‘சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்’ - ஆச்சர்ய இயக்குநர்

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (14:13 IST)
தமிழ் திரையுலகில். ஏராளமான வெற்றி படங்கள் வெளிவந்து இருந்தாலும் திருப்புமுனை திரைப்படங்கள் அல்லது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் சில மட்டுமே.
 

 
ரசிகர்கள் என்றும் கொண்டாடும் அப்படிப்பட்ட திரைப்படம்தான் செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் காலமான இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படம்.
 
1979-ஆம் ஆண்டு தமிழில் வந்த திரைப்படங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் உதிரிப்பூக்கள்.
 
சரத்பாபு, அஸ்வினி நடித்த இந்த திரைப்படத்தில் விஜயன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
 
ஃபார்முலாக்களை உடைத்தவர்
 
தமிழ் திரையுலகில் படம் வெற்றி பெற என சில ஃபார்முலாக்கள் உள்ளன. அவற்றை எல்லாம் உதிரிப்பூக்கள் படம் மூலம் மகேந்திரன் மாற்றிக்காட்டினார்.
 
'முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி பேசும் 'கெட்ட பையன் சார் இந்த காளி' வசனத்தை வேறு யாரும் பேசியிருந்தால் இந்த அளவு தாக்கம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியாது.
 
பொதுவாக தங்கள் திரைப்படங்களில் பிரபல கதாநாயகர்களின் புகழ்பாட பல வசனங்களை இயக்குநர்கள் சேர்ப்பது வழக்கம். மகேந்திரனின் திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சியமைப்புகளை நாம் காணமுடியாது.
 
உதிரிப்பூக்கள் தவிர ரஜினிகாந்த் நடித்த முள்ளும்மலரும் மற்றும் ஜானி ஆகியவை மகேந்திரனுக்கு மிகவும் பெயர் வாங்கித் தந்தவை.
 
ஜானி படத்தில் ஒரு பாடகியாக தோன்றும் ஸ்ரீதேவியை மகேந்திரன் உருவகப்படுத்தியிருப்பதுபோல மிக சில இயக்குநர்களே அவரை காட்டியிருப்பர்.
 
இன்றும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனனில் ஜானி திரைப்பட பாடல் ஒன்று ஓலித்து கொண்டிருக்கும்.
 
என்றும் தித்திக்கும் இந்த பாடல்களை பாடியது சைலஜா, ஜென்சி, ஜானகி ஆகியோர்தான் என்றாலும் காட்சிப்படுத்தியதும், உருவாக்கியதும் மகேந்திரன் தானே.
 
இதுபோல மகேந்திரனின் இலக்கியத்தில் வெளிவந்த மற்றொரு முக்கிய திரைப்படம் நெஞ்சத்தை கிள்ளாதே. மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை குவித்த திரைப்படம் நெஞ்சத்தை கிள்ளாதே.
 
''மகேந்திரன் போல ஒரு இயக்குநர் மிக அபூர்வம். மிகவும் வெற்றிகரமான இயக்குநராக செயல்பட்ட காலத்தில் அவர் நினைத்திருந்தால் ஏராளமான படங்களை இயக்கி இருக்கலாம். ஆனால், தரமான படங்களை தருவது மட்டுமே அவரின் கோட்பாடாக இருந்தது. சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்'' என்கிறார் மகேந்திரனின் திரைப்பட ரசிகரும், தமிழ் சினிமா ஆர்வலருமான பிரபாகரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்