ஆம்புலன்சில் பலியாகும் நோயாளிகள்: சென்னை ஜி.ஹெச் வாயிலில் என்ன நடக்கிறது?

வெள்ளி, 14 மே 2021 (11:22 IST)
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால், படுக்கை கிடைப்பதற்கு முன்பாகவே நோயாளிகள் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனை வாசலில் என்ன நடக்கிறது?
 
தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவருகின்றன. இந்த நிலையில், மாநிலத்திலேயே மிகப் பெரிய மருத்துவமனையான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறலோடு ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
"உள்ளே இருப்பது என்னுடைய அம்மா. அவருக்கு ஆக்ஸிஜன் செறிவின் அளவு 85 ஆக இருக்கிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்தோம். பிறகு அவர்கள் வேறு மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். இங்கே அழைத்து வந்திருக்கிறோம். வந்து ஒன்றரை மணி நேரமாகிறது. எங்களுக்கு முன்பாக இன்னும் ஐந்து ஆம்புலன்சுகள் இருக்கின்றன. காத்திருக்கிறோம்" என பிபிசியிடம் கூறினார் அங்கு ஆம்புலன்சிற்கு வெளியில் காத்திருக்கும் சங்கர்.
 
சங்கர் தன் தாயைச் சேர்க்க குறைந்தது இன்னும் இரண்டு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். கடந்த பல நாட்களாகவே ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வாயிலில் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்துக்கிடப்பது தொடர்ந்து வருகிறது. சுமார் மூவாயிரம் படுக்கைகளைக் கொண்ட அந்த மருத்துவமனையில் 1618 படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1250 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியைப் பெற்றுள்ளன. இந்தப் படுக்கைகள் அனைத்துமே நிரம்பிவிட்டன.
 
நிலவரம் இவ்வாறு இருக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து இந்த மருத்துவமனையை நோக்கி வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 20 நிமிடம் அல்லது அரை மணி நேரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வரிசையில் சேர்கிறது.
 
இதில் பெரும்பாலான நோயாளிகள் ஆக்ஸிஜன் கட்டாயம் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆகவே, ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக, காலியாக நோயாளிகள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்படுகிறார்கள்.
 
இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் இதுபோல ஆம்புலன்சில் காத்திருந்த 6 நோயாளிகள் நிலைமை மோசமடைந்து உயிரிழந்தனர். வியாழக்கிழமை காலையிலும் ஆம்புலன்சில் சிலர் உயரிழந்ததாகச் சொல்லப்பட்டாலும், அதனை உறுதிசெய்ய இயலவில்லை. புதன்கிழமை மாலையில் மருத்துவமனைக்கு வெளியில் நடந்த மரணங்கள் குறித்து விசாரிக்கவிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
 
பல தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகள் நெருக்கடியான நிலையை எட்டும்போது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொல்லும் போக்கும் இருந்து வருகிறது. அம்மாதிரி நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதற்கு முன்பாகவோ, அரசு மருத்துவமனைகளைச் சென்றடைவதற்கு முன்பாகவோ உயிரிழப்பதும் நடக்கிறது.
 
"மேலும் பல படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்து தர வேண்டுமென்றால் கூடுதலாக ஆக்சிஜன் தேவை. அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" என்கிறார் மா. சுப்பிரமணியன்.
 
தமிழ்நாட்டில் எங்கே படுக்கை வசதிகள் இருக்கின்றன என்பதை இணையதளத்தின் மூலம் அறிந்துகொண்டு சென்றால் இதுபோன்ற தாமதத்தைத் தவிர்க்கலாம் என்று சொன்னாலும், சென்னையின் பெரும்பாலான பெரிய அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்பதுதான் நிலவரமாக இருக்கிறது.
 
சென்னை நந்தம்பாக்கத்தில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்பட்டிருந்தாலும் அங்கே 300 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி இருக்கிறது. ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கிட்டத்தட்ட படுக்கைகள் நிரம்பிவிட்டன.
 
சென்னையில் மட்டும் தினமும் 7 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், நிலவரம் இன்னும் மோசமடையும் சாத்தியம் அதிகரித்துவருகிறது.
 
தமிழ்நாடு சட்டமன்றக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆலோசனை அளிக்க சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கவும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அதிகமாக்கவும் தமிழ்நாடு சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது
 
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
கூட்டத்தின் துவக்கத்தில், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து முதலமைச்சர் விவரித்தார். இதற்குப் பிறகு அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய ஆலோசனைகளைத் தெரிவித்தன.
 
இதையடுத்து இந்தக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிப்பது. 2. அனைத்துக் கட்சியினரும் பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்வுகளை நிறுத்திக் கொள்வது. 3. அரசு அளிக்கும் நெறிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது, நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவது 4. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு ஆலோசனைக் குழுவை அமைப்பது. 5. தற்போதுள்ள ஊரடங்கு விதிகளை மேலும் தீவிரப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்