'முதலிரவில் செக்ஸைத் தவிர வேறு நிறைய விஷயங்கள் இருந்தன'

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:02 IST)
சோஃபி டைனரின் கதையை ஒரு பெண்ணின் கதை என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. இந்தக் கதையில் கணவனும் இவரே, மனைவியும் இவரே.

கேட்பதற்கே விசித்திரமாக இருக்கிறதா? ஆனால் உண்மை. சோஃபி டைனர் தனது வித்தியாசமானத் திருமணத்தை பற்றி சொல்கிறார்:

"இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான், என்னை திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களைப் போன்றே எனக்கும் திருமண நாள் மிகவும் முக்கியமான நாள். நான் திருமண உடையை அணிந்திருந்தேன், கலங்கிய கண்களோடு என் அப்பா என்னை வழியனுப்பி வைத்தார்.

நண்பர்கள் ஆட்டபாட்டத்துடன் திருமணத்தை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆண் ஒருவர் மற்றொரு ஆணை திருமணம் செய்து கொள்வதும், ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்யும் பழக்கம் உலகில் வேகமாக பரவிவருகிறது.


இதுபோன்ற ஒரு பாலினத்திற்குள்ளே செய்து கொள்ளும் திருமணங்கள் தொடர்பாக ஆலோசனை சொல்பவர்களும், திருமண ஏற்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பிரிட்டனில் நான் என்னை திருமணம் செய்து கொண்ட நாளன்று, சூரியனும் பிரகாசமாக இருந்தது. இங்கு நான் என்னுடைய செல்ல நாய்க்குட்டி லேப்ரடோருடன் வசிக்கிறேன். என்னுடைய இந்த திருமணம் இங்கிலாந்தில் செல்லுபடியாகாது, ஆனால் எனக்கு அது மிகவும் சிறப்பானது. 38 வயதாகும் எனக்கு சோகமான காதல் அனுபவம் இருந்தது.

நான் இறுதியாக காதலித்தவரை மிகவும் ஆழமாக நேசித்தேன். அவனை விட்டு பிரிய முடியாத அளவு அன்பு செலுத்தினேன், ஆனால் அவனோ மிக விரைவில் பிரிந்து சென்றுவிட்டான்.


18 மாதம் நீடித்த அந்த உறவில் நான் ஏமாற்றப்பட்டேன். அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆழமாக காயப்பட்டேன். கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டேயிருக்கும். அந்த சூழ்நிலையில் நான் எனக்குள்ளே பல கேள்விகளை எழுப்பினேன்.

காதல் முறிவுக்கு பிறகு

காதல் தோல்விகளை அதற்கு முன்பும் சந்தித்திருந்ததால் அதன் வேதனையே தெரியாது என்றும் சொல்லமுடியாது. ஆனால் இந்த முறை என்னால் சோகத்தில் இருந்து மீண்டு வரமுடியவில்லை. மீண்டும் ஒருமுறை தவறான ஒருவரை காதலிக்க நேர்ந்தால் என்ன செய்வது என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

ஆனால் காதல் தோல்வியும் ஒருவிதத்தில் நல்லதுக்குதான் என்றே தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ஏனெனில் அதற்குபிறகே என்னை எனக்குள்ளே தேடத் தொடங்கினேன்.

எனக்காக மகிழ்ச்சியை, அன்பை பிறரிடம் தேடுவதைவிட என்னுள்ளே ஏன் தேடக்கூடாது? வேறு யாராவது ஒருவரைவிட என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? காதல் என்றால் நாம் மற்றவர் மீது அன்பு செலுத்துவதுதானே? அந்த அன்பை என்மீதே மடை மாற்றினால் என்ன?


இப்படி காதலை பற்றியும், என்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் எனது சிந்தனை விரிந்தது. எனக்கான சிறப்பான வாழ்க்கைத்துணை என்னைவிட வேறு யாரும் இருக்கமுடியாது என்று முடிவெடுத்தேன். எனவே தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் செய்வது சுலபமாகவே இருந்தது. இந்த விழா என்னுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே.

திருமண விழாவுக்கு பிரைட்டன் கடற்கரையை பதிவு செய்தேன். திருமண ஆடையை லண்டனில் வாங்கினேன். உணவிற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தேன்.

அதே சமயத்தில், எனக்கு திருமணம் நடந்ததை நான் எப்போதும் உணர்வதற்காக பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டேன்.

