இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 12 மில்லியன் டன் ஆக உயரும்!

திங்கள், 22 நவம்பர் 2010 (14:56 IST)
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 7 விழுக்காடு வரை அதிகரித்து வருகிறது என்றும், 2015ஆம் ஆண்டில் நமது நாட்டின் இறக்குமதி 12 மில்லியன் டன்களாக உயரும் என்றும் சமையல் எண்ணெய் விற்பனையாளர்கள் அமைப்பான சால்வெண்ட் எக்டிராக்டர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

2009-10ஆம் ஆண்டில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 8.8 மில்லியன் டன்னாக இருந்தது என்றும், இது கடந்த ஆண்டு இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 7.3 விழுக்காடு உயர்வாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ள நிறுவனமான அதானி வில்மரின் மேலாண்மை இயக்குனர் பிரணவ் அதானி, இந்த அளவிற்கு இறக்குமதி அதிகரித்து வந்தால் 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 12 மில்லியன் டன்னாக உயரும் என்று கூறியுள்ளார்.

பனை எண்ணெய் இறக்குமதிக்கு நிகராக சோயா எண்ணெய் இறக்குமதி ஆகிறது என்று கூறியுள்ள அதானி, இறக்குமதி விலை 12 முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கும் நிலை இருப்பதால், அடுத்த நான்கைந்து மாதங்களில் சமையல் எண்ணெய் விலை உயரும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் எண்ணெய் வித்துகள் உற்பத்தி இந்த ஆண்டில் 3.2 மில்லியன் டன்கள் அதிகரித்து 35 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்றும், இதற்கு பருவமழை பரவலாக பெய்ததே காரணம் என்றும் அதானி கூறியுள்ளார்.

இந்தியாவின் சமையல் எண்ணெய் சந்தையில் நிலவும் பற்றாக்குறையை அடுத்து, அதானி வில்மர் நிறுவனம் இந்தோனேஷியா, மலேசிய நாடுகளில் பனைத் தோட்டங்களை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்