எடப்பாடி அரசு விரைவில் கவிழும் - தமிழிசை சவுந்தரராஜன் சூசக தகவல்

புதன், 12 ஏப்ரல் 2017 (12:23 IST)
வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்தால் விரைவில் தமிழக அரசு கவிழ வாய்ப்பிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.   
 
இதில் ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளித்து வருகிறார். இதில் முக்கியமாக, ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு யார் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதில் முதல் அமைச்சர் உட்பட பல அதிமுக அமைச்சர்களின் பெயர் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன் ”வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தால், தமிழக அரசு கவிழ வாய்ப்பிருக்கிறது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டால், அரசு பதவி இழக்க நேரிடும். அதேபோல் பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என அவர் கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்