காரில் இருந்த படியே ஓட்டு கேட்ட தீபா - கடுப்பான ஆர்.கே.நகர் மக்கள்

வியாழன், 30 மார்ச் 2017 (16:36 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நெருங்கி வருவதால், தற்போது அனைத்து கட்சிகளும் அங்கு மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்திலும், தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.  அதேபோல், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா படகு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
 
ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலாவின் தலைமையை பிடிக்காத பலர் தீபாவின் பக்கம் சென்றனர். அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி தீபா பேரவை தொடங்கினார். அதன் பின் ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தார். ஆனால், கட்சியில் உயர் பதவிகளை அவர் குறி வைத்ததை, ஓபிஎஸ் அணி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை வேட்பாளராக ஓபிஎஸ் அணி அறிவித்தது. 
 
எனவே தீபா தனியாகவே களம் இறங்கினார். ஆனால், அவரின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக இல்லை என்பதால், அவர் அரசியலில் நீடிக்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது முதல் முதலாக அவர் பேசிய பொதுக்கூட்டத்தில் எழுதி வைத்ததை பேசி விட்டு சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று விட்டார். இது அவரின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 
 
மேலும், இன்று அந்த பகுதியில் பிரச்சாரம் செய்த தீபா, தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் சென்ற போது, காரில் சென்ற படியே ஓட்டுக் கேட்டார். இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை கீழே இறங்கி வந்து ஓட்டு கேட்குமாறு வலியுறுத்தினர். எனவே, அவர் பிரச்சார ஜீப்பில் ஏறி நேருநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்