அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய ராட்சத நிலவு ராக்கெட்டை அதன் முதல் பயணத்திற்காக தயார்படுத்திவருகிறது.
ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) என அழைக்கப்படும் இந்த வாகனம், ஆகஸ்ட் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி பயணத்திற்காக, ப்ஃளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39B ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த முதல் சோதனைப்பயணத்தில் விண்வெளிவீரர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் எதிர்கால பயணங்கள், 50 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக சந்திரனின் மேற்பரப்புக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும்.
சுமார் 100 மீட்டர்(328 அடி) உயரமான SLS, ஒரு பெரிய டிராக்டரில் ஏவுதளத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை கென்னடியில் உள்ள அதன் கட்டுமான இடத்தில் இருந்து அது நகரத் தொடங்கியது. ஆனால் மணிக்கு 1 கிமீ( 1 மைலுக்கும் குறைவு) வேகத்தில், 6.7 கிமீ (4.2 மைல்) பயணத்தை முடிக்க அதற்கு 8-10 மணிநேரம் ஆகலாம்.
நாசாவிற்கு இது ஒரு முக்கிய தருணமாகும். சந்திரனில் மனிதன் கடைசியாக காலடி பதித்த அப்பல்லோ 17 இன் அரை நூற்றாண்டு ஆண்டு நிறைவை நாசா, டிசம்பர் மாதம் கொண்டாடவுள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தனது புதிய ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் மீண்டும் களத்திற்கு திரும்பப்போவதாக நாசா கூறியுள்ளது. (ஆர்டெமிஸ், கிரேக்க கடவுள் அப்போலோவின் இரட்டை சகோதரி மற்றும் சந்திரக் கடவுளும் ஆகும்).
2030 களில் அல்லது அதற்குப்பிறகு மிக விரைவில் விண்வெளி வீரர்களுடன் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான ஒரு வழியாக, சந்திரனுக்கான இந்தப் பயணத்தை நாசா பார்க்கிறது.
அப்போலோவின் Saturn V ராக்கெட்டுகளை விட 15% அதிகமான உந்துசக்தியை SLS கொண்டிருக்கும். இந்த கூடுதல் சக்தியுடன் மேலும் மேம்பாடுகளின் இணைப்பு காரணமாக, பூமியின் வெகுதொலைவுக்கு அப்பால் விண்வெளி வீரர்களை அனுப்புவது மட்டுமல்லாமல், அதிக உபகரணங்கள் மற்றும் சரக்குகளை கொண்டுசெல்ல முடிவதால் குழுவினர் அதிக காலத்திற்கு பூமியில் இருந்து தள்ளி வாழமுடியும்.
க்ரூ காப்ஸ்யூல், திறனில் ஒரு படி மேலே உள்ளது. ஓரியன் என்று அழைக்கப்படும் இது, 1960கள் மற்றும் 70களில் இருந்த கமாண்ட் மாட்யூல்களைக் காட்டிலும் அகலமானது. 5 மீ (16.5 அடி) அகலத்தில் இருக்கும் இந்த காப்ஸ்யூல் ஒரு மீட்டர் கூடுதல் அகலம் கொண்டுள்ளது.
"மனிதகுலம் எப்போது சந்திரனுக்கு மீண்டும் திரும்பும் என்று கனவு காணும் நம் அனைவருக்கும் ஒரு செய்தி.' மக்களே, நாம் மீண்டும் அங்கே செல்ல இருக்கிறோம். அந்தப் பயணம், எங்கள் பயணம், ஆர்ட்டெமிஸ் 1 மூலம் தொடங்குகிறது," என்று நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.
"விண்வெளி வீரர்களுடன் ஆர்ட்டெமிஸ் 2 இன் பயணம் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2024 இல் இருக்கும். ஆர்ட்டெமிஸ் 3 இன் முதல் தரையிறக்கம் 2025 இல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
ஆர்டெமிஸ்ஸின் மூன்றாவது பயணத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல்முறையாக ஒரு பெண் விண்வெளிவீரர் கால்பதிப்பார் என்று நாசா உறுதியளித்துள்ளது. SLS அதன் ஏவுதளத்திற்கு வந்தவுடன், விண்வெளி பயணத்திற்கு அதை தயார் செய்ய பொறியாளர்களுக்கு சுமார் ஒன்றரை வாரங்கள் மட்டுமே இருக்கும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி மூன்று சாத்தியமான ஏவும் வாய்ப்புகள் உள்ளன.
தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சீரற்ற காலநிலை காரணமாக இந்த தேதியில் ராக்கெட்டை ஏவ முடியாவிட்டால் செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை மீண்டும் முயற்சி செய்யப்படும். அது தோல்வியுற்றால், செப்டம்பர் 5 திங்கட்கிழமை மற்றொரு முயற்சியை மேற்கொள்ளலாம்.
கலிஃபோர்னியாவிற்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் ராக்கெட்டை திருப்பிகொண்டுவருவதற்கு முன்பாக, சந்திரனின் பின்புறத்தில் ஓரியனை சுழன்று செல்லச்செய்வதே இந்தப்பயணத்தின் நோக்கமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தை காப்ஸ்யூலில் உள்ள வெப்பக் கவசம் தாங்குமா என்று சரிபார்ப்பதே சோதனை ஓட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
"ஐரோப்பாவில் உள்ள 10 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பங்களிப்பில் பணியாற்றி வருகின்றன. இது எங்களுக்கு மிகவும் முக்கியமான தருணம்" என்று ஏர்பஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சியான் கிளீவர் விளக்கினார்.
"ஐரோப்பிய சர்வீஸ் மாட்யூல் என்பது வெறும் பேலோட் அல்ல. அது வெறும் உபகரணமல்ல. இது மிகவும் முக்கியமான உறுப்பு. ஏனென்றால் இது இல்லாமல் ஓரியன் சந்திரனை அடைய முடியாது."
நாசா SLS ஐ உருவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரம், அமெரிக்க ராக்கெட் தொழிலதிபர் எலோன் மஸ்க், டெக்சாஸில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், அதைவிடப்பெரிய வாகனத்தை உருவாக்கி வருகிறார்.
அவர் தனது ராட்சத ராக்கெட்டை ஸ்டார்ஷிப் என்று அழைக்கிறார். மேலும் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்ல ஓரியன் உடன் அதை இணைப்பதன் மூலம் எதிர்கால ஆர்ட்டெமிஸ் பயணங்களில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்கிறார் அவர்.
SLS ஐப் போலவே, ஸ்டார்ஷிப்பும் இன்னும் சோதனை ஓட்டத்தை முடிக்கவில்லை. SLS போலல்லாமல் ஸ்டார்ஷிப், முற்றிலும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவது கணிசமாக மலிவானதாக இருக்கக்கூடும்.
நாசா திட்டங்களை தணிக்கை செய்யும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீட்டில், முதல் நான்கு SLS பயணங்கள் ஒவ்வொன்றையும் செயல்படுத்த 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் இதை "தொடர்வது கடினம்" என்றும் கூறப்பட்டுள்ளது. தொழில் ஒப்பந்தத்தில் செய்யப்படும் மாற்றங்கள் எதிர்கால உற்பத்திச் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என்று நாசா தெரிவித்தது.