நான் சந்தித்த ஏமாற்றங்களுடன் போராடுவேன் என்று சபதம் செய்தேன். என்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டேன். நல்லதிலும், கெட்டதிலும் எனக்கு நான் சிறந்த நண்பராக இருப்பேன் என்று சபதம் செய்தேன்.

இது திருமணத்தின் அடிப்படை அல்லவா? அதேபோல் வெற்றியைக் கொண்டாடுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன் என்கிறார் சோஃபி டைனர்.

உறுதிமொழி எப்படி எடுக்கப்பட்டது?
திருமணத்தின் போது உறுதிமொழி எடுக்கும்போது, "நான் செய்வேன்" என்று சொன்னபோது, விழாவுக்கு வந்த விருந்தினர்களிடையே அசாதாரணமான அமைதி நிலவியது.

திருமணத்திற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் என்னுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் என்னுடைய முடிவை ஒப்புக்கொண்டதாகவே தோன்றியது. நான் நடனமாடும்போது, அனைவரையும் என்னுடன் இணைந்து கொள்ளச் சொன்னேன்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்கள். என் தோழி கேத் தன்னுடைய குழந்தையுடன் இணைந்து நடனமாடினாள். இதுபோன்ற ஒரு திருமணத்தை இதுவரை பார்த்ததில்லை என்று பலர் என்னிடம் சொன்னார்கள்.

என் அப்பா இந்த திருமணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவர் நடுங்கிய கரங்களோடு எனது இடது கையை எடுத்து, என் வலது கையிடம் ஒப்படைத்தபோது, இது வித்தியாசமான திருமணமாகவே தோன்றவில்லை. அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும்.

அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். எனது விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும் சரி, இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளித்ததிலும் சரி, என் அப்பாவைப் போல வேறு யாரும் இருக்கமுடியாது.

நான் இந்த திருமணத்தை செய்து கொள்ளாவிட்டாலும் என் வாழ்க்கை தொடர்ந்திருக்கும். என்னை நானே திருமணம் செய்து கொண்டதால், தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது, வாழ்க்கையை நோக்கிய கண்ணோட்டம் மாறிவிட்டது. என்னுடன் நான் இன்னமும் ஒன்றிப்போக வாய்ப்பு கிடைத்தது.

எனது முடிவு அவசரமானதல்ல. இது குறித்து நிறைய சிந்தித்தேன், சில நாட்கள் அல்ல, பல காலம் யோசித்தேன். இதில் எந்தவித சிக்கலும் இல்லை, வேறு யாரையும் பாதிக்கவில்லை.

நம்மை நாமே நேசிப்பது எளிதானது, சுலபமானது. திருமணத்தில் எடுத்த உறுதிமொழிகளை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்.

என்னுடைய முதலிரவு செக்ஸியானதாக இல்லை அல்லது ரொமாண்டிக்காக இல்லை என்று சொல்லலாம். ஆனால், என்னை விரும்பும், என்னை நேசிக்கும் அனைவருடனும் அன்று இரவு முழுவதும் நடனமாடினேன்.

சூரிய உதயத்தின்போது நான் திருமணம் ஆனவளாக மாறியிருந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

'விரக்தியடைந்த பெண்ணியவாதி' என்று என்னை பலர் விமர்சிக்கின்றனர். 'மற்றவர்கள் இயல்பானவளாக நினைக்க முடியாத அளவு மாறிவிட்டேனா?' என்று எனக்கு நானே கேள்வியும் கேட்டுக்கொள்கிறேன். இல்லை என்றே என் மனம் பதிலுரைக்கிறது.

ரொமான்ஸ் செய்வதில் இருந்து நான் விலகவில்லை, ஒரு கன்னியாஸ்திரியாக போகிறேன் என்றும் நான் கையெழுத்திடவில்லை. எனக்கு ஏற்ற யாராவது கிடைத்தால் நல்லது. பார்க்கலாம்.

'வேறு ஒருவரின் தவறான நடத்தையை சகித்துக் கொள்ள வேண்டியதில்லை, யாரொருவருக்காவும் காலம் முழுவதும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீயே உனக்கு எல்லாமாக இருக்கிறாய் சோஃபி டைனர்' என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

(பிபிசி தமிழ் தளத்தில் 5 செப்டெம்பர் 2017 அன்று வெளியான கட்டுரை இது)
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்