எனக்கு எல்லாமும் அம்மாதான் ; என் சோகத்தை விவரிக்க முடியாது : வி.கே. சசிகலா கண்ணீர் உரை

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (13:29 IST)
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, அவரின் பதவியை ஏற்றுக்கொள்ள இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஏராளமான அதிமுகவினர் கூடியிருந்தனர்.


 

 
தொண்டர்களை பார்த்து வணங்கிய சசிகலா, அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மறைந்த  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்.
 
அதன் பின், அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அவர் அமர்ந்தார். அவரது அறையில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
 
அவர் இதுவரை எந்த அரசியல் மேடையிலும் பேசியதில்லை. அவரின் குரல் எப்படியிருக்கும் என யாருக்கும் தெரியாது. எனவே, அவரின் பேச்சை கேட்க ஏராளமான அதிமுகவின் அங்கு காத்திருந்தனர்.
 
அதன்பின் அலுவலகத்தின் மாடத்தில் இருக்கும் அறையில் இருந்து அவர்  கண்ணீர் மல்க பேசத் தொடங்கினார். அவர் பேசியதாவது:
 
"தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டச் செயலாளர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளே, அனைத்து உடன் பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
 
எத்தனையோ மேடைகளில் அம்ம பேசும் போது நான் உடன் சென்றுள்ளேன். ஆனால் இன்று அவரில்லாமல் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு தற்போது 62 வயது ஆகிறது. என்னுடைய 29 வயதில் இருந்து அவருடன் இருந்துள்ளேன். அவருடன் இல்லாத நாட்கள் மிகவும் குறைவு. அப்போதெல்லாம், அவருடன் இல்லை என்பதைவிட அவரின் கண்ணீர் குரலை என்னால் கேட்க முடியவில்லை என்பதுதான்  எனக்கு துயரமாக இருந்தது.
 
அதிமுக தொண்டர்களுக்கு எல்லாமுமாய் திகழ்ந்தவர் அம்மா. அவரை மீ்ட்டெடுக்க 75 நாட்கள் கடுமையாக போராடினோம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். ஆனாலும் அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். அவரின் மறைவு கற்பனையிலும் நினைக்காத ஒன்று. 
 
நல்ல உடல்நிலை தேறி வந்தநிலையில் அவரின் மரணம் நிகழ்ந்துவிட்டது. எனது வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தேவதையில்லாத அரசியல் மாடம் களையிழந்துவிட்டது. அவரின் அரசியல் பிரசேவம் பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தது. 
 
வருகிற ஜனவரி 17ம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம், அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அவர் எப்படி கட்சியை ராணுவ கட்டுபாட்டுடன் கட்சியை கொண்டு சென்றாரோ, அதில் இம்மியளவும் குறையாமல் கட்சியை வழி நடத்திச் செல்வோம்.
 
நம்மை இன்று விமர்சிப்பவரும் கூட நாளை நம்மை விரும்பி பின் தொடரும் அளவுக்கு ஒரு புனிதமான வாழ்க்கை நாம் வாழ்வோம். இன்னும் எவ்வளவு நாள் நான் வாழ்கின்றேனோ அதுவரை கட்சிக்காக உழைப்பேன். ஒன்றரை கோடி தொண்டர்களை என்னிடம் ஒப்படைத்துள்ளதாய் அம்மாவின் ஆன்மா என்னிடம் கூறுவது போல் இருக்கிறது. அம்மாவிற்கு இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.
 
நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அம்மா வழியில் பின்பற்றுவோம். என்னுடைய பணிகளில் எல்லாம் வெற்றி பெற உங்களின் ஒத்துழைப்பும், இறைவனின் ஆசியையும் வேண்டுகிறேன். 
 
எங்கள் அம்மா புகழை புவியே சொல்லும். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று முழக்கமிட்ட நம் அம்மவின் வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம்” என்று அவர் பேசினார். 
அடுத்த கட்டுரையில்