பாக். ஆணவக்கொலை: மாடலிங் செய்த அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி!
புதன், 11 மே 2022 (15:31 IST)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், தமது தம்பி ஹம்சா காலித் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹைதராபாத் ஆணவக்கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கும் உள்ளது. சித்ராவை சுட்டுக் கொன்ற ஹம்சா மீது ஆணவக்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. "சித்ரா காலித் மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஃபைசலாபாத்தில் மாடலிங் செய்து வந்தார். ரமலான் மாதத்தில் ஓக்ராவில் உள்ள தனது வீட்டிற்கு அவர் வந்தார். ஈத் முடிந்து அவர் வேலைக்குத்திரும்ப முற்பட்டபோது, குடும்ப உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்," என்று ஓக்ராவின், ரெனாலா நகர SHO , இன்ஸ்பெக்டர் ஜாவேத் கான் தெரிவித்தார்.
சித்ரா கொலைக்கான காரணம் குறித்துப்பேசிய இன்ஸ்பெக்டர் ஜாவேத்," மாடலிங்கில் இருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதுதான் கொலைக்குக் காரணம்," என்று கூறினார். சித்ரா காலித்தின் தாயாரின் புகாரின் பேரில் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதான சித்ரா காலித் , பட்டப்படிப்பு முடித்திருந்தார். அவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். ஒரே சகோதரனான 20 வயதான ஹம்சா இந்த கொலையை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
"சித்ராவின் குடும்ப உறுப்பினர்கள் மாடலிங் செய்வதை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால் அவர் மாடலிங்கிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரது தம்பி ஹம்சாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது."என்று இன்ஸ்பெக்டர் ஜாவேத் கான் குறிப்பிட்டார்.
சம்பவத்தின்போது சித்ராவின் தந்தையும் வீட்டில் இருந்துள்ளார். அவரும் சித்ராவை தடுக்க முயன்றார். சித்ரா அவர் சொல்வதை கேட்க மறுத்தபோது ஹம்ஸா தனது தந்தையின் துப்பாக்கியால் அவரை சுட்டார் என்றும் தோட்டா சித்ராவின் இடது கண்ணின் மேல் பகுதியில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தனர். குற்றவாளி ஹம்சா தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த ஆணவக் கொலையில் குடும்பத்தின் வேறு உறுப்பினர்களுக்கு பங்கு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஆணவக்கொலை
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கெளரவத்தின் பெயரால் சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், தனது 2021 ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆயினும், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு 478 ஆணவக்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. கெளரவத்தின் பெயரால் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் ஒவ்வொரு வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் பெண்கள் உரிமைக்காகப் பணியாற்றும் அமைப்புகள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலரான நூர் மகத்தம் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானில் பெண்கள் கொல்லப்படுவதைக் கருத்தில் கொண்டு அவசரநிலையை அமல்படுத்துமாறு 2021 ஆம் ஆண்டு கோரியதாக தெரிவித்துள்ளது.
கந்தீல் பலூச் கொலைக்குப் பிறகு விவாதம்
பாகிஸ்தானில், ஆணவக்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும் இது குறித்து நாடு முழுவதும் விவாதங்களையும் பார்க்க முடிகிறது. இந்த ஆணவக்கொலை வழக்குகளில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அதாவது கணவர், தந்தை, மகன், சகோதரர், ஒன்றுவிட்ட சகோதரர் போன்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். விருப்பப்படி திருமணம் செய்துகொள்வது முதல் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது போன்றவை இந்தக் கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.
இன்றும் கூட பாகிஸ்தானில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிவது மற்றும் மாடலிங் செய்வது பெண்களுக்கான நல்ல தொழிலாக கருதப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சித்ரா காலித்தைப் போலவே மாடல் கந்தீல் பலூச், 2016 இல் தனது சகோதரர் வாசிம் கானால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். கந்தீல் பலூச் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். ஆணவக்கொலை வழக்கில் இறந்தவரின் குடும்பத்தினர் மன்னித்தாலும்கூட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற புதிய சட்டத்தை கந்தீல் பலூச்சின் கொலைக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
புதிய சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று இஸ்லாமிய சட்டங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது பாகிஸ்தானின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் இந்த சட்டத்தை பாராட்டுகின்றனர்.
கந்தீல் பலூச் கொலை வழக்கில், குற்றவாளி வாசிம் கானுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் லாகூர் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
சாட்சிகள் தங்கள் வாக்குமூலத்தை மாற்றிச் சொன்னதாலும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்தத்தாலும் இது நடந்தது. லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் கந்தீல் பலூச்சிற்கு நீதி கேட்டு போராடும் சமூக ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.