அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து சூடு பிடித்துவருகிறது. முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈசநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அது இடைத்தேர்தல். ஆனால் இந்த அரவக்குறிச்சியிலே நடக்கிற தேர்தல் இடைத்தேர்தல் அல்ல. பொதுத் தேர்தல் வந்த நேரத்திலே அரவக்குறிச்சியிலே நிறுத்தப்பட்ட தேர்தல். அதற்கு என்னென்ன காரணம் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த உண்மை. ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது இடைத் தேர்தல் இல்லாவிட்டாலும் எடை போடுகிற தேர்தல். 6 மாத காலமாக நடந்துகொண்டிருக்கின்ற ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை எடைப்போடக்கூடிய அதிலும் குறிப்பாக இந்த அரவக்குறிச்சி தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு கிடைத்திருக்கின்றது என சொன்னால் அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் பல அதிமுக அமைச்சர்களுடைய பினாமி ஒருவருடைய வீட்டில் ரெய்டு நடத்தியதில் கோடி, கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மட்டுமல்ல, பணத்தை எண்ணக்கூடிய மெஷின் மற்றும் பணத்தை எடுத்து செல்ல இருந்த ஆம்புலன்ஸ் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. ஆம்புலன்ஸ் என்பது உயிர் பாதுக்காக்க உதவுவது அதனால்தான் தலைவர் கலைஞர் உயிர் பாதுகாக்கும் திட்டமாக 108 திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஆக, அப்படிப்பட்ட ஆம்புலன்சை பயன்படுத்தி பணத்தை எடுத்து செல்ல அவர்கள் செய்த கொடுமைகள், அவைகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. அதனால் தான் தேர்தலும் நிறுத்தப்பட்டது. இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க தேர்தல் வந்திருக்கின்றது ஆகவே நீங்களெல்லாம் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆட்சி செயல்படாமல் ஆட்சி இருக்கிறது என்பதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லலாம், இரண்டு நாட்களுக்கு முன்பு ஏழை மக்கள், நடுத்தர மக்கள், வணிகப் பெருமக்கள், என வசதியோடு இருக்க கூடியவர்கள் எவ்வளவு அல்லல்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என அறிவித்தார். அது நல்ல அறிவிப்பு. நாங்கள் மறுக்கவில்லை.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு. அதனால் தான் தலைவர் கலைஞர் மிகத்தெளிவாக அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பே ஒரு அவகாசம் வழங்க வேண்டும், செல்வந்தர்களுக்கு அல்ல, நடுத்தர மக்களுக்காக, தொழில் செய்பவர்களுக்காக, வியாபாரம் செய்யும் மக்களுக்காக ஒரு அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தலைவர் மட்டுமல்ல எல்லோரும் சுட்டிக் காட்டிருக்கிறார்கள். இந்த அரவக்குறிச்சி பிரச்சாரத்திற்கு வந்த நேரத்தில் இரண்டு நாட்களாக நானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
நம் தமிழ்நாட்டிலேயே பிறந்தவர்கள், நம் மக்கள் நமக்கு இருக்க கூடிய பணத்தை கூட மாற்ற முடியாமல் அல்லல்படுகிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது என சொன்னால், நான் மத்திய அரசை குறை சொல்லவில்லை. மாநிலத்தில் இருக்கின்ற ஆட்சி அதை முறைப்படுத்தியிருக்க வேண்டாமா? ஏனெனில் இங்கு ஆட்சி என்பதே இல்லை என்று பேசினார்.