தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் விடுமுறையை கொண்டாட பல சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர். சுற்றுலா செல்ல மக்களின் முதல் தேர்வாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களாகும்.
ஊட்டியில் கோடை சீசன் காரணமாக நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த விலையில் மக்கள் பயணிக்கவும் சுற்றுலா தளங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் ஊட்டியின் முக்கியமான சுற்றுலா தளங்களான தண்டர் வேர்ல்ட், படகு இல்லம், பொட்டானிக்கல் கார்டன், தொட்டபெட்டா சிகரம், பென்ஸ் மார்க் டீ மியூசியம், ரோஸ் பார்க் ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கும். நாள் முழுவதும் இந்த சேவை இருக்கும்.
இந்த பேருந்துகளில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.100ம், சிறியவர்களுக்கு ரூ.50ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்பவர்கள் ஒரு பேருந்தில் சென்று அப்பகுதியில் நேரத்தை கழித்த பின் அடுத்து அந்த பக்கமாக செல்லும் எந்த சிறப்பு பேருந்தில் வேண்டுமானாலும் ஏறி அடுத்த சுற்றுலா பகுதிக்கு செல்லலாம். இது சுற்றுலா செலவை கணிசமாக குறைப்பதுடன், உதவியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.