நெல்லூர் முதல் மசூலிப்பட்டினம் வரை மழை பெய்யும்

வெள்ளி, 26 நவம்பர் 2010 (14:32 IST)
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் வட மேற்குப் பருவமழை, இன்றும் நாளையும் ஆந்திரத்தின் நெல்லூர் முதல் மசூலிப்பட்டினம் வரை பலத்த மழையை கொடுக்கும் என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமிழ்.வெப்துனியா.காம் அனுப்பியுள்ள அறிக்கை வருமாறு:

“வெப்துனியாவிற்கு கடந்த 22ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் பாம்பனை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனால் நவம்பர் 25 முதல் 30ஆம் தேதி வரை திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், கரூர், ஈரோடு, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருந்தேன். அதன்படி, 22ஆம் தேதி இரவு முதல் இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர், ஓங்கோல், மசூலிப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 26 அல்லது 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளத்திலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும்.

நிலநடுக்கத் தேதி கணிப்பின்படி 28ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது” என்று மழைராஜ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்