மரபீனி (Gene) மாற்றங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏழு நாடுகளைச் சேர்ந்த 24 அறிஞர்கள் 2003ல் தனி நிலை அறிவியற் குழுவை அமைத்தனர். அவர்கள் வெவ்வேறு அறிவியல் துறைகளில் புகழ்பெற்ற வல்லுநர்கள். எந்தவொரு அரசு/தனியார் நிறுவனத்தையும் சார்ந்திராமலும் தமது தனி நிலையலிருந்து பிறழாதும் இருப்பவர்களுமாவர்.
இக்குழுவை அவர்கள் அமைத்ததன் மூன்று முக்கிய நோக்கங்கள் பின்வருவன:
1. அரசுகள், கம்பனிகள் போன்றவற்றின் குறுகிய கால நோக்கங்களில் இருந்து விலகி நின்று பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் அறிவியலை வளர்த்தல்.
2. அறிவியல் வேட்கையிலும் முன்னேற்றத்திலும் ஈடுபடுகையில் நடுவுநிலை தவறாமலும் நாணயமாகவும் இருத்தல்.
உலகெங்கும் தற்சார்பை வளர்த்தல், ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், அமைதி நிலவச் செய்தல், அனைத்து மக்களின் வாழ்க்கையையும் முழுமைபெயச் செய்தல் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக அறிவியலை மேம்படுத்துதல், இவற்றுக்கு மாறான அறிவியல் முயற்சிகளை குறிப்பாகச் சூழலுக்கு எதிரானவையும் மனிதகுல அழிவுக்குப் பயன்படக்கூடியவையும் சமூக நீதிக்கெதிரானவையுமான அறிவியல் முயற்சிகளைப் புறந்தள்ளுதல்.
இந்தக்குழு மரபீனி மாற்றப் பயிர்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து பிரிட்டானிய அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை வெளிவந்த மிகக் குறுகிய காலத்திலேயே அது உலகெங்கும் பரவிவிட்டது. நீங்களும் www.indsp.org என்ற இணையதளத்திலிருநூது இக்குழுவின் முழு அறிக்கையையும் பெறலாம். அந்த அறிக்கையன் சுருக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.
மரபீனி மாற்றப் பயிர்களை ஒதுக்கச் சொல்லிப் பரிந்துரை செய்வதோடு நிற்காமல், உயர் தொழில்நுட்பம் இல்லாமலே எவ்வாறு உணவுப் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்பதையும் விவசாயிகள் தற்சார்பு உடையவர்களாக இருப்பது எப்படி என்பது பற்றியும் இந்த அறிஞர் குழு மேற்கோள்களுடன் விளக்கியுள்ளது. அவற்றின் சுருக்கத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.
மரபீனி மாற்றத்தை ஏன் தவிர்க்க வேண்டும்? மரபீனி மாற்றப் பயிர்கள் கீழ்க்கண்ட விதங்களில் நமக்குத் தீமைபயப்பனவாகும்.
1. மரபீனி மாற்றப் பயிர்களைப் பரப்ப விழைகின்றவர்கள் சொல்லுமளவு அப்பயிர்கள் நன்மை தரவில்லை. விளைச்சல் பெருகும், உயிர்க்கொல்லிகளின் தேவை குறையும், விவசாயிகளுக்கும் அரசுகளுக்கும் வருமானம் பெருகும் எனும் கூற்றுக்கள் லாபநோக்கில்லாதவர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.
2. மரபீனி மாற்ற பயிர்களால் விவசாயிகளுக்கு நேரும் பாதிப்புகள் அதிமாகிக்கொண்டே செல்கின்றன. இப்பயிர்கள் அனைத்திலும் வெளியிலிருந்து புகுத்தப்பட்ட வேற்றின மரபீனி நிலைப்பதில்லை. எனவே, ஒவ்வொருமுறை அப்பயிர்களைப் பயிரிடும் போதும் சில/பல பயிர்களாவது தமது மரபு மாறாமல் இருக்கின்றன. இதனை 1994லேயே இரண்டு அறிவியலார் தெரியப்படுத்தியுள்ள போதிலும், மரபீனி மாற்ற விதை உற்பத்தி நிறுவனங்களும் மரபீனி மாற்ற பயிர்களை மேன்மேலும் பரவலாக்க விரும்பும் மற்றோரும் இதை மூடி மறைக்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்.
அதேசமயம், சில பயிர்களும் களைச் செடிகளும் ஒன்றும் மேற்பட்ட நச்சுக்களைத் தாங்கக்கூடிய மரபீனி மாற்றங்களைப் பெற்றுவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, மரபீனி மாற்ற சூரியகாந்தியில் புகுத்தப்பட்ட பீட்டீ மரபீனிகள் தரம் குறைந்த (தானாக விளைந்த) சூரியகாந்தியிலும் கூட புகுந்திருந்தது என்பது ஒரு ஆய்வில் தெரியவந்தது. எப்படிப்பட்ட செடிகளையும் கூட அழிப்பதற்குக் கடினமான களைகளாகத்தான் கருத வேண்டும். அதைப்போலவே, அமெரிகிகாவிலுள்ள டென்னெஸ்ஸி மாநிலத்தில் பருத்தி பயிரிடப்பட்ட பரப்பில் 36 சதத்தில் (அதாவது சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில்) மேர்ஸ்டெய்ல் எனும் களைச் செடி, ரவுண்டப் எனப்படும் (பரவலாகப் பயன்படுத்தப்படும்) களைக் கொல்லிக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுவிட்டது.
