கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்
புதன், 29 மார்ச் 2023 (15:04 IST)
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
பல்வேறு முதலீடுகளில் இருந்து வரும் வருமானத்தை ஒப்பிடவும், எதிர்கால வருமானத்தை திட்டமிடவும் ஏப்ரல் ஒரு சிறந்த மாதம்.
மேலும், பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி, விதிமுறைகள் இம்மாதம் முதல் அமலுக்கு வரும். எனவே, தனிநபர் நிதி மேலாண்மையில் ஏப்ரல் மாதம் ஒரு முக்கியமான காலமாகும்.
இந்த மாதம் மட்டுமல்ல, புதிய நிதியாண்டு முழுவதும் நிதி தன்னிறைவை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
புதிய நிதியாண்டில் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்பாடு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
கட்டாய முன்னெச்சரிக்கைகள்
தனிநபர் நிதி மேலாண்மையில் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது காப்பீடு ஆகும். சரியான ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் சமரசம் செய்யக் கூடாது.
பலர் எதிர்காலத்தில் தேவை ஏற்படும் போது காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைக்கிறார்கள். இது நல்ல யோசனையல்ல. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வயது அதிகரிக்கும் போது உங்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகரிக்கிறது.
மேலும், சில நோய்களுக்கான காப்பீடு உடனடியாக நடைமுறைக்கு வராது. அவை முதிர்ச்சி அடைய அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை ஆகும். எனவே, தேவைக்கு ஏற்ற காப்பீடு உடனடியாக எடுக்க வேண்டும்.
உதாரணமாக தனிநபர் ஒருவர் மருத்துவ காப்பீடு எடுக்கும் போது முதல் ஆண்டிலேயே அவருக்கு புற்றுநோய், அறுவை சிகிச்சை போன்ற சில குறிப்பிட்ட சிகிச்சைகள் பெற முடியாது. முதல் வருடத்தில் அடிப்படையான நோய்களுக்கு மட்டுமே கவரேஜ் இருக்கும்.
இன்சூரன்ஸ் பாலிசி மட்டுமின்றி, தனிநபர் நிதியின் மற்றொரு முக்கிய அம்சம், நமது காப்பீடு உள்ளிட்ட முதலீடுகள் குறித்து நமது மனைவிக்கோ அல்லது குடும்பத்தில் முக்கியமான நபரும் அறிந்திருக்க வேண்டும்.
காப்பீடு மற்றும் முதலீட்டு விவரங்கள், கணினி, ஸ்மார்ட் போன் அல்லது டைரியில் இருப்பதை உறுத் செய்ய வேண்டும்.
தனிப்பட்ட ஆலோசகர் இருந்தால், அவர்களின் தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிர்பாராத பிரச்னை ஏற்படும் போது, இந்த தகவல்கள் அனைத்தும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரும் புதிய விதிகளை ஆய்வு செய்து, நமக்கு பொருந்தும் விதிகளில் தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும்.
வருமான வரி விஷயத்தில், எந்த வரி முறையை தேர்வு செய்ய வேண்டும், மாத சம்பளத்தை கணக்கிட எந்த மாதிரியான முதலீட்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் போன்ற விவரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சில காப்பீடுகளில் நாமினிக்கு மாற்றங்களைச் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
முதலீட்டின் மீதான வருவாய் பகுப்பாய்வு
முதலீட்டின் மீதான வருவாயைப் புரிந்துகொள்ள பல்வேறு அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை முதலீட்டு வருவாய், வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR), உள் வருவாய் விகிதம் (IRR), நீட்டிக்கப்பட்ட வருவாய் விகிதம் (XIRR).
அனைத்து முதலீடுகளுக்கும் ஒரே முறையை பயன்படுத்தி மதிப்பாய்வு செய்ய முடியாது. மைக்ரோசாஃப்ட் எக்சல் பயன்படுத்தி இதை எளிதாக கணக்கிட முடியும்.
SIP வழியாக பரஸ்பர நிதியில் (Mutual Fund) செய்யும் மூதலீடுகளை நீட்டிக்கப்பட்ட வருவாய் விகிதம் (XIRR) மூலம் ஒரு வருடத்திற்கு பிறகு கணக்கிட வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் கிடைக்கும் வருவாயை தகுந்த அளவீடுகளை கொண்டு கணக்கிட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் லாபகரமான முதலீட்டு முறைகளை கண்டறிந்து அதில் முதலீடு செய்ய வேண்டும்.
குறைவான வருவாய் ஈட்டும் முதலீடுகளை கண்டறிந்து அவற்றை அதிகரிப்பது எப்படி என பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
சந்தையின் எதிர்வினைக்கு ஏற்ப நமது முதலீடுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், நமது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும்.
இது போன்ற நேரத்தில் இயற்கையாகவே சந்தை அடிப்படையிலான முதலீட்டு வழிகளில் வருமானம் குறைவாக இருக்கும். ஆனால், இந்த முதலீட்டு வழிகள் நமது நிதி இலக்குகளுக்கு ஏற்ப இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும்.
பங்குச் சந்தை என்பது எப்போதும் எதிர்காலத்தை மனதில் கொண்டு இயங்கும் இயந்திரம். எனவே நமது முதலீட்டு வழிகளில் தற்போதைய வருமானம் மட்டுமின்றி எதிர்கால வருமானத்தையும் அனுமானிக்க வேண்டும்.
முதலீடு / செலவு கணக்கு
செலவுக் கட்டுப்பாடு (Cost control) என்பது ஒரு நிதிச் சொல்லாடலாக தெரியலாம், ஆனால் அது உண்மையில் ஒரு வாழ்க்கை முறை.
வாழ்க்கைத் தரம் உயர்வதால், முந்தைய தலைமுறையினருக்கு எளிதில் கிடைக்காத பல ஆடம்பரங்களும், வசதிகளும் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கின்றன.
இந்த ஆடம்பரங்களின் விலை அதிகம். மேலும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், மாதாந்திர இஎம்ஐ (EMI), இதர செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த செலவுகள் நமது முதலீட்டை பாதிக்குமென்றால், அது நமது நிதி இலக்குகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டத்தில், செலவு-முதலீட்டு சமநிலையை அடைய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதைப் பார்ப்போம்.
நிதி இலக்குகளிலிருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதை அடிக்கடி கவனியுங்கள். இப்படிச் செய்வதால் எந்தப் பணப் பயனும் கிடைக்காது. மாறாக, அந்த இலக்கு மீதான நமது அர்ப்பணிப்பு வலுவடையும். சந்தை ஏற்ற இறக்கங்கள், பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நிதி இலக்குகளை அடைய சில கடினமான முடிவுகளை எடுப்பது அவசியம். அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு நிதி இலக்குகளை நோக்கிய அர்ப்பணிப்பு முக்கியமானது.
முதலீட்டுத் தொகை மின்னணு டெபிட் மூலம் செல்வதை உறுதிப்படுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்கூட்டியே திட்டமிட்ட முதலீடு தடையின்றி செய்யப்படுகிறது.
ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வதன் மூலம் மருத்துவமனை செலவுகளைக் குறைப்பது மிக முக்கியமான சேமிப்புக் கொள்கைகளில் ஒன்றாகும்.
கிரெடிட் கார்டின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஏறக்குறைய அனைத்து கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளுக்கு சில பயன்கள் உள்ளன. இந்த புள்ளிகளிலிருந்து அதிகபட்ச பலன் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, கிரெடிட் கார்டு புள்ளிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் பயணச் செலவுகளைக் குறைக்கலாம். அதே போல வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் இந்த புள்ளிகளை பயன்படுத்தலாம்.