சுபஸ்ரீ ரவி மரணம்: "நேற்று ரகு, இன்று சுபஸ்ரீ… நாளை?" – கோபத்தில் சமூக ஊடகவாசிகள் #WhoKilledSubasri

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (16:17 IST)
சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியான செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.


 
அதனை தொடர்ந்து #AdmkKilledSubasri, #WhoKilledSubasri போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
 
சுபஸ்ரீயின் உயிரிழப்புகளுக்கு பேனர் கலாசாரம் ஒரு முக்கிய காரணம் என்று பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
"உயர்நீதிமன்ற உத்தரவுகள் என்பது ஆளும் அரசுக்கு கேலிக்கூத்தாகிவிட்டது. அரசே உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றால், மக்கள் மட்டும் ஏன் அதனை பின்பற்றி அபராதம் கட்டவேண்டும். விதிகள் அனைவருக்குமானது" என்று யோகேஷ் என்பவர் பதிவிட்டுள்ளார்.
 
"இது அரசாங்கத்தின் தவறல்ல, அரசு அதிகாரிகளைதான் தண்டிக்க வேண்டும். மாவட்ட கலெக்டரில் இருந்து உள்ளூர் காவல்துறையினர் வரை அனைவரின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் இந்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என்று ரமேஷ் கிருஷ்ணன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"விதிகளை பின்பற்றாததால் நாம் இன்று ஒரு உயிரை இழந்திருக்கிறோம். நாம் விதிகளை பின்பற்ற கற்றுக் கொள்ளவே இல்லை" என்கிறார் வைத்யநாதன் ரமணி
 
"உங்களுக்கு திருமணம் நடக்கிறது என்றால் பத்திரிகை கொடுங்கள், சமூக ஊடகங்களில் தெரியப்படுத்துங்கள். திருமணங்களுக்கும், கட்சிக்கூட்டங்களுக்கும் பேனர்கள் வைப்பதற்கு ஒரு முடிவு வேண்டும்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஷைனி
 
சாலை ஓரங்களில் பேனர்கள் வைப்பதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி இது என்கிறார் சரவணன் செல்லையா
 
"நேற்று ரகு, இன்று சுபஸ்ரீ.. இங்கு எதுவும் மாறவில்லை" என்று பதிவிட்டுள்ளார் நிலா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்