தமிழ் திரையுலகில் ரஜினியை ஒரு நடிகராக அடையாளம் காட்டிய படமென்றால் அது முள்ளும் மலரும்தான். அது மகேந்திரன் இயக்கிய முதல்படமாகும். அதன் பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன் குருநாதரான கே பாலசந்தர் ‘உனக்குப் பிடித்த இயக்குனர் யார் ?’ என்ற கேள்வியைக் கேட்ட போது, ரஜினி சற்றும் யோசிக்காமல் சொன்ன பெயர் மகேந்திரன்.
ஒரு வார காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சனைக் காரணமாக டயாலிஸிஸ் செய்யப்பட்டது. ஆனால் வயது மூப்புக்காரணமாக அவரது உடல் டயாலிஸிஸிற்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79. இது திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.