காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை
வியாழன், 28 அக்டோபர் 2010 (20:14 IST)
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
காவிரி பிரச்சனைத் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடக அரசின் இந்த முடிவு காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிராகரிப்பதோடு, டெல்டா மாவட்ட விவசாயத்தையும் மக்களது வாழ்வையும் நெருக்கடியில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
“தமிழக அரசு ஆரம்ப முதலே தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய அளவு தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆன பின்னரும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனு மூன்றாண்டுகளாக அனுமதி நிலையிலேயே உள்ளது. தமிழக அரசின் இத்தகைய அலட்சியப் போக்கே டெல்டா விவசாயிகளை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கொண்டுள்ளது. முறை வைத்து பாசன் என்ற பெயரால் போதுமான அளவு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மேட்டூரில் தற்போது உள்ள தண்ணீரைக் கொண்டு அடுத்த 15 தினங்களுக்கு மட்டுமே பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியையும் காப்பாற்ற முடியாமல் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
எனவே, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெறத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திட அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களது கூட்டத்தை அவசரமாகக் கூட்டி விவாதிக்க வேண்டுமென தமிழக முதல்வரை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.