சேகர் ரெட்டியுடன் தொடர்பு ; ஓ.பி.எஸ் என்ன உத்தமரா? : சி.வி. சண்முகம் பாய்ச்சல்

செவ்வாய், 9 மே 2017 (13:46 IST)
பொதுப்பணித்துறை காண்டிராக்டராக இருந்த சேகர் ரெட்டியுடன், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸிற்கு இருக்கும் தொடர்பு பற்றி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
சேகர் ரெட்டி விட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு முக்கிய டைரி ஒன்று சிக்கியிருக்கிறது. அதில், அரசின் ஒப்பந்தங்களை பெறுவதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் என பலருக்கும் ரூ.300 கோடி அளவில் கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது என விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுபற்றிய விபரங்களை வருமான வரித்துறையினர் தமிழக அரசிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, சிலரின் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.


 

 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம் “தமிழகத்திற்கு சேகர் ரெட்டியை அறிமுகம் செய்து வைத்தவரே ஓ.பி.எஸ்தான், அந்த டைரியில் சிலரின் பெயர் இருப்பதாக கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறார்கள்.  ஓ.பி.எஸ்-ஸிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை?, திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை நியமித்ததே ஓ.பி.எஸ்தான், அவர்கள் இருவரும் அருகருகில் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் ஓ.பி.எஸ் என்ன பதில் கூறப்போகிறார்? என அவர் கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்