டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா?

வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (18:19 IST)
கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள்.


 
மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
 
ஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின.
 
அதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம்.
 
இந்த பேரழிவின் உயர் தெளிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து / அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
 
200 கி.மீ அகலமுள்ள இந்த அமைப்பு மெக்ஸிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கீழ் அமைந்துள்ளது. அதன் முக்கியமான, பாதுகாக்கப்பட்ட மத்திய பகுதிகள் சிக்க்சுலப் துறைமுகத்திற்கு அருகே உள்ளன..


 
இந்த ஆய்வு குழு ஒரு பெரிய நீளமான பாறையை ஆய்விற்குட்படுத்தியது. அதிலும் குறிப்பாக, 130 மீட்டர் நீளமுள்ள அந்த பாறையின் ஒரு பகுதியே செனோசோயிக் சகாப்தத்தின் முதல் நாளை ஆவணப்படுத்துகிறது.
 
அந்த பாறையானது பல்வேறு பொருட்களின் சிதைந்த வடிவம் என்றாலும், அதன் உள்ளடக்கங்களை கொண்டு ஒரு தெளிவான கதையை ஏற்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
பாறையின் 20 மீட்டருக்கு கீழுள்ள பகுதியில் கண்ணாடி சிதைவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறுங்கோள் தாக்கத்தினால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் அழுத்தத்தால் உருவானதே இந்த பாறை. அதற்கடுத்த சில நொடிகளில் பள்ளத்தின் அடிப்பகுதி வரை இந்த விளைவு ஏற்பட்டு அதன் தன்மையும் மாறுகிறது.
 
அதன் பிறகு, பாறைகள் பல பிளவுகளாக வெப்பத்தின் விளைவுக்கு உள்ளாகி, அதில் நீர் கரைபுரண்டோடி தற்போதுள்ள அமைப்பு உருவானதாக தெரியவந்துள்ளது.
 
வெப்பம் அழுத்தத்தின் காரணமாக உருவானது என்றால், அவை குளிர்ந்து பாறைகளாக காரணமான நீர், அந்த காலத்தில் அப்பகுதியை சூழ்ந்திருந்த கடல்நீரிலிருந்து கிடைத்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எரிமலை குழம்பு கடல்நீரை சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வை ஒத்த விளைவின் காரணமாக இந்த பாறைகள் உருவாகியதும் தெரியவந்துள்ளது.


 
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகள், குறுங்கோள் பூமியை தாக்கிய நொடி முதல் சில மணிநேரங்கள் வரை நிகழ்ந்தவை ஆகும். ஆனால், தொடர்ந்து வந்துகொண்டிருந்த நீரும், குப்பைகளும் இடைப்பட்ட பகுதிகளை நிரப்பியது. அப்போது, மழையும் பொழிந்திருக்கக் கூடும்.
 
இதற்கான கால அளவு தாக்கத்திற்குப் பிறகு முதல் சில மணிநேரங்கள் ஆகும்.
 
இந்நிலையில், தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையின் 130 மீட்டர் அளவுள்ள பகுதியே, அப்போது சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த தாக்கம் ஒரு மாபெரும் ஆழி பேரலையை உருவாக்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சுனாமி அலைகள் அப்போது பாறைகள் உருவாக்கிக்கொண்டிருந்த பள்ளத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரையோரங்களில் மோதியிருக்கும். அதன் விளைவாக, பல கிலோமீட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள் பாறை வரிசையின் மேற்புறத்தை மூடியிருக்கும்.
 
"இவை எல்லாமுமே ஒரே நாளில் நடந்தவை" என்று கூறுகிறார் ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சீன் குளிக். "ஜெட் விமானங்கள் வேகத்தில் சுனாமி பேரலைகள் பயணிக்கும். எனவே, சுனாமி பேரலைகள் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் சென்று, மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 24 மணிநேரம் என்பது தேவைக்கும் அதிகமான நேரம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
இந்த மிகப் பெரிய தாக்கத்தில் சுனாமியும் ஒரு அங்கம் என்பதில் குளிக்கின் அணியினர் உறுதியாக உள்ளனர். ஏனெனில், மிகப் பெரிய பரப்பளவில் ஏற்பட்ட வெப்பத்தின் தீவிரத்தை குறைத்து, தற்போது கண்டறியப்பட்டுள்ள பாறைகளில் காணப்படும் உள்ளடக்கங்களை கொண்டு வந்து சேர்ந்ததில் சுனாமியின் பங்கு கண்டிப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
ஆச்சர்யமளிக்கும் வகையில் தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையில் சல்பர் எங்கேயுமே காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடலின் மேல்தட்டு பகுதியில் பல்வேறு தனிமங்கள் இருக்கும். இந்நிலையில், அதன் மேல் மோதி அதிர்வை ஏற்படுத்திய குறுங்கோளால் உண்டான பாறையில் சல்பர் இல்லாதது வியப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 
சில காரணங்களால், சல்பர் அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆவியாகி இருக்க வேண்டும். இதுதான் டைனோசர்களின் வாழ்வு எப்படி முடிவுக்கு வந்தது என்ற பிரபலமான கோட்பாட்டை ஆதரிக்கும் விடயமாக இருக்கிறது.
 
அதாவது, மிகப் பெரிய அளவிலான சல்பர் நீரில் கலந்து, ஆவியாகி, அப்பகுதியின் வெப்பநிலையை மிகவும் குறைத்து, அக்காலத்தில் வாழ்ந்த விலங்குகள் மட்டுமின்றி தாவர வகைகளின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு சென்றிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்