அதிமுகவை சசிகலா கைப்பற்ற தொடங்கியதுமே ஆரம்பித்தது பிரச்சனை. ஓ.பி.எஸ் பதவி பறிப்பு, ஜெ.வின் சமாதியில் தியானம், அதிமுக இரு அணிகளாக பிரிவு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, கூவத்தூர் பிரச்சனை, சிறைக்கு சென்ற சசிகலா, அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கம், பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கியது, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து, அந்நிய செலாவாணி வழக்கு என பல்வேறு சிக்கலில் சிக்கியிருக்கிறார் தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்களை வருமான வரித்துறையினர் சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். எனவே, தேர்தல் கமிஷனின் சட்ட விதிப்படி தினகரனை பதவி நீக்கம் செய்வது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி நடந்தால் அடுத்த 6 வருடத்திற்கு தினகரன் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.
அதிமுக கட்சி விதிகளின்படி கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதன் அடிப்படையில் சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அவரின் பதவி போகும் போது, அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் பதவியும் பறிபோகும். இதன் மூலம் தினகரனின் அரசியல் எதிர்காலம் முடிவிற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
எனவே, அதை தடுக்கும் முயற்சியில் தினகரன் தரப்பு டெல்லி வாலாக்களிடம் மன்றாடிக் கொண்டிருப்பதாகவும், தினகரனின் முயற்சியை முறியடிக்க ஓ.பி.எஸ் அணி காய் நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.