சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் - உறுதி செய்த பொன்னையன்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (13:37 IST)
அதிமுகவின் பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொன்னையன் இன்று தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிப்பினால் கடந்த  5ம் தேதி மரணமடைந்தார்.
 
இந்நிலையில், அவரின் மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  
 
அதன் எதிரொலியாக தமிழகத்தின் பட இடங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள், பேனர்கள் என அதிமுகவினர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ஆனால், ஒருபக்கம் பல அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு எதிராக மாநில மேலவை உறுப்பினர் சசிகலா,  நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் “அம்மாவுடன் 34 வருடங்கள் ஒரே வீட்டில் வசித்தவரும், அம்மாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவருமான சின்னம்மா சசிகலாதான் அடுத்த அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.


 

 
அவர்தான் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.  
 
பல விவகாரங்களில், அவரின் ஆலோசனைக் கேட்டு நடக்கும் படி அம்மாவே எங்களிடம் கூறியுள்ளார். எனவே அவர்தான் அடுத்த பொதுச்செயலாளராக வருவார்” என்று கூறினார்.
 
இதன்மூலம், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலாவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்