சீனா - தைவான் பதற்றம்: தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு "போர் என்று பொருள்" - சீனா கடும் எச்சரிக்கை
சனி, 30 ஜனவரி 2021 (14:36 IST)
சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் "போர் என்று பொருள்" என சீனா எச்சரித்துள்ளது.
சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தைவானுக்கு உதவுவது குறித்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பின், இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
சீனாவின் இந்த எச்சரிக்கை துரதிர்ஷ்டவசமானது, என அமெரிக்கா கூறியுள்ளது.
தைவானை எளிதில் வீழ்த்தக் கூடிய பிராந்தியமாகப் பார்க்கிறது சீனா. ஆனால் தைவானோ, தனி அரசியலமைப்புச் சட்டம், ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு தனி நாடாக பறைசாற்றிக் கொள்கிறது.
தைவான் அரசு, அந்த நாட்டை ஒரு சுதந்திர நாடாக ஒரு முறைப்படி அறிவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து சீனா கவலை கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதிபர் சாய் இங்-வென் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் பணியில் ஈடுபடுவதைத் தடுக்க விரும்புகிறது சீனா.
தைவான் ஏற்கனவே ஒரு சுதந்திர நாடு, அதை மீண்டும் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவது தேவையற்றது என தொடர்ந்து கூறி வருகிறார் அதிபர் சாய் இங்-வென்.
சீனா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான், கடந்த வியாழக்கிழமை, தைவானுக்கு அருகில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார். தைவான் நீரிணையில் (Taiwan Strait) நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலில் இந்த ராணுவ நடவடிக்கைகள் அவசியம் எனவும், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
"அந்நிய சக்திகளின் தலையீடுகளுக்கும், தைவான் சுதந்திர படைகளின் தூண்டுதலுக்கும் இது தக்க பதிலடி" என்ற கியான், ஒருபடி மேலே சென்று, "தைவானின் சுதந்திரம் தொடர்பாக பேசுபவர்களை எச்சரிக்கிறோம். நெருப்போடு விளையாடுபவர்கள், தங்களைச் சுட்டுக் கொள்வார்கள். தைவான் சுதந்திரம் என்றால் போர் எனப் பொருள்" என்று நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்ன சொல்கிறது அமெரிக்கா?
சீனாவின் இந்த எச்சரிக்கை தொடர்பாக, அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை பதிலளித்தது.
"சீனாவின் கருத்து துரதிர்ஷ்டவசமானது" என பென்டகனின் ஊடகச் செயலர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார்.
தைவான் விவகாரம் "போர் போன்ற சூழலை நோக்கிச் செல்ல எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை" என பென்டகன் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு நல்ல நிலையில் இல்லை என்றாலும் மனித உரிமை பிரச்சனைகள், வர்த்தகப் பிரச்சனைகள், ஹாங்காங் விவகாரம், தைவான் விவகாரம் என சீனா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க ஜோ பைடன் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது.
சீனா - தைவான் பிரச்சனை
1949-ம் ஆண்டு நடந்த சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சீனா மற்றும் தைவான் ஆகிய இரண்டும் தனித் தனியே அரசாங்கங்களை நடத்தி வருகிறார்கள். எனினும், தைவானின் சர்வதேச நடவடிக்கைகளைத் தடுக்க கடந்த பல ஆண்டுகளாக சீனா முயற்சித்து வருகிறது.
இரண்டு தரப்பினருமே பசிஃபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தைவானை கட்டுப்படுத்த சீனா தன் பலத்தையும் பயன்படுத்தவும் சளைக்காது என்ற சூழ்நிலை நிலவுகிறது.
தைவானை வெகு சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்தாலும், தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், உலக நாடுகளுடன் வலுவான வணிக மற்றும் முறைசாரா உறவுகளை கொண்டுள்ளது.
அமெரிக்காவும் உலகின் பெரும்பாலான நாடுகளை போலவே தைவானுடன் ராஜீய ரீதியில் எந்த ஒரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அமெரிக்க சட்டம் ஒன்று, தைவான் தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான உதவிகளை வழங்க வழிவகை செய்கிறது.