காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்"

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (23:37 IST)
தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும்.
 
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உள்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று கூறியிருக்கிறது.
 
ஐநாவின் உலக பாரம்பரிய இடங்களில் மூன்றில் ஒரு மடங்கு இடம் பெற்றுள்ள பனிப்பாறைகள் 30 ஆண்டுகளுக்குள் உருகிவிடும் என்றும் யுனெஸ்கோ அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

 
கிளிமஞ்சாரோ சிகரத்தின் கடைசி பனிப்பாறைகள், ஆல்ப்ஸ், அமெரிக்காவின் யோசெமிட்டி தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் போல உருகி மறைந்து விடும்.

 
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் எதுவாக இருந்தபோதிலும் அவை உருகுவதை தடுக்க முடியாது என அந்த அறிக்கையை எழுதியவர்கள் கூறியுள்ளனர்.

 
செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை, எகிப்து நடைபெற்று வரும் COP27 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

 
ஐநாவின் 50 உலக பாரம்பர்ய இடங்களில் 18,600 பனிப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் , உள்ளூர் மக்கள் புனிதமாக கருதும் இடங்கள் உள்ளிட்ட பூமி பரப்பில் உள்ள ஏறக்குறைய 10 சதவிகித பனிப்பாறைகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

 
பனிப்பாறைகள் காணமல் போவது, பின்னடைவு என்பது புவி வெப்பமடைவதற்கான மிக தீவிரமான சாட்சியங்களில் ஒன்றாகும் என அறிக்கை குறிப்பிடுகிறது.

 
"நாம் தவறாக கருதி இருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம். ஆனால், இது ஒரு கவனத்தில் கொள்ளக்கூடிய அறிவியலாகும்," என அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான யுனெஸ்கோவின் திட்ட அலுவலர் டேல்ஸ் கார்வாலோ ரெசெண்டே கூறுகிறார்.

 
"இது உண்மையில் நடப்பதை நாம் காணக்கூடிய ஒன்றாக இருப்பதால், பருவநிலை மாற்றத்தை முன்னறிவிக்கக்கூடிய மதிப்பு மிக்க ஒன்றாக, பனிப்பாறைகள் திகழ்கின்றன," என்றும் அவர் தெரிவிக்கிறார்.

 
மூன்றில் இரண்டு மடங்கு ஐநா உலக பாரம்பர்ய இடங்களில் உள்ள பனிப்பாறைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், உலகம் வெப்பமடைவதை 1.5 சென்டிகிரேட் ஆக வரம்புக்கு உட்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என அறிக்கையின் எழுத்தாளர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்த இலக்கை அடைவதற்கு நம்பகமான எந்த ஒரு வழியும் இப்போதைக்கு உலகின் முன்பு இல்லை என்று கடந்த வாரம் வெளியான ஐநாவின் இன்னொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
உலகின் பாரம்பர்ய இடமான பனிப்பாறைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முந்தைய அறிக்கையின் அடிப்படையில் இந்த கணிப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
 
எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள் - அடிவார முகாமை மாற்றும் நேபாளம்
பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் ஆபத்து
அண்டார்டிகாவில் குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய அதிசயம்
 
"வரலாற்றுப் பதிவில் மிகவும் முன்னோடியில்லாத விஷயம் என்னவென்றால், இது எவ்வளவு விரைவாக நடக்கிறது என்பதுதான்" என பஃபலோ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் பீட்டா க்சாத்தோ கூறினார். ஆனால், இவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.

 
"1900ஆம் ஆண்டுகளின் மத்தியில் பனிப்பாறைகள் மிகவும் நிலையாக இருந்தன," என்ற அவர், "பின்னர் நம்பமுடியாத வகையிலான இந்த வேகமான பின்னடைவு நேரிட்டது," என்றும் கூறினார்.

