பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவித்ததுமே குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பமாக செல்ல பலரும் விரும்புவது மலை பிரதேசங்களைதான். கோடை வெயிலில் இருந்து தப்பித்து மலைப்பகுதிகளின் சில்லென்ற சாரலில் உலா வருவது மனதுக்கு இதமளிக்கும்
மலைப்பிரதேச சுற்றுலா என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவு வருவது ஊட்டி, கொடைக்கானல்தான். ஆனால் பொதுவாகவே ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் தங்கும் விடுதி தொடங்கி சுற்றுலா பகுதிகளை சென்று பார்ப்பது வரை பெரும் நெரிசல் மிகுந்த சூழல் நிலவும்.
அவற்றை தவிர்த்து கூட்டமற்ற அமைதியான இயற்கை கொஞ்சும் மலைப்பகுதிகளில் ஓய்வாக உங்கள் நேரத்தை நீங்கள் கழிக்க விரும்பினால் ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகரான சில மலைவாசஸ்தலங்கள் உங்களுக்காக
ஏலகிரி
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் ஏலகிரி என்ற அழகிய மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,110.6 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது கண்களைக் கவரும் பழத்தோட்டங்கள், ரோஜா தோட்டங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்கு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
குன்னூர்
ஊட்டிக்கு அருகே உள்ள ஊரான குன்னூர் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்த அழகு மிகுந்த பகுதியாகும். இங்கு பூங்காக்கள், டால்பின் நோஸ் வியூ பாயிண்ட் என பல இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். அங்கிருந்து 1 மணி நேர பயணத் தொலைவிலேயே ஊட்டி, கோத்தகிரி ஆகிய ஊர்களும் உள்ளதால் தங்கி செல்வதற்கும் வசதியான ஊர்
வால்பாறை
தமிழ்நாட்டின் ஆனைமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை ஒரு தனித்துவமான மற்றும் அமைதியான இடமாக உள்ளது. அதிகம் அறியப்படாத இந்த மலைவாசஸ்தலம் பசுமையான தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், மூடுபனி பள்ளத்தாக்குகள் மற்றும் ஏராளமான வனவிலங்குகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் இயற்கை அழகை கூட்டி வரும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் சோலையார் அணை பகுதியும் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா பகுதிகள்.
மேகமலை
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேகமலை பெயருக்கேற்றவாறே மேகங்கள் சூழ்ந்த அழகிய மலைவாசஸ்தலம். அமைதியான இயற்கையான இடத்தில் பொழுதை கழிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடம். இங்குள்ள மேகமலை நீர்வீழ்ச்சியும், அணைகளும் உடலுக்கு மனதுக்கும் குளிர்ச்சி அளிப்பவை. இங்குள்ள மங்களதேவி கோவில், மகாராஜா மேடு மற்றும் முருகன் கோவில் ஆகியவை தவறவிடக்கூடாத சுற்றுலா பகுதிகள்
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு மிக அழகான விலை குறைவாக சுற்றி பார்க்க கூடிய மலைவாசஸ்தலம் ஆகும். ஏரிகள் நிறைந்த காடு என்பது பின்னாளில் ஏற்காடு என்றானதாக சொல்வாரும் உண்டு. அதற்கேற்ப இங்கு அழகிய ஏரிகள் பலவற்றை காண முடியும். இயற்கையை விரும்புபவர்கள், மலையேற்றம் செய்வோர் மற்றும் சாகசப் பயணிகளுக்கு, ஏற்காடு ஒரு சொர்க்கமாக விளங்குகிறது, மேலும் பல்வேறு மலையேற்றப் பயணங்கள் உங்களை கிள்ளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் டிப்பரரி பாயின்ட் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தமிழ்நாட்டின் மிக அழகான மழை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். மலைத்தொடராக அல்லாமல் ஒற்றையாய் நிற்கும் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 4,265 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அரபளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவை மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய அழகிய பகுதிகளாகும்.