எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை - தலைமைக்கு தமிழிசை பரிந்துரை
ஞாயிறு, 13 மே 2018 (15:03 IST)
எஸ்.வி சேகர் மீது ஒடுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார்.
மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை கைது செய்ய தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அவரின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்தது.
அதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது.
கடந்த 10 ஆம் தேதி அவரது முன் ஜாமீன் மனுவை மீண்டும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளோம். எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தெரிவித்தார்.