அசுர குரு: சினிமா விமர்சனம்

வெள்ளி, 13 மார்ச் 2020 (16:42 IST)
'வானம் கொட்டட்டும்' படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்து வெளியாகியிருக்கும் படம் அசுரகுரு. வருடம் துவங்கி மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது படம். படத்தின் ட்ரைலர், ஒரு heist படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததால், சற்று எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தது.

படத்தின் கதாநாயகன் (விக்ரம் பிரபு), ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலைபார்த்தபடியே, மிகப் பெரிய கொள்ளைகளில் ஈடுபடுகிறான். அப்படி ஒரு கொள்ளையில் ஈடுபடும்போது, ஒரு போதைப் பொருள் தாதாவின் பணத்தையும் திருடிவிட, சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, காவல்துறை, தனியார் துப்பறிவாளர், போதைப் பொருள் தாதா என எல்லோரும் கதாநாயகனைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள். கதாநாயகன் ஏன் இப்படி திருடுகிறான், திருடிய பணத்தை என்ன செய்கிறான் என்பது மீதிக் கதை.

மேலே இருக்கும் கதையைப் படிக்கும்போது ஒருவேளை கதை சுவாரஸ்யமாக இருப்பதைப்போலத் தோன்றலாம். ஆனால், பயங்கரமாகச் சொதப்பியிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில், ஓடும் ரயிலில் கதாநாயகன் கொள்ளையடிக்கும் காட்சி, சென்னைக்கு வந்த ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது. அந்தக் காட்சியும் சற்று சுவாரஸ்யமாக இருக்கிறது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு படத்தில் வருவதெல்லாம் அபத்தங்கள்தான்.

படத்தில் கதாநாயகனுக்கு ஒரு விபரீத வியாதி. திடீரென தலைகுழம்ப, கண்கள் எல்லாம் சொருக ஆரம்பிக்கும். அப்படியென்றால் அவர் திருடியே ஆக வேண்டுமாம். இதற்கு உதவுவதற்கு நண்பர் ஒருவர் வேறு. இந்தப் பிரச்சனைக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் வேறு வைத்திருக்கிறார்கள். அது இதைவிட கொடூரமாக இருக்கிறது.

படத்தில் ஹவாலா தொழில் செய்பவராக ஒரு இஸ்லாமியர் வருகிறார். அவருடைய பணமும் திருடு போகிறது. அப்போதிலிருந்து, அவர் யாரைப் பார்த்தாலும் 'எல்லாத்துக்கும் நீ தான் காரணம்' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

திரைக்கதை இப்படியிருப்பதால், படத்தில் நடித்திருப்பவர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனோதானோவென்று நடித்துவிட்டுச் செல்கிறார்கள். ஜெகன் மட்டும் சற்று சின்சியராக வந்து செல்கிறார்.

"படத்தில் யோகி பாபு இருக்கிறார்; படம் எப்படியிருந்தாலும் நகைச்சுவை காட்சிகளாவது தேறும்" என்ற நம்பிக்கையில் பலர் படத்துக்குச் செல்வதுண்டு. தனது சமீபகால படங்களில் அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கிவந்தார் யோகிபாபு. இந்தப் படமும் அந்த வரிசையில் சேர்கிறது.

எல்லாம் ஓகே.. முக்கால்வாசி படம் ஓடிய பிறகு, கதாநாயகன் - கதாநாயகியை காதலிக்கவைத்து, ஒரு டூயட்டைப் பாடவிடுவதெல்லாம் இரக்கமற்ற செயல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்