மரபீனி மாற்றமும் தற்சார்பு வேளாண்மையும்

திங்கள், 25 அக்டோபர் 2010 (17:37 IST)
வேளாண்மைக்கு வந்துள்ள ஆபத்து தொடர்ச்சி...

தற்சார்பு வேளாண்மையின் நண்மைகள்:

3. வேதிப் பொருட்களைப் பயன்படுத்தாததால் பலவிதங்களில் சூழல் தூய்மை பெறுகிறது. வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களைத் தோண்டுதல், அந்த மூலப்பொருட்களை ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தல், வேதிப் பொருட்களை உருவாக்குதல், அவற்றை விவசாயிகளுக்குக் கொண்டுசெல்லுதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுமே சூழலுக்கு மிகுந்த நாசம் விளைவிப்பவையாகும். மேலும், வேதியுரங்களிலுள்ள வெடியகி (நைட்ரஜன்) முதலானவை நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. உயிர்மநேய வேளாண்மை எனப்படும் தற்சார்பு வேளாண்மை செய்வதால் இந்தத் தீங்குகள் பெருமளவு குறைகின்றன. இதுமட்டுமின்றி, நீர் தாரளமாக நிலத்தினுள் இறங்குவதால் மண் அரிப்பும் மழை நீர் வீணாவதும் குறைகிறது.

4. உயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்வதால் புழு பூச்சிகளின் தொல்லை அதிகரிப்பதில்லை. மாறாக, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து உயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்துவதைப் பெருமளவு குறைத்துள்ளனர். இவ்விதமாக வியட்நாமில் 3.4 மடங்கு, இலங்கையில் 5.8 மடங்கும், இந்தோனேஷியாவில் 3 மடங்கு உயிர்க்கொல்லிகளைக் குறைத்துள்ளனர். கலி·போர்னியாவில் உயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தாமலே தங்காளியில் விளைச்சல் குறையாமல் பார்த்துக்கொண்டனர். இந்த முறைகளைப் பயன்படுத்துவதால் இயற்கையாக நிகழ்ந்துவரும் உயிர் சுழற்சி முறை மீண்டும் தங்குதடையின்றி நடைபெறுகின்றது.

வளரும் நாடுகளில் 36 லட்சம் எக்டேர் பரப்பில் தற்சார்பு வேளாண்மையில் ஈடுபட்ட 44 லட்சம் குடும்பங்கள் சராசரியாக குடும்பம் ஒன்றுக்கு 1710 கிலோ உணவு தானியங்களை அதிகப்படியாக விளைவித்தனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியபோது அவர்கள் கண்ட விளைச்சலைவிட 73 விழுக்காடு அதிகமாகும்.

5. ஒரு பயிரைத் தனியாகப் பயிரிடாமல் பல பயிர் வகைகளைக் கலந்து பயிரிடுவதால் விளைச்சல் அதிகரித்தல், நோய்/பூச்சி தாக்குதல் குறைதல், சூழலில் உயிர்ப் பன்மயம் அழியாமல் காத்தல், மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படுதல் முதலிய மிக முக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன.

6. தற்சார்பு வேளாண்மையில் எரிசக்தி உள்ளிட்ட ஆற்றல்கள் மிகக்குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. மனித ஆற்றலும் விலங்குகளின் ஆற்றலுமே பெரிதளவு பயன்படுத்தப்படுகின்றன. அதனாலும் சூழல் கேடுகள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன.

7. உயிர்மநேய விவசாயத்தில் இடுபொருள் செலவுகள் வேதியியல் வேளாண்மையில் ஆவதைவிடக் குறைவு. அதகால், ஒரு குறிப்பிட்ட பயிரின் விளைச்சல் வேதிப்பொருள் பயன்படுத்தும் விவசாயி எடுக்கும் விளைச்சலைவிடச் சற்றுக் குறைவாகவே இருந்துவிட்டாலும், லாபம் அதிகமாகவே இருக்கும். மேலும், இந்த முறையில் ஒரேயொரு பயிரை மட்டும் தனியாகப் பயிரிடாமல் வெவ்வேறு ஊடுபயிர்களையும் பயிரிடுவர். அதனால், ஒரு பயிர் சரியான விளைச்சல் தராவிட்டாலோ அல்லது அந்தப் பயிருக்குச் சரியான விலை கிடைக்காவிட்டாலோ விவசாயத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு இராது.

இந்நிலையே நம் பகுதிகளில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் மிக அண்மைக்காலம் வரை நிலவிவந்தது என்கிறார் கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த திரு சீனிவாசன் என்னும் பெரியவர். அவர் 1956ல் கோவில்பட்டியில் வேளாண் துறையில் வேலை பார்த்தவர். அப்பகுதிகளில் கருங்கண்ணி எனும் நாட்டு இனப்பருத்தியைத்தான் முன்பு விளைவிப்பார்களாம். அதன் வேர்கள் ஆழமாகச் செல்வனவாதலால் அவ்வினப் பருத்திச் செடிகள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியன. ஒரு பருவத்தில் மழை மிகக்குறைந்த அளவே கிடைத்தால் விளைச்சல் குறைந்தாலும் (அல்லது விளைச்சலே இல்லாவிட்டாலும்) அடுத்த பருவம் வரை செடிகள் காயாமல் இருக்குமாம். இதற்கு மாறாக, கம்போடியா பருத்தி எனும் வெளிநாட்டு இனப் பருத்திச் செடியின் வேர்கள் ஆழமாகச் செல்லாததால் அது வறட்சியைத் தாங்காத இனமாகும். (ஆனால் நூற்புத் தொழில் ஆலைமயமானதன் பின் நீண்ட இழை தரும் பருத்தியினங்கள் தேவைப்பட்டதால் பாரம்பரிய இனங்கள் படிப்படியாக வாக்கிழந்தன. ஆலைத்தொழில் பரவலானது ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் தற்சார்பைக் குலைக்கும் செயலே என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது).

கருங்கண்ணிப் பருத்தி விதைக்கும்போது ஊடு பயிர்களாக உளுந்து, எள்/ஆமணக்கு, தினை, நிலக்கடலை ஆகியவற்றை விதைப்பார்களாம்.

விதைக்கும் வரிசை முறை வருமாறு:

1. முதலில் ஆறுக்கு ஒன்று என்ற அளவில் சால்களில் உளுந்து.

2. பின்னர் ஒரு வரிசை இடைவெளிவிட்டு கடலை.

3. பொழிகளில் எள் அல்லது ஆமணக்கு.

4. இறுதியாகப் பருத்தியுடன் தினை.

இவற்றை கடலை, உளுந்து, எள், தினை, பருத்தி என்ற முறையில் அறுவடை செய்வார்கள்

ஆமணக்கை அவ்வவ்போது (காய்கள் முதிர முதிர) அறுவடை செய்வார்கள். தின்பண்டங்கள் செய்தல் உள்ளிட்ட தமது வீட்டுத் தேவைக்குப் போக மிஞ்சிய கடலையை விற்றுவிடுவர். எள்ளும் ஆமணக்கும் வீட்டுக்குத் தேவையான எண்ணெயைத் தரும். எள் பயிரைக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். உளுந்தும் கடலையுமே விவசாயச் செலவு முழுவதையும் ஈடுகட்டிவிடும். பருத்தியிலும் மற்ற விளை பொருட்களிலும் வரும் வருமானம் உபரியானது. அதனால் தகுந்த விலை கிடைக்கும் வரை விற்பனையை ஓரளவுக்குத் தள்ளிப் போடமுடிந்தது. மேலும், அந்தக் காலத்தில் விவசாயிகளுக்கு விளைபொருட்களைக் கெடாமல் பல மாதங்களுக்கு வைத்திருக்கும் முறைகள் தெரிந்திருந்தன. இயற்கை வேளாண்மையில் விளையும் பொருட்கள் வேதியியல் வேளாண்மையில் விளையும் பொருட்களைவிட அதிகம் வைப்புத்திறன் படைத்தவையாக இருந்ததுவும் விளைபொருட்களைத் தகுந்த விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்க உதவிற்று.

8. தற்சார்பு வேளாண்மையில் வெளியிடு பொருட்கள் குறைந்து உள்ளூர் பொருட்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் அதிகம் நடைபெறுவதால் கிராமப் பொருளாதாரம் மேம்படுவதுடன் கிராம மக்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. அதனால் அவர்களுடைய வாழ்க்கை மேம்படுகிறது. இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு உள்ளூரில் செலவிடப்படும் ஒவ்வொரு பிரிட்டிஷ் பவுன்டுக்கும் 2.60 பவுன்டு உள்ளூர்ப் பொருளாதாரத்தில் புழங்குகிறது. ஆனால், அதே ஒரு பவுன்டை ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் செலவழித்தால் 1.40 பவுன்டு மட்டுமே உள்ளூர்ப் பொருளாதாரத்தில் புழங்குகிறது. இது பிரிட்டனில் நடந்த ஓர் ஆய்வில் தெரியவந்தது.

9. வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் விளையும் உணவுப் பொருட்களில் (வேதியியல் வேளாண்மையில் விளையும் பொருட்களைக் காட்டிலும்) நமக்கு நலம்தரும் சத்துக்கள் அதிகமாகவும் தீமை பயப்பவை குறைவாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சூழலின் மீது மனிதர் நடத்தும் பல்வேறு தாக்குதல்களில் விவசாயிகள் பயன்படுத்தும் வேதிப்பொருட்களும் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. இவற்றினால் விளையும் தீமைகளைப் பற்றிப் பல ஆண்டுகள் கடந்துதான், அதுவும் மெதுவாக, நாம் அறிந்து வருகிறோம். இந்நிலை மேன்மேலும் தொடராமலிருக்க வேண்டுமானால் நாம் உயர்தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மையை மீட்டெடுப்பதுவே நமது சந்ததியாரின் எதிர்காலம் அழிவின் விளிம்பிலிருந்து மீள்வதற்கு இன்றியமையாத வழியாகும்.

அரசு வேதியுரக் கம்பனிகளுக்கு மிக அதிக அளவில் மாணியம் தருகிறது. வேதிப்பொருட்கள் உணவிலும் சூழலிலும் மிகுந்து வருவதால் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் நோய்கள் வேகமாகப் பெருகி வருகின்றன. அவற்றைக் குணப்படுத்துவதற்காக நாமும் அரசும் செய்யும் செலவும் அதிகரிக்கிறது. அரசு செய்யும் செலவுகளும் வரிச்சுமையாக நம் தலையில்தான் இறங்குமல்லவா!

ந‌ன்‌றி: தாளா‌ண்ம
அற‌வி வெ‌ளி‌யீ‌ட்டக‌ம்

வெப்துனியாவைப் படிக்கவும்