தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே மீண்டும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து இளங்கோவன் ராஜினாமா செய்தார்.
அதன்பின் அந்த பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று டெல்லி மேலிடம் ஆலோசித்து வந்தது. அதில், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், ப. சிதம்பரம் என பலரின் பேர் அடிபட்டது. கடைசியில் திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளங்கோவனின் ஆதரவாளர்கள் டெல்லிக்கு கடிதம் அனுப்பினர்.
மேலும், தமிழக காங்கிரசின் பெரும்பாலன மாவட்ட செயலாளர்கள் இளங்கோவனின் ஆதராவளர்கள் என்பதால், புதிதாக நியமிக்கப்படும் தலைவருக்கு அவர்களின் ஆதரவு கிடைக்குமா என்று காங்கிரஸ் மேலிடம் யோசித்து வந்தது.
இப்படி ஒரு மாதமாகியும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புதிய தலைவரை நியமித்தால் அவரால் சமாளிக்க முடியுமா என்று மேலிடம் ஆலோசிப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இளங்கோவனை மீண்டும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. இளங்கோவனை பொறுத்தவரை, தமிழகத்தில் கட்சியை நடத்தி செல்வதில் திறன் வாய்ந்தவர். எனவே அவரே மீண்டும் தமிழக காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.