அணுகுண்டு: ஐன்ஸ்டீனை ஓரங்கட்டிய அமெரிக்காவுக்கு ஓபன்ஹெய்மர் மீது சந்தேகம் ஏன்? இருவருக்கும் என்ன உறவு?
திங்கள், 31 ஜூலை 2023 (22:07 IST)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் ஆகியோர் பிரின்ஸ்டன் இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடியில் ஒன்றாகப் பணியாற்றினர்.
"இப்போது உங்கள் சாதனைகளின் விளைவுகளைச் சமாளிப்பது உங்கள் பொறுப்பாக மாறியுள்ளது"
ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் 1940 களில் அமெரிக்க அரசின் மன்ஹாட்டன் திட்டத்திற்கு தலைமை தாங்கி அணுகுண்டின் "தந்தை" எனப்பெயர் பெற்றார். இதை விவரிக்கும் வகையில் அண்மையில் அவரது பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சி ஒன்றில் இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சக ஊழியரான ராபர்ட் ஓப்பன்ஹெய்மரிடம் கூறும் வாக்கியம் இதுதான்.
இத்திரைப்படத்தில், ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் தோன்றுகிறார். அவர் 1947 முதல் 1966 வரை பிரின்ஸ்டன் இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடியின் இயக்குநராக இருந்த ஓப்பன்ஹெய்மரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.
அவர்கள் தங்கள் காலத்தின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் இருவராக விளங்கினர். ஆனால் அவர்கள் இயற்பியலை எவ்வாறு புரிந்துகொண்டனர் என்பதில் அவர்களுக்குள் சில முக்கியமான வேறுபாடுகள் இருந்தன. மேலும் அவர்களின் ஆராய்ச்சி, உலகிற்கு சேவை செய்யுமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை நம்புவதிலும் அவர்களிடம் வித்தியாசம் இருந்தது.
"நாங்கள் நெருங்கிய சக ஊழியர்களாகவும் அதே நேரம் நண்பர்களாகவும் இருந்தோம்," என்று ஓப்பன்ஹெய்மர் 1965 இல் பாரிஸில் ஐன்ஸ்டீன் இறந்த பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறினார்.
இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது படத்தில், இரு இயற்பியல் விஞ்ஞானிகளையும் பல்வேறு உரையாடல்கள் மூலம் அறிமுகப்படுத்துகிறார். இது கற்பனையானது என்றாலும், ஒரு தந்தையைப் போன்ற ஐன்ஸ்டீனின் ஆலோசனையைப் பெற்ற ஓப்பன்ஹெய்மரின் உறவைப் பிரதிபலிக்கிறது.
அது என்னவென்றால், நிஜ வாழ்க்கையில் அவர்கள் முக்கியமான வேறுபாடுகளைப் பராமரித்தாலும், அவர்கள் இருவரும் ஓரளவுக்கு நல்ல நண்பர்களாக இருந்தனர்; அவர்களுக்குள் நிறைய மரியாதை இருந்தது.
கிறிஸ்டோபர் நோலனின் படத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக டாம் கான்டியும், ராபர்ட் ஓப்பன்ஹைமராக சிலியன் மர்பியும் நடித்துள்ளனர்.
இணையான இரண்டு உயிர்கள்
இளம் ராபர்ட் ஓப்பன்ஹைமர் 1920 களில் கோட்பாட்டு இயற்பியலில் பட்டம் பெற்று நிபுணத்துவம் பெற்றபோது, ஐன்ஸ்டீன் ஏற்கனவே இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவராக - அவரது பொது சார்பியல் கோட்பாடு (1915), அமெரிக்க விஞ்ஞானிகளைக் கவர்ந்த பிற படைப்புகளுக்காக - முக்கிய விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.
ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்ததன் காரணமாக, ஐன்ஸ்டீன் ஐரோப்பாவை விட்டு வெளியேறி 1932 இல் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் குடியேறினார். அங்கு அவர் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார்.
சிறிது காலம் கழித்து, ஆகஸ்ட் 1939 இல், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்கு தனது சக ஊழியர் லியோ சிலார்ட் எழுதிய கடிதத்தில் அவர் கையெழுத்திட்டார். அதில், யுரேனியத்தின் பிளவு பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியுடன் ஜெர்மனி அணுகுண்டை தயாரிக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் மாளிகைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
1942 ஆம் ஆண்டில் ஓப்பன்ஹெய்மர் தனது துறையில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தபோது, அமெரிக்க அரசு மன்ஹாட்டன் திட்டத்தை உருவாக்குவதற்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
சிலார்ட் எழுதி, ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட கடிதம் ஆகஸ்ட் 1939 இல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு அனுப்பப்பட்டது.
