கள் மற்றும் பிற அரசு அலுவலர்கள் நிதி உதவி எதையும் அறிவிக்கக் கூடாது; திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டக் கூடாது; சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கக்கூடாது.
8.குடிமைப் பணிகளில் உள்ள அதிகாரிகள் திட்டங்களை தொடங்குவது, அடிக்கல் நாட்டுவது உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம்.
9.தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆளும் கட்சிக்கு பலன் அளிக்கக்கூடிய வகையில் நியமனங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது.
10.ஒன்றிய அல்லது மாநில அமைச்சர்கள் வேட்பாளர், வாக்காளர் அல்லது அரசியல் கட்சியின் முகவர்கள் என்ற முறையில் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்; மேற்கண்ட மூன்று வகைப்பாடுகளுக்குள் வராமல், அமைச்சர் பதவியில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி கிடையாது.