 
2050ஆம் ஆண்டுக்குள் காணாமல் போகும் பனிப்பாறைகளின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியல்

 
ஹிர்கேனியன் காடுகள் (இரான்)
 
டர்மிட்டர் தேசிய பூங்கா (மான்டினீக்ரோ)
 
விருங்கா தேசிய பூங்கா (காங்கோ ஜனநாயக குடியரசு)
 
ஹுவான்லாங் இயற்கை மற்றும் வரலாற்று ஆர்வப் பகுதி (சீனா)
 
யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (அமெரிக்கா)
 
மவுன்ட் கென்யா தேசிய பூங்கா/இயற்கை காடு (கென்யா)
 
பைரனீஸ் மாண்ட் பெர்டு (பிரான்ஸ், ஸ்பெயின்)
 
ருவென்சோரி மலைகள் தேசிய பூங்கா (உகாண்டா)
 
புடோரானா பீடபூமி (ரஷ்யா)
 
சுவிஸ் டெக்டோனிக் அரினா சர்டோனா (சுவிட்சர்லாந்து)
 
நஹன்னி தேசிய பூங்கா (கனடா)
 
லோரென்ட்ஸ் தேசிய பூங்கா (இந்தோனேசியா)
 
ரேங்கல் தீவு ரிசர்வ் இயற்கை அமைப்பு (ரஷ்யா)
 
கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா (தான்சானியா)
 
யோசெமிட்டி தேசிய பூங்கா (அமெரிக்கா)
 
டோலமைட்ஸ் (இத்தாலி)
 
விர்ஜின் கோமி காடுகள் (ரஷ்யா)

 
உலக பாரம்பரிய இடங்களில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகியதன் காரணமாக 2000ஆவது ஆண்டு மற்றும் 2020ஆவது ஆண்டுக்கும் இடையே உலக அளவில் கடல் மட்டமானது 4.5 சதவிகிதம் உயர்ந்ததை காண முடிந்தது.

 
இந்த பனிப்பாறைகள் ஒவ்வோர் ஆண்டும் 58 பில்லியன் ஐஸ்கட்டிகளை இழந்தன. இது பிரான்ஸ், ஸ்பெயின் இரு நாடுகளும் சேர்ந்து ஆண்டு முழுவதும் உபயோகிக்கும் தண்ணீர் அளவுக்கு சமமானதாகும்.
 
 
பல்வேறு உள்ளூர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காகவும், வேளாண் உபயோகத்துக்காகவும் பனிப்பாறைகளை நம்பி உள்ளனர். அவர்களின் இழப்பு என்பது வறண்ட காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி இட்டுச் செல்லும் என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் டங்கன் குயின்சி கூறுகிறார். இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபடவில்லை.

 
"இந்த தண்ணீரை தங்களது பயிர்களின் பாசனத்துக்கு அவர்கள் பயன்படுத்துவதால் இது உணவு பாதுகாப்பு விஷயங்களை நோக்கி இட்டுச்செல்லும்," என குயின்சி கூறுகிறார்.
 
 
பனிப்பாறை இழப்பால் உருவாகும் வெள்ளம் காரணமாக உள்ளூர் சமூகத்தினர் , பழங்குடியின மக்கள் விரும்பத்தகாத சூழலை எதிர்கொள்ள நேரிடும் என இந்த அறிக்கையின் எழுத்தாளர்கள் கூறுகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை செய்யும், அபாயத்தை குறைக்கும் பேரழிவு மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 
எனினும், உலகம் வெப்பமயமாதலின் வரம்பை குறைக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது என்பது மிகவும் வெளிப்படையான விஷயமாகும்.

 
"இந்த ஒரு செய்தியே இங்கே நம்பிக்கையாக இருக்கிறது," என்கிறார் கார்வாலோ ரெசெண்டே. "உமிழ்வை வெகுவாகக் குறைப்பதை நம்மால் நிர்வகிக்க முடிந்தால், இந்த பனிப்பாறைகளில் பெரும்பாலானவற்றை நம்மால் திறம்பட பாதுகாக்க முடியும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

 
"இது ஒவ்வொரு மட்டத்திலும் நடவடிக்கை எடுப்பதற்கான உண்மையான ஒரு அழைப்பாகும். அரசியல் மட்ட அளவில் மட்டுமின்றி, மனிதர்களாகிய நமது மட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய அழைப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்