பல்வேறு ஆதாரங்களின்படி, 64 வயதான ஐன்ஸ்டீன், ஜெர்மன் வம்சாவளி மற்றும் இடதுசாரி கருத்துகளைக் கொண்டவர் என்பதற்காக, மன்ஹாட்டன் திட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை என தெரியவருகிறது. அதே நேரம், அவருக்கும் ஓப்பன்ஹெய்மருக்கும் இடையே இருந்த இயற்பியல் கோட்பாடுகளின் வேறுபட்ட கருத்துகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.
கீ பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்வின் ஆகியோர் எழுதிய "அமெரிக்கன் ப்ரோமிதியஸ்: தி ட்ரையம்ஃப் அண்ட் ட்ரேஜடி ஆஃப் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் (American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer) என்ற புத்தகத்தில் - கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம் இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது - அமெரிக்க இயற்பியலாளர் ஐன்ஸ்டீனை "இயற்பியல் துறையில் பணிபுரிந்த ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; அத்துறையில் அவர் ஒரு புனிதராக வாழ்ந்தவர்," என்று எழுதியுள்ளனர்.
இருவருக்கும் இடையே இருந்த உறவின் வகையை நோலன் தனது படத்தில் பிரதிபலிக்க முயன்றுள்ளார்: " அவர்களுக்கிடையேயான உறவை ஒரு ஆசிரியர் - மாணவர் உறவாகத் தான் நான் பார்க்கிறேன்," என்று அவர் டைம்ஸ் என்ற நியூயார்க் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அணுகுண்டு தயாரிப்பில் ஐன்ஸ்டீன் பங்கேற்றாரா?
மன்ஹாட்டன் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருந்த போது, தான் உருவாக்கிக்கொண்டிருந்த அணுகுண்டு வெடித்தால் அது எந்த அளவுக்கு இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ஓப்பன்ஹெய்மர், அதைப்பற்றித் தெரிந்துகொள்ள ஐன்ஸ்டீனிடம் சென்று அவரது கருத்தை அறிந்துகொள்ள முயன்றதாக இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இது ஒரு அமெரிக்க திரைப்பட இயக்குனரின் ஒரு படைப்பு. உண்மையில் படத்தில் காட்டப்பட்டது போல் எதுவும் நிகழவில்லை.
"நான் மாற்றிய சில விஷயங்களில் ஒன்று, ஓபன்ஹைமர் ஐன்ஸ்டீனிடம் ஆலோசனை நடத்தியது. உண்மையில் அவர், மன்ஹாட்டன் திட்டத்தின் கீழ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு ஆய்வகத்தின் பொறுப்பாளராக இருந்த ஆர்தர் காம்ப்டனிடம் தான் ஆலோசனை நடத்தினார்," என்று கிறிஸ்டோபர் நோலன் அந்தப் பேட்டியில் விளக்கியுள்ளார்.
"ஐன்ஸ்டீன் என்பது பார்வையாளர்களிடையே மக்கள் அறிந்த ஆளுமை என்பதால் அப்படி கதை மாற்றப்பட்டது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
1945 இல் டிரினிட்டி சோதனைக்காக ஒரு கோபுரத்தின் மேல் வைக்கப்பட்ட அணுகுண்டு
ஓப்பன்ஹெய்மர் 1943 மற்றும் 1945 க்கு இடையில் நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பிரின்ஸ்டனில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நியூ மெக்சிகோ இருந்த நிலையில், இவ்வளவு தொலைவு பயணித்து ஐன்ஸ்டீனிடம் அவர் ஏதாவது ஆலோசனை மேற்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் கருத்தரங்கில் ஓப்பன்ஹெய்மர் பேசிய போது, "அணுகுண்டு தயாரிப்பில் ஐன்ஸ்டீன் பணியாற்றியதாகக் கூறப்படும் தகவல்கள், எனக்குத் தெரிந்த அளவில் தவறானவை," என அவராகவே தெரிவித்தார்.
அவரது பார்வையில், 1939 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஜெர்மன் அணுகுண்டு தயாரிப்பது குறித்து ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம், அந்நாட்டு அரசு மட்டத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஓலா, அமேசான், ஃபேஸ்புக், ஜிபே: அனைத்து சேவைகளையும் இனி டிவிட்டரே வழங்கும் - ஈலோன் மஸ்க் புதிய திட்டம்
ஆகஸ்ட் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் முதல் அணுகுண்டு வெடிப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின், ஓப்பன்ஹெய்மருக்கு ஒரு கவலை தொற்றிக்கொண்டது. அணுகுண்டை ஒரு மிரட்டும் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கானோரைக் கொலை செய்யும் ஒரு பேரழிவு சக்தியாகப் பயன்படுத்தியதால், அவர் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார்.
ஐன்ஸ்டீன், சிலார்ட் மற்றும் பல விஞ்ஞானிகள் இந்த அணுகுண்டு வெடிப்பை வெளிப்படையாகவே கண்டித்தனர். நடைமுறையில் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட ஒரு நாட்டின் மீது இதுபோல் பேரழிவுத் தாக்குதல் நடத்துவதைக் கண்டிப்பதாக அவர்கள் கூறினர்.
தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க அரசுக்குப் புரியவைக்க ஓப்பன்ஹெய்மர் மேற்கொண்ட முயற்சிகள், அவருக்கு எதிரான சந்தேகங்களைக் கிளப்பும் காரணிகளானதை கிறிஸ்டோபர் நோலன் விளக்க முற்பட்டுள்ளார். அணுகுண்டைப் பயன்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியதால், ஆட்சியாளர்கள் அவருக்கு எதிராகத் திரும்பி, அவரை கம்யூனிச ஆதரவாளராகச் சித்தரித்தது மட்டுமின்றி சட்ட ரீதியான விசாரணைக்கும் உட்படுத்தினர். அந்த விசாரணையின் போது அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்க கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
ஓப்பன்ஹெய்மரின் உதவியாளராகப் பணியாற்றிய வெர்னா ஹாப்சன் நேரில் பார்த்த ஒரு உரையாடலின் போது, அணுகுண்டு தயாரித்து நாட்டுக்கு உதவிய நிலையில், அவர் மீது திணிக்கப்பட்ட களங்கத்துக்கு ஒருபோதும் பலியாகக் கூடாது என அவருக்கு ஐன்ஸ்டீன் உணர்த்தியதாக பேர்ட் மற்றும் ஷெர்ன் எழுதிய புத்தகத்தில் விவரிக்கின்றனர்.
ஓப்பன்ஹெய்மரிடம் பேசிய ஐன்ஸ்டீன், "உங்களுடைய செயல்களுக்கு அமெரிக்கா உங்களுக்கு வழங்கும் பரிசு இதுவாக இருந்தால், நீங்கள் அதை எதிர்க்கவேண்டும்," என்று கூறினார்.
இருப்பினும், ஓப்பன்ஹெய்மர் "அறிவியலை எவ்வளவு தொலைவுக்கு நேசித்தாரோ, அதே அளவுக்கு அமெரிக்காவையும் ஆழமாக நேசித்தார்," என்று ஹாப்சன் கூறினார்.
இருப்பினும் அமெரிக்காவிடமிருந்து ஓப்பன்ஹெய்மர் எதையும் எதிர்பார்க்கும் நிலை அப்போது இல்லை என்றும், அப்படி எதிர்பார்த்திருந்தாலும் அவர் எதிர்பார்த்தது கிடைத்திருக்காது என்றும் பேர்ட் மற்றும் ஷெர்வின் ஆகியோர் கூறுகின்றனர்.
பிரின்ஸ்டன் இயக்குநராக, ஓப்பன்ஹெய்மர் ஐன்ஸ்டீனின் வீட்டில் ஒரு ஆண்டெனாவை நிறுவியிருந்தார். அதன் மூலம் அவர் நியூயார்க்கில் மிகவும் மிகவும் விரும்பிய கிளாசிக்கல் இசை நிகழ்ச்சிகளைக் கேட்க முடிந்தது என்று பேர்ட் மற்றும் ஷெர்வின் கூறுகிறார்கள்.
இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஐன்ஸ்டீனும், ஓப்பன்ஹெய்மரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அபிமானத்தையும் மரியாதையையும் கொண்டிருந்தனர்.
"ஓப்பன்ஹைமர் ஒரு அசாதாரணமான திறமையான மனிதர், கல்வியில் சிறந்து விளங்குபவர்" என்றும், அவர் "ஒரு விஞ்ஞானி என்பதை விட, ஒரு நல்ல மனிதர்" என்றும் ஐன்ஸ்டீன் பாராட்டினார்.
இதையொட்டி, ஐன்ஸ்டீனின் 10 வது ஆண்டு நினைவு தினம் மற்றும் பொது சார்பியல் கோட்பாட்டின் 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பேசிய ஓப்பன்ஹெய்மர், ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்த மேதையான ஐன்ஸ்டீனின் பங்களிப்பை மிகவும் வித்தியாசமான முறையில் பாராட்டிப் பேசினார்.
"ஐன்ஸ்டீனின் ஆரம்பகால படைப்புகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தன. ஆனால் அவற்றில் ஏராளமான பிழைகள் இருந்தன," என்றும், ஐன்ஸ்டீனின் படைப்புகளை பிழை திருத்தித் தொகுக்க பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
மேலும், "10 ஆண்டுகளுக்கு திருத்தவேண்டிய அளவுக்கு தவறுகளைச் செய்தவராக இருந்தாலும், அவர் ஒரு சிறந்த மனிதர்," என்றார்.