ஜக்கி வாசுதேவ்: "அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும்"

ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (13:03 IST)
(இன்று (28.02.2021, ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும் என்று ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவு ஒன்றில், கோயில் என்பது தமிழ் மக்களுக்கு ஆன்மாவைப் போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து போயுள்ளன.

2020-ம் ஆண்டு இந்து அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 34,000 கோயில்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் வருகிறது. இதேநிலை நீடித்தால், அடுத்த 100 ஆண்டுகளில் முக்கியமான 10 கோயில்களைத் தவிர்த்து மற்ற அனைத்து கோயில்களையும் இல்லாமல் செய்துவிடுவார்கள். எனவே, தமிழகத்தில் இருக்கும் கோயில்கள் அரசாங்கத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும்" இவ்வாறு அந்த காணொளியில் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பிரதமராக ராகுலையே விரும்பும் தமிழகம், கேரளம்"

நாட்டின் பிரதமராக நரேந்திர மோதியைக் காட்டிலும் ராகுல் காந்தியையே தமிழகம் மற்றும் கேரள மக்கள் அதிகம் விரும்புவதாக ஐஏஎன்எஸ் - சி-வோட்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பிரதமரை நேரடியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களிடம் வழங்கப்பட்டால் நீங்கள் நரேந்திர மோதியைத் தேர்வு செய்வீர்களா அல்லது ராகுல் காந்தியைத் தேர்வு செய்வீர்களா என்று ஆய்வில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ராகுல் காந்தியையே பிரதமராகத் தேர்வு செய்வேன் என கேரளத்தில் 57.2 சதவிகிதத்தினரும், தமிழகத்தில் 43.46 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். கேரளத்தில் 36.19 சதவிகிதத்தினர் மற்றும் தமிழகத்தில் 28.16 சதவிகிதத்தினர் மட்டுமே நரேந்திர மோதியைப் பிரதமராகத் தேர்வு செய்ய விரும்புவதாகக் கூறினர்.

பேரவைத் தேர்தல் வரவுள்ள மற்ற 3 மாநிலங்களில் நரேந்திர மோதியே ஆதிக்கம் செலுத்துகிறார். மேற்கு வங்கத்தில் 54.13 சதவிகிதத்தினரும், அசாமில் 47.8 சதவிகிதத்தினரும், புதுச்சேரியில் 45.54 சதவிகிதத்தினரும் மோதிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட 250 ரூபாய் வரை சேவை கட்டணம்?

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் மருத்துவமனைகள் ஒரு டோஸூக்கு 250 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த 24-ந் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தடுப்பூசி திட்டத்தின் 2-வது கட்டத்தை மார்ச் 1-ந் தேதி (நாளை) தொடங்குவது எனவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட வியாதிகளுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தடுப்பூசிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும், தனியார் மருத்துவமனைகளுடனும் கலந்து ஆலோசித்து மத்திய சுகாதார அமைச்சகம் 3 அல்லது 4 நாளில் அறிவிக்கும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு தனியார் மருத்துவமனைகள் ஒரு டோஸூக்கு 250 ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்