கீழடி: கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு

வியாழன், 9 ஜூலை 2020 (14:26 IST)
கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில், நேற்று  மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 19-ம் தேதி குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டது. கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
 
ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் நான்கு தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.
 
கடந்த ஜூன் 19-ம் தேதி நடந்த அகழாய்வில் 75 செ.மீ நீளமுள்ள குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது.மேலும் இந்த இடத்தில் அகழாய்வு பணிகள் நடந்த போது நேற்று 95 செ.மீ நீளத்தில் மற்றொரு குழந்தையின் எலும்புகூடு கிடைத்தது. 
 
இடுகாடாக பயன்படுத்தப்பட்ட கொந்தகையில் முதல், 2ம், 3ம் நிலை எலும்பு துண்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. குழந்தையின் எலும்பு கூடுகள் 3ம் நிலை என கருதப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்