நிதி நிலை 2012: விவசாய கடன்களுக்கு வட்டி மானியம்?

வியாழன், 17 பிப்ரவரி 2011 (17:52 IST)
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 28ஆம் தேதி சமர்பிக்கப்போகும் 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், விவசாயக் கடன்களுக்கு மானியம் அளிப்பதன் மூலம் மேலும் வட்டியை குறைக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய உற்பத்திப் பெருக்கம் தொடர்பான பணிக்குழு இதற்கான பரிந்துரை செய்துள்ளது. ஹரியானா முதலவர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான இந்தப் பணிக்குழு, வேளாண்மைக்கு 4% கடனளிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்துள்ளதாக்க் கூறப்படுகிறது. விவசாயத்திற்கு அளிக்கும் கடன்களுக்கு குறைந்த வட்டியில் கடனளிப்பதனால் வங்கிகளுக்கு ஆகும் இழப்பீட்டை வட்டி மானியமாக அரசு வழங்கிட வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளதென கூறப்படுகிறது.

தற்போது வேளாண் கடன்களுக்கு 7% வட்டி வசூலிக்கப்படுகிறது. இது வங்கிகள் அளிக்கும் குறைந்த பட்ச வட்டி விகிதத்தை விட 3 விழுக்காடு குறைவாகும். இந்த 3% மானியமாக வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கிவிடுகிறது. இதுமட்டுமின்றி, வாங்கிய கடனை குறித்த நேரத்தில் செலுத்தும் போது 2 விழுக்காடு வட்டித் தள்ளுபடி அளிக்கிறது. இதனையும் மானியமாக வங்கிகளுக்கு அரசு வழங்குகிறது.

மத்திய வேளாண் அமைச்சகம் ஒரு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, மழை, வெள்ளம் காரணமாக குறித்த நேரத்தில் கடன் திரும்பச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு 2 விழுக்காடு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அந்த பரிந்துரையாகும்.

தொழிலக உற்பத்தி சரிவு, ஏற்றுமதி சருக்கல், பொருளாதார பின்னடைவு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக தள்ளாடிய நிலையில், விவசாய உற்பத்தியே உள்நாட்டு உற்பத்தியை தூக்கி நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்