குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

செவ்வாய், 26 ஜூலை 2022 (14:37 IST)
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் போடாட் மற்றும் அதன் அருகாமை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுபானத்தை தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், மதுபானத்தை விற்றவர் ஆகியோர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாநிலத்தில், இரு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஈடுபட்டதாக குஜராத்தின் உள்துறை அமைச்சர் ராஜ் குமார் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். மேலும்,"இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றும் தெரிவித்தார்.

"23க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கள்ளச்சாராயத்தை குடித்து மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்." என டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வது மற்றும் அருந்துவது இரண்டுமே சட்டவிரோதமானது. அரசால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மதுபானம் அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்