ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி

புதன், 22 ஜூன் 2022 (12:28 IST)
ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

"துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது." என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் தீவிரம் என்ன?

காபூலில் இருந்து 182 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலைவிலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நேரப்படி ஜுன் 22-ம் தேதி அதிகாலை 2.24 மணிக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானில் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது அந்த நிலநடுக்கவியல் மையம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்