கட்சியை வழிநடத்தும் தகுதியை சசிகலா நிரூபிக்க வேண்டும் - நாஞ்சில் சம்பத் அதிரடி

செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:46 IST)
அதிமுக கட்சியை வழிநடத்தும் தகுதி தனக்கு இருக்கிறது என சசிகலா நிரூபிக்க வேண்டும் என அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் நாஞ்சில் சம்பத் அரசியலில் அதிகம் தலை காட்டவில்லை. மேலும், ஜெ.வின் மரணத்தில் தனக்கும் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து பரபரப்பை கிளப்பினார். அதன் பின் அவர் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், ஜெயலலிதா தனக்கு அளித்த இன்னோவா காரை கட்சியிடமே ஒப்படைத்து விட்டேன் என அவர் இன்று தெரிவித்துள்ளார்.  மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
நான் அதிமுகவிலிருந்து நான் இன்னும் விலகவில்லை. இத்தனை நாட்களாம் மௌனம் காத்தேன் என்றால் அதுதான் நான் ஜெயலலிதாவிற்கு செலுத்தும் அஞ்சலி. அவரின் மறைவிற்கு பின் அதிமுகவில் பெரிதாக இயக்க நடவடிக்கைகள் எதுவும் இல்லை. 
 
எனக்கு சசிகலா பற்றி தெரியாது. அவரை நான் சந்தித்தது இல்லை. அவரிடம் பேசியது. எனவே அவருக்கு கட்சியை வழிநடத்தும் தகுதி இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது. அவர்தான் அதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்