ரவுண்டப்பில் உள்ள முக்கிய வேதிப்பொருள் க்லை·போசேட் எனும் மிகக்கொடிய நஞ்சாகும். இதைத் தாங்கி வளரும் மரபீனி மாற்ற பயிர்களைப் பயிரிடுவதன்மூலம் இவைபோன்ற நச்சுக்களைப் பயன்படுத்தி களைகளை எளிதில் அழிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், க்லை·போசேட் உள்ளிட்ட மூன்று வீரியமான களைக் கொல்லிகளை எதிர்த்து வளரக்கூடிய களைகளை அழிக்க அட்ரசீன் எனும் மிகக்கொடிய நச்சைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் அமெரிக்க விவசாயிகளுக்கு நேர்ந்தது.
களைகள் மட்டுமின்றி, பயிர்களைத் தாக்கும் புழு பூச்சிகளும் பீட்டி முதலியற்றுக்கு எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்கின்றன. இக்காரணங்களால் விவசாயிகள் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.
மரபீனி மாற்றம் என்னென்ன பின்/பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் பற்றிய நமது அறிவியலறிவைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால், 'கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு' என்பதுதான் சரியாகும். வெளியிலிருந்து ஒரு தாவரத்துக்குள் (அல்லது வேறு உயிர்ப் பொருளுக்குள்) புகுத்தப்பட்ட மரபீனி எந்தெந்த வகைகளில் அத்தாவரத்துடன் இணையும்/இணையாது என்பது பற்றி நாம் அறிந்திருப்பது மிகவும் குறைவே என்று சென்ற ஆண்டு வெளியான ஒரு ஆழமான அறிவியல் கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளனர் சில ஆராய்ச்சியாளர்கள். எனவே, நாம் அபாயகரமான, புரியாப் புதிரான, ஒரு ஆற்றலுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது திண்ணம்.
3. மிகப் பரவலான அளவில், கட்டுக்கடங்காமல் (அதாவது, மரபீனி மாற்ற தொழில்நுட்ப நிபுணர்களை திட்டமிடாத வகைகளில் மரபீனிகள் பரவிவிட்டன. எடுத்துக்காட்டாக, மெக்சிக்கோவில் 1998 முதலே மரபீனி மாற்ற பயிர்கள் தடை செய்யப்பட்டிருந்தும் பாரம்பரிய மக்காச்சோள இனங்களுடன் மரபீனி மாற்ற மக்காச்சோள மரபீனிகள் கலந்துவிட்டன. கனடாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெருமளவில் நேர்ந்துள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வுகள் உலக மக்கள் அனைவரின் உணவு ஆதாரங்களையே பாதிப்பனவாகும்.
4. மரபீனி மாற்ற பயிர்கள் நமது நலனுக்கு எதிரானவை அல்ல என்று அவற்றைப் பரப்புவோர் இதுவரை நிரூபிக்கவில்லை. மரபீனி மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் தயாரத்த உணவை உண்ட எலிகளின் வயிற்றில் அபரிமித வளர்ச்சிக் காரணிகள் இருப்பதுபோன்ற நிகழ்வு ஒரு ஆய்வில் காணப்பட்டது. அது புதிதாகப் புகுத்தப்பட்ட மரபீனிகளால் நேர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே வேற்று மரபீனியைப் புகுத்தும் செயலே கூட எலிகளின் உடலில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திருக்கக்கூடும். இத்தகைய அபாயம் பொதுவாகவே அனைத்து மரபீனி மாற்ற பயிர்களிலும் ஒளிந்திருக்கலாம் என்றே கொள்ளவேண்டும்.
5. தாவரங்களில் நுழைக்கப்படும் பல வேறு மரபீனிகள் எந்தப் புழு/பூச்சியினங்களுக்கு எதிரானவையோ அவற்றை மட்டுமின்றி வேறு உயிரினங்களையும் பாதிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள மரபீனி மாற்ற பயிர்களில் கால் பங்குப் பயிர்களில் நுழைக்கப்பட்டுள்ள பீட்டி புரதங்கள் இவ்வாறு செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நமக்கு உணவாகப் பயன்படும் தாவரங்களில் நம் நோய்களுக்கு மருந்து தயாரிப்பதற்கென வேற்றின மரபீனிகள் புகுத்தப்பட்டுகின்றன. அத்தகைய மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
எடுத்துக்காட்டாக, சைட்டோக்கைன் (உடலின் எதிர்ப்புத் திறனைக் குறைத்தல், நோய் உண்டாக ஏதுவான சூழ்நிலையை உருவாக்குதல், மைய நரம்பு மண்டலத்தைப் பாதித்தல் முதலிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது), இன்ட்டர்·பெரான் ஆல்·பா (பைத்தியம், நரம்பு நோய்கள், அறியும் திறனைக் குறைத்தல்), எய்ட்ஸ் வைரசின் ஒரு அங்கமான ஜி.பி.120 மரபீனி, இன்னபிற மரபீனிகள் தாவரங்களில் புகுத்தப்படுகின்றன. நோயில்லாதவர்களும் அப்படிப்பட்ட மரபீனி மாற்றப் பயிர்களை உட்கொண்டு பக்கவிளைவுகளுக்கு ஆளாகவேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்படவேண்டும்?! இவற்றை உயிர்களில் விதைக்கப்படும் வெடிகுண்டுகளாகவே கருதவேண்